செய்திகள்

மணிப்பூர் வன்முறை பற்றி ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை: அமித்ஷா அறிவிப்பு

ஜெ.ராகவன்

மணிப்பூர் மாநிலத்தில் நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் 3 ஆம் தேதியிலிருந்து மணிப்பூர் இனமோதல்களை சந்தித்து வருகிறது. மாநிலத்தில் 53 சதவீதம் மக்கள்தொகை கொண்ட மெய்டிஸ் சமூகத்தினருக்கு பழங்குடியினர் அந்தஸ்து அளிப்பதற்கு பழங்குடியினத்தைச் சேர்ந்த குக்கி வகுப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

வன்முறை, கலவரத்துக்கு இதுவரை 79 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 200-க்கும் மேலானவர்கள் காயமடைந்தனர். வன்முறை தாக்குதல் மற்றும் கலவரத்தால் பாதிக்கப்பட்ட 30,000-த்துக்கும் மேலானவர்கள் வேறு இடங்களில் பாதுகாப்புதேடி தஞ்சமடைந்துள்ளனர்.

இதனிடையே மணிப்பூரில் கடந்த நான்கு நாட்களில் எடுக்கப்பட்ட கூட்டு நடவடிக்கையில் 40 குக்கி தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக முதல்வர் பீரேன் சிங் தெரிவித்துள்ளார். ஆனாலும் புதிதாக ஏற்பட்ட வன்முறைக்கு 5 பேர் பலியானார்கள். தவிர 12 பேர் காயமடைந்தனர். மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் மற்றும் தீவிரவாதிகள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் அங்கு அமைதி ஏற்படுத்தும் முகமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூர் வந்தார். முதல்வர் பீரேன் சிங், மாநில ஆளுநர் மற்றும் பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும்

கடந்த மூன்று நாட்களாக வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மணிப்பூரில் கடந்த மூன்று நாட்களாக பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட குக்கி, மெய்டீஸ் இனக் குழுக்களின் பிரதிநிதிகளை சந்தித்தேன். அத்துடன் அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர் ஆகியோரை சந்தித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

மணிப்பூர் இனக்கலவரம் தொடர்பாக விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்படும். வன்முறை தொடர்பான 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றை சிபிஐ விசாரிக்கும். இந்த விசாரணை நடுநிலையாக இருக்கும்.

மேலும் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட ஆளுநர் வழிகாட்டுதலின்படி செயல்படக் கூடிய அமைதிக் குழு ஒன்று அமைக்கப்படும்.

மணிப்பூர் கலவரத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும். இதில் ரூ.5 லட்சம் மாநில பங்களிப்பாகவும், ரூ.5 லட்சம் மத்திய பங்களிப்பாகவும் இருக்கும்.

மணிப்பூரில் எதிர்காலத்தில் இதுபோன்ற வன்முறைகள் நிகழாத வண்ணம் உறுதி செய்யும்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

ஹைப்பர் டென்ஷனை கட்டுப்படுத்தும் 11 மூலிகைகள்!

ஆழ்வார்திருநகரியும் ஒன்பது கருட சேவையும் பற்றி தெரியுமா?

கோடைக்கால உடல் பிரச்னைகளை குணமாக்கும் பழம்பாசி சஞ்சீவி மூலிகை!

துரோகம் செய்யும் உறவுகளை சமாளிப்பது எப்படி?

இருமுனைக் கோளாறு நோயின் அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT