பஞ்சாபில் தப்பியோடிய காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங்கை கைது செய்ய போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். காலிஸ்தான் ஆதரவாளர்களால் வன்முறை ஏற்படாமல் தடுக்க பாதுகாப்பு பணியில் அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
பஞ்சாபில் முதல்வர் பகவத்சிங் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு சீக்கியர்களுக்கு தனி நாடு கோரி காலிஸ்தான் அமைப்பினர் போராட்டங்கள் நடத்தி வந்தனர். இந்த போராட்டங்கள் 1984 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ராணுவ நடவடிக்கை மூலம் ஒடுக்கப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் காலிஸ்தான் ஆதரவு போராட்டங்கள் தலைதூக்க ஆரம்பித்துள்ளன. கனடா உள்ளிட்ட நாடுகளில் சீக்கிய அமைப்புகள் காலிஸ்தானுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகின்றன.
பஞ்சாபில் “வாரிஸ் பஞ்சாப் தே” என்ற அமைப்பு மதப்பிரசாரங்களில் ஈடுபட்டு வந்தது. இந்த அமைப்பைச் சேர்ந்தவரும் நடிருமான தீப் சித்து கடந்த ஆண்டு சாலை விபத்தில் உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்டிஸிலிருந்து இந்தியா வந்த அம்ரித்பால் சிங் இந்த அமைப்பின் தலைவர் பொறுப்பை ஏற்றார்.
வாரிஸ் பஞ்சாப் தே என்ற காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்புக்குத் தலைமைதாங்கி வந்த அம்ரித்பால் சிங், இளைஞர்கள் பலரை ஆயுதம் ஏந்தி போராடத் தூண்டியதாகவும், பல்வேறு பிரிவுகளிடையே பிரிவினையைத் தூண்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.
முக்த்ஸார் மாவட்டத்தில் பேரணி நடத்த அம்ரித்பால் சிங் திட்டமிட்டிருந்த நிலையில் அதை தடுத்து நிறுத்திய போலீஸார், அவரின் ஆதரவாளர்கள் 78 பேரை சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் அந்த அமைப்புக்குச் சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் ஆயுதங்கள், துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். அம்ரித்பால் சிங்கை போலீஸார் கைது செய்ய முயன்ற நிலையில் அவர் காரில் தப்பிச்சென்றார். போலீஸாரில் மற்றொரு காரில் அவரை துரத்திச் சென்றும் பிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் அம்ரித்பால் சிங்குக்கு நெருக்கமான நான்குபேரை போலீஸார் கைது செய்து அஸ்ஸாம் மாநிலம் திப்ரூகர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். ஆனால், இதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. எனினும் இந்த விவகாரத்தில் பஞ்சாப் காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த் விஸ்வ சர்ம தெரிவித்துள்ளார்.
அமிருதசரஸ் அருகே அம்ரித்பால் சிங்கின் சொந்த கிராமத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வன்முறை சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.
மதநல்லிணக்கத்தை சீர்குலைக்க அனுமதிக்க முடியாது என்று தெரிவித்த ஜலந்தர் மாவட்ட போலீஸ் கமிஷனர், அத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
கடந்த மாதம் 23 ஆம் தேதி அம்ரித்பால், தனது ஆதராவாளர்களுடன் அமிர்தரசஸ் அருகே உள்ள அஜ்னாலா போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று தங்களது ஆதரவாளர்களை விடுவிக்க வன்முறையில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காலிஸ்தான் அமைப்பு மீண்டும் தலைதூக்கி, தனிநாடு பிரச்னையை கிளப்பி வன்முறையில் ஈடுபடுவதை ஒடுக்கும் வகையில் அதிரடி நடவடிக்கைகளை பஞ்சாப் போலீஸார் எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் அம்ரித்பால் சிங்கை போலீஸார் கைது செய்து சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதாக கூறி, பஞ்சாப் உயர்நீதிமன்றத்தில் ஒருவர் ஆட்கெணர்வு மனு தாக்கல் செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.