செய்திகள்

திருடும் போது கடவுளை வணங்கினால் அது பக்தியா? அச்சமா?

கார்த்திகா வாசுதேவன்

காஞ்சிபுரத்தில் நேற்று அதிகாலையில் நடந்த ஒரு திருட்டுச் சம்பவத்தை நினைத்து கவலைப்படுவதா? சிரிப்பதா என்று தெரியாமல் குழம்பிப் போயிருக்கிறார் பொருளை இழந்த ஹார்டுவேர் கடை உரிமையாளர் ஒருவர்.

காஞ்சிபுரம் வாலாஜாசாலையில் இருக்கும் சுங்குவார் சத்திரம் பஜாரில் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார் ராஜ்குமார் எனும் 32 வயது இளைஞர். அவர் நேற்று வெள்ளியன்று தனது கடையைத் திறக்க முயன்ற போது, கடையினுள் கல்லாப்பெட்டியில் பணம் திருடு போன விஷயம் தெரிய வந்திருக்கிறது. உடனே கடைக்குள் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காமிராவை இயக்கி திருட்டு குறித்த விவரங்களைச் சேகரித்திருக்கிறார் ராஜ்குமார்.

சிசிடிவி காமிராவில் பதிவான காட்சிகளுடன் கடையில் நடந்த திருட்டு குறித்து உடனடியாக காவல்துறையில் அவர் புகார் அளித்திருக்கிறார். புகாரின் அடிப்படையில் காஞ்சிபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சந்தேகத்துக்குரிய நபரைத் தேடிக் கொண்டிருப்பதாகத் தகவல்.காவல்துறை அளித்த தகவலின்படி சிசிடிவி காமிராவில் பதிவான காட்சியில், வெள்ளை சட்டை அணிந்த நபர் ஒருவர் கடையின் பின்புற கதவை உடைத்து கொண்டு நள்ளிரவு 12.30 மணியளவில் உள்ளே நுழைந்திருக்கிறார். கடைக்குள் நுழைந்ததும் கல்லாவில் இருக்கும் டிராயரைத் திறந்திருக்கிறார். உள்ளே கடவுள் படங்கள் இருந்திருக்கின்றன. அதைக் கண்டதும் இருமுறை அந்தப் படங்களின் மீது தனது தலையைப் பதித்து வணங்கி இருக்கிறார். திருடுவதற்கு முன்பு பிரார்த்தனையில் ஈடுபடுவதைப் போலிருந்தது அந்தக் காட்சி. அது முடிந்ததும் சுமார் 1 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து நழுவி இருக்கிறார் அந்த பக்திமான் திருடர்.

திருட்டிலும் என்னே ஒரு கடவுள் பக்தி! இது பக்தியா? அல்லது கல்லாப் பெட்டியில் கடவுளை சாட்சியாக வைத்துக் கொண்டு திருடுகிறோமே என்ற அச்சமா? என்று புரியவில்லை! எப்படியோ காவல்துறையின் தேடுதல் வேட்டையில் சந்தேகத்துக்குரிய நபர் சிக்கி அவரிடம் பறிபோன பணத்தை அந்தக் கடவுளே மீட்டுக் கொடுத்தால் சரி தான் என்ற நினைப்பு இப்போது பொருளை இழந்தவருக்கு வந்திருக்கக் கூடும்!

உங்களுக்கு தைராய்டு இருக்கா? ப்ளீஸ் இந்த உணவுகள் வேண்டாமே!

30 வயதிற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 உண்மைகள்! 

சிறுகதை – சலனம்!

கோடைகாலத்தில் இடுப்பு பகுதியில் உள்ள கொழுப்பைக் குறைக்க சூப்பர் டிப்ஸ்! 

Mummy: கையை முகத்துடன் இணைத்து கட்டியப்படி கண்டுபிடிக்கப்பட்ட மம்மி!

SCROLL FOR NEXT