இங்கிலாந்தின் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ரிஷி சுனாக் முன்னிலை வகித்து வந்த நிலையில், இப்போது அவருக்கு எதிராக போட்டியிடும் லிஸ் ட்ரசுக்கு ஆதரவு பெருகி வருவதால், அவரே அடுத்த பிரதமராகும் வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த 7-ம் தேதி தன் பதவியை ராஜினாமா செய்த நிலையில் புதிய பிரதமரைத் தேர்ந்துக்கும் பணியில் ஆளுங்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி ஈடுபட்டுள்ளது. இதையடுத்து அக்கட்சியின் புதிய தலைவர் மற்றும் பிரதமரை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இதற்கான களத்தில் 11 பேர் இறங்கினர்.
தற்போது இந்த போட்டியில் பிரிட்டனின் முன்னாள் நிதியமைச்சரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ரிஷி சுனாக், மற்றும் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ் ஆகிய 2 பேர் மட்டுமே எஞ்சி உள்ளனர்.
இந்நிலையில், 'உங்களுடைய அரசு' என்ற தலைப்பில் 'தி டைம்ஸ்' பத்திரிகை கடந்த 5 நாட்களாக நடத்திய கருத்துக்கணிப்பில், சுனாக்கை விட லிஸ் ட்ரஸ் 38 புள்ளிகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
அவருக்கு 69 சதவீத ஆதரவும், சுனாக்கிற்கு 31 சதவீத ஆதரவும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கடந்த மாதம் 20ம் தேதி வெளியிடப்பட்ட கருத்து கணிப்பில் முறையே இது 62 சதவீதம், 38 சதவீதமாக இருந்தன.
டோரி உறுப்பினர்களின் 80 சதவீத மேல் ஆதரவு டர்சுக்கு கிடைத்துள்ளது. 60 சதவீத கட்சி உறுப்பினர்கள் ட்ரஸுக்கு வாக்களிப்பதாகக் கூறியுள்ளனர், 26 சதவீதம் பேர் சுனாக்கை ஆதரித்துள்ளனர்.
மற்றவர்கள் வாக்களிக்கவில்லை அல்லது வாக்களிக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளனர். இதன் மூலம், இங்கிலாந்தின் புதிய பிரதமராக பதவியேற்கும் வாய்ப்பு ட்ரசுக்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது..