தமிழகத்தில் தமிழ் மொழியில் திறனறித் தேர்வு நடத்தி, அதில் வெற்றி பெறும் 1,500 மாணவர்களுக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1,500 ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:
தமிழக 'பள்ளி மாணவர்கள் அறிவியல், கணிதம் சார்ந்த தேர்வுகளுக்கு பெருமளவில் தயாராகி பங்குபெறுவதைப் போன்று, தமிழ்மொழி இலக்கியத் திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் அரசு தேர்வுகள் இயக்ககம் மூலம் 'திறனறித் தேர்வு' நடைபெறவுள்ளது.
அதன்படி, இந்த கல்வியாண்டில் அரசுப் பள்ளி மற்றும் அனைத்து வகை (சி.பி.எஸ்.இ / ஐ.சி.எஸ்.இ) பள்ளியில் பயிலும் 11-ம் வகுப்பு மாணவ – மாணவியர் இத்தேர்வை எழுத 09-09-2022 வரை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.
பத்தாம் வகுப்பு தமிழ்ப்பாடம் இதற்கான பாடத்திட்டம் ஆகும். இத்தேர்வு அப்ஜெக்டிவ் டைப் முறையில் நடைபெறும். ஒரு கேள்விக்கு ஒரு மதிப்பெண் வீதம் 100 கேள்விகள் அடங்கிய வினாத்தாள் வழங்கப்படும்.
இந்தத் தேர்வு 01-10-2022 அன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறும். இத்தேர்விற்கு விண்ணப்பிப்பவர்கள் இத்தேர்வுக்கான நுழைவுச் சீட்டை மேற்குறிப்பிடப்பட்ட இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும், இந்தத் தேர்வில் வெற்றி பெறும் 1500 மாணவ மாணவியர்களுள் 750 அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், 750 இதர பள்ளி மாணவர்களுக்கும் மாதம் ஒன்றுக்கு 1500 ரூபாய் வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படவிருக்கிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்கு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் நிகழ்வாண்டிற்கு 2.70 கோடி ரூபாயும், வரும் ஆண்டு முதல் 5.40 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
– இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.