செய்திகள்

கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகப் பணிகள் துரிதம்.

சேலம் சுபா

சேலம் என்றாலே உணவுப்பிரியர்களுக்கு மாம்பழமும், கலைப் பிரியர்களுக்கு மாடர்ன் தியேட்டர்ஸ்ம், ஆன்மிகப் பிரியர்களுக்கு கோட்டை மாரியம்மன் கோவிலும் நினைவுக்கு வந்து செல்லும். ஆடி மாதம் வந்துவிட்டால் மாரியம்மன் பண்டிகைகள் வேறெங்கும் இல்லாத வகையில் இக்கோயில் களைகட்டும்.

தற்போது கட்டுமானப்பணிகளில் இருக்கும் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலின் பணிகள் என்று நிறைவு பெற்று அம்மனை பழையபடி தரிசிப்போம் எனும் ஏக்கத்தில் உள்ள பக்தர்களுக்கு இனிக்கும் செய்திதான் இது.

   பழைய பேருந்து நிலையத்தை ஒட்டி உள்ள பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் அம்மனுக்கு 22 நாட்கள் ஆடிப்பெருவிழா கொண்டாடப்படுவது காலம் காலமாக இருந்து வருகிறது. அச்சமயம் உள்ளூர் மட்டுமின்றி ஏராளமான வெளியூர் பக்தர்களும் சேலத்தில் விருந்தினர்களாக சொந்தங்கள் வீடுகளில் முகாமிட்டு கொண்டாடி மகிழ்வார்கள். ஆடி விழா தவிர  பொங்கல், தீபாவளி, நவராத்திரி போன்ற சிறப்புமிக்க விசேஷ நாட்களிலும்  மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகளுடன் அலங்கார ஆராதனைகள் நடைபெற்று வருகிறது.

        கடந்த சில வருடங்கள் முன் கோவிலில் கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்த காரணத்தால் பாதுகாப்பு மற்றும் புதுப்பிக்கும் நோக்குடன்  அக்கட்டிடத்தை அகற்றிவிட்டு புதியதாக கட்டுமானத்தை மேற்கொள்ள வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் அரசை வலியுறுத்தினர். இதை பரிசீலித்த அரசு, கட்டுமான பணிகளை மேற்கொள்ள ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து கடந்த 2015 ஆம் ஆண்டு கோவிலில் முறைப்படி  பாலாலயம் செய்யப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் கோவிலில் திருப்பணி தொடங்கியதில் இருந்தே பல்வேறு பிரச்னைகள் எழுந்து கொண்டே இருந்தது. பழமையான மூலவர் அம்மனின் கருவறையை அகற்றாமல் திருப்பணியை  மேற்கொள்ள வேண்டும் என்று ஒரு தரப்பினரும், அம்மன் கருவறை கருங்கற்களால் கட்டப்பட வேண்டும் என்று மற்றொரு தரப்பினரும் வலியுறுத்தினர்.

       பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் அதற்கான தீர்வுகளுடன் மீண்டும் கட்டுமான பணி சுறுசுறுப் படைந்தது. இந்த நிலையில் கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனாவால் இரண்டு வருடங்களாக கட்டுமான பணிகளில் தொய்வு ஏற்பட்டு கட்டுமானம் நடைபெறாமல் போனது. கொரோனா கட்டுப்பாடுகள் நீங்கிய பின் கடந்த ஆண்டு முதல் கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. அம்மன் கருவறை, கோபுரம், அர்த்தமண்டபம் உள்ளிட்ட பணிகள் நிறை வடைந்துள்ளது. தற்போது சுற்றுப்பிரகார மண்டபம் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் கும்பாபிஷேக விழா நடத்துவதற்கான பணிகளும் துரிதமாக நடந்து வருகின்றன.

கும்பாபிசேகப் பணிகளின் பகுதியாக ராஜகோபுரத்திற்கு வண்ணம் பூசும் பணிகள் துவங்கியுள்ளது. இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவிலில் முறையாக பாலாலயம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வண்ணம் பூச வேண்டிய ராஜகோபுரத்தையொட்டி சாரம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணி நிறைந்த பின் வண்ணம் பூசும் பணி துவங்கும். கோபுரத்தில் வண்ணம் பூசப்படும் பணிகள் முழுமையாக முடிந்த பின் கும்பாபிஷேக விழா நடத்தப்படும் என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

     எது எப்படியோ, விரைவில் கோவில் தொடர்பான அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து கும்பாபிசேக விழாவில் கலந்துகொண்டு ஆடிப் பண்டிகையைக் கொண்டாடி மகிழவும் தங்கள் இஷ்ட தெய்வமான கோட்டை மாரியம்மனை தரிசிக்கும் ஆவலுடன் சேலம் மக்கள் காத்திருக்கின்றனர். 

Buddha Quotes: புத்தரின் 15 வாழ்வியல் கருத்துக்கள்!

இரவில் தாமதமாக சாப்பிடுபவரா நீங்க? அச்சச்சோ, அது ரொம்ப தப்பாச்சே!

காலம் காலமாக நின்று பேசும் மாமல்லபுரமும் மறக்கப்பட்ட மாமல்லனும்!

அந்தப் படத்தில் ரஜினியுடன் நடித்திருக்க கூடாது! – குஷ்பு வருத்தம்!

எலான் மஸ்க் தொழில்நுட்பத்திற்கு பச்சைக்கொடி… அடேங்கப்பா! 

SCROLL FOR NEXT