தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த நோபல் பரிசுக் குழுவின் துணைத் தலைவராக இருக்கும் ஆஷ்லே டோஜோ, ‘அமைதிக்கான நோபல் பரிசுக்கு கடுமையான போட்டியாளராக விளங்குபவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடிதான்’ என்று கூறி இருக்கிறார். மேலும் அந்தப் பேட்டியில் அவர், “அமைதியை நிலைநாட்டக்கூடிய நம்பிக்கைக்குரிய தலைவராக இந்தியப் பிரதமர் மோடி திகழ்கிறார். உலகின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவராகவும், அமைதிக்கான மிகவும் நம்பகமான முகமாக பிரதமர் மோடி உள்ளார்.
போரிடும் நாடுகளுக்கு இடையே போரைத் தடுத்து அமைதியை நிலைநாட்டும் திறன் கொண்டவர் நரேந்திர மோடி. இந்தியப் பிரதமர் மோடி செயல்படுத்திய கொள்கைகளால் இந்தியா பணக்கார மற்றும் சக்தி வாய்ந்த நாடாக வளர்ந்து வருகிறது. ஒருவேளை பிரதமர் மோடி அமைதிக்கான நோபல் பரிசை வென்றால், அது தகுதியான தலைவருக்கு கிடைத்த ஒரு வரலாற்றுத் தருணமாக இருக்கும்' என்று ஆஷ்லே டோஜே தெரிவித்துள்ளார்.
கடந்த 2018ம் ஆண்டில் இந்தியா, சர்வதேச பொருளாதார வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகளைப் பாராட்டி தென் கொரியா நாட்டின் மிக உயரிய சியோல் அமைதி விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது. கடந்த 28 ஆண்டுகளில் இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர் நரேந்திர மோடிதான். இதுவரை இந்த விருது 13 புகழ் பெற்ற நபர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சியோல் அமைதி பரிசு, உலக அமைதி மற்றும் அதிகார சமநிலைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது. இந்தப் பரிசைப் பெற்றவர்களில் பலர் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றுள்ளனர். இதன் மூலம் இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கான போட்டியாளராக பிரதமர் நரேந்திர மோடி குறித்து பேசுவதற்கு இந்த விருது வழி வகுத்துள்ளது.