Srilanka President 
செய்திகள்

“பாலஸ்தீன அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டும்” – இலங்கை அதிபர் காட்டம்!

பாரதி

இஸ்ரேல் காசா போர் குறித்து இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பேசும்போது, பாலஸ்தீன அரசாங்கம் கட்டாயம் உருவாக்கப்பட வேண்டும் என்று காட்டமாக பேசியுள்ளார்.

இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் வெகு மாதங்களாக நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது கொடூர தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பினைத் தாக்க திட்டமிட்ட இஸ்ரேல், காசாவின் அப்பாவி மக்கள் மீதும் தாக்குதல் நடத்துகிறது. இதனால், உலக நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றன. அதேபோல் சில நாடுகள் அந்நாட்டுக்கு எதிராக சில முடிவுகளை எடுக்கின்றனர். முன்னதாக மாலத்தீவு தங்கள் நாடுகளில் இருக்கும் இஸ்ரேல் மக்களை உடனே வெளியேறும்படி கூறியது.

அதேபோல் தற்போது இலங்கை அதிபர் காசாவிற்கு தனது ஆதரவை தெரிவித்துப் பேசியுள்ளார்.

காசாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக காத்தான்குடி பெரிய ஜும்மா பள்ளிவாசலில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட பிரார்த்தனை நிகழ்வில்  கலந்து கொண்டு உரையாற்றிய போது இலங்கை ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர்  தெரிவித்துள்ளதாவது ”காசா விவகாரத்தில் அரசாங்கம் வலுவான நிலைப்பாட்டை கொண்டுள்ளது.
அது என்றும் மாறாது. ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் பிரச்சனைகள் இருக்கலாம். அதற்காக, காசா மக்களை பழிவாங்க வேண்டாம். பாலஸ்தீனம் தீர்வை எட்ட உதவ வேண்டும். 5 வருடங்களுக்குள் பாலஸ்தீன அரசாங்கத்தை நிறுவ வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

காலக்கெடு இல்லாமல் பேசுவதில் அர்த்தமில்லை. ஏனென்றால், 40, 50 வருடங்களாக இது குறித்து பேசப்பட்டுவிட்டது. இஸ்ரேலின் பாதுகாப்பு பிரச்சனைகள் இருந்தால், அது குறித்துத் தனியாக விவாதிக்கலாம். ஆனால் பாலஸ்தீன அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டும். ஏராளமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
அதை நாம் ஏற்றுக்கொள்ளவே முடியாது.

காசா போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக காசா நிதியத்தை ஆரம்பிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி முதலில் ஒரு மில்லியன் டாலரை வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். நாங்கள் சிறிய நாடாக இருந்தாலும், வங்குரோத்து நிலையை அறிவித்திருக்கும் வேளையிலும் ஒரு மில்லியன் டாலரை வழங்க முன்வந்திருக்கிறோம்.

இதற்கு பொதுமக்களையும் ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். அதேபோல் உடல்களை அடக்கம் செய்வது குறித்த பிரச்சனைகளை முஸ்லிம் மக்கள் எதிர்கொண்டுள்ளனர்.

இதனால் முஸ்லிம் மக்கள் மனம் நொந்துள்ளனர். எனவே, உடலை அடக்கம் அல்லது தகனம் செய்தல் அல்லது உடலை விரும்பினால் மருத்துவ பீடத்திடம் ஒப்படைக்கலாம் என்ற புதிய சட்டத்தை கொண்டு வரத் தீர்மானித்திருக்கிறோம். நாட்டின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு நான் முன்னுரிமை அளித்துள்ளேன். அதன்பிறகு, நாட்டின் மற்ற பிரச்சனைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்தப்படும்.” இவ்வாறு பேசினார். 

60 வயதுக்குப் பின்னர் நிம்மதியாக வாழ வேண்டுமா? இதை முதல்ல படிங்க!

உலகின் 5 நீளமான நதிகள்!

பயணம்; நான் ரசித்த அழகிய தாஜ்மஹால்!

அதிகப்படியான ஆயில் சருமத்தை கட்டுப்படுத்த சில தீர்வுகள்!

பாரம்பரிய மைசூர்பாக் மற்றும் மொறுமொறுப்பான ஓமப்பொடி!

SCROLL FOR NEXT