செய்திகள்

‘தினகரனுடன் ஒன்றிணைந்து செயல்படத் தயார்’ ஓ.பன்னீர்செல்வம் உருக்கம்!

கல்கி டெஸ்க்

திருச்சியில் வரும் ஏப்ரல் மாதம் 24ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவரது அணி சார்பாக முப்பெரும் விழா நடைபெற உள்ளது. இந்த மாநாடு குறித்து ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களை அழைத்து பெரியகுளத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டம் தேனி மாவட்டச் செயலாளர் சையது கான் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தால் நியமிக்கப்பட்ட தேனி மாவட்ட நகர, ஒன்றிய, பேரூர் கழக, கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், “சசிகலா மற்றும் டிடிவியிடம் முதல்வர் பதவியைப் பெற்ற பிறகு அவர்களையே ஏமாற்றியவர் எடப்பாடி பழனிச்சாமி. ஆனாலும், அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பது ஜெயலலிதாவின் கனவு. அதைத்தான் சசிகலாவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார்.

​தற்போது தேனி மாவட்டத்தில் கட்சி நிதி திரட்டுவதற்காக பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்களும் தொழிலதிபர்களிடம் கையேந்தி நிற்கின்றனர். ஆனால், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் கட்சி சார்பாக தான் தேனி மாவட்டத்தை நிர்வகித்து வந்தபோது யாரிடமும் கையேந்தி நிற்காத நிலை இருந்தது. என்ன வேண்டுமென்றாலும் தன்னிடம் கேட்கச் சொல்லி இருந்தார். அவர் இங்கிருந்து போகும்போது அதைத்தான் என்னிடமும் சொல்வி விட்டுச் சென்றார். அவர் சொல்லிச் சென்றபடி இதுவரை நாங்கள் எந்தத் தொழிலதிபரிடமும் கட்சிக்காக கையேந்தி நிற்கவில்லை.

​மாவட்டச் செயலாளர் சையது கான் ஒவ்வொரு முறை சென்னை செல்லும்போதும் தினகரனைச் சந்திப்பார். அதை நானும் இதுவரை தடுத்ததில்லை. அவரிடம் ஒன்றை மட்டும் நான் கூறுவேன், எங்கள் இருவரையும் சமாதானப்படுத்தி ஒன்றிணைத்து விடுங்கள்” என்று மிகவும் உருக்கமாகப் பேசி உள்ளார்.

பெரியகுளம் நகராட்சியின் தண்ணீர் பிரச்னைக்காக ஏற்கெனவே ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அமமுகவினருடன் சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போதுகூட மாவட்டச் செயலாளர் சையது கான், ‘விரைவில் நாங்கள் அதிகாரப்பூர்வமாக ஒன்றிணைந்து செயல்படுவோம்’ என்று கூறி இருந்தார். ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த உருக்கமான பேச்சை, அவரது ஆதரவாளர்கள் பெரிதும் வரவேற்று உள்ளனர்.

தேனுடன் லவங்கப்பட்டை சேர்ந்து வழங்கும் 11 அற்புதப் பலன்கள்!

சிவபெருமானை எந்த மலர் கொண்டு வழிபட என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?

கனமழையின் போது ஏசி பயன்படுத்தலாமா? நன்மைகளும், தீமைகளும்! 

நதியின் நடுவில் ஈரக் கருவறை உள்ள கோயில் எது தெரியுமா?

ஒருவர் ஏன் கட்டாயம் மருத்துவக் காப்பீடு எடுக்க வேண்டும்? வாங்க தெரிஞ்சுக்கலாம்!

SCROLL FOR NEXT