தர்மபுரி மாவட்டத்தில், கர்ப்பிணி பெண்களின் கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை கண்டறிந்ததாக அதே மாவட்டம் முத்தப்பா நகரை சேர்ந்த லலிதா என்ற இடைத்தரகரையும் அவரது கூட்டாளிகளையும், கையும் களவுமாகப் பிடித்துள்ளார் அம்மாவட்ட மருத்துவமனை இணை இயக்குனர் சாந்தி.
கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை கண்டறிவது சட்டவிரோதமானது. தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த நெற்குந்தி முத்தப்பா நகரை சேர்ந்த லலிதா என்ற இடைத்தரகர், கருவுற்ற பெண்கள் கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை கண்டறிந்து வருவதாக மாவட்ட மருத்துவமனை இணை இயக்குனர் சாந்தி அவர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில், தர்மபுரி மாவட்ட சுகாதாரப் பணிகள் மற்றும் ஊரக நலத்துறை இணை இயக்குனர் சாந்தி தலைமையிலான மருத்துவக்குழுவினர் மற்றும் போலீசார் லலிதா இருக்கும் நெக்குந்தி அடுத்த முத்தப்பா நகருக்கு சென்றுள்ளனர். அங்கு லலிதா மற்றும் அவருடன் குற்றத்தில் ஈடுப்பட்ட அனைவரும், மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் சாந்தி அவர்களிடம் கையும் களவுமாக மாட்டிக் கொண்டனர்.
அதன் பின் போலீசார் நடத்திய விசாரணையில், ஆளில்லாத வீட்டில் வைத்து பரிசோதனை செய்த இந்த கும்பல் ஒவ்வொரு கர்ப்பிணி பெண்களிடமும் தலா ₹13,000 வீதம் பெற்றுக் கொண்டுள்ளனர். இதுவரை நடத்திய விசாரணையில் 4 பெண்களுக்கு ஸ்கேன் மிஷின் மூலம் பரிசோதனை செய்து கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை தெரியப்படுத்தியது அம்பலமாகியிருக்கிறது.
இந்த குற்றத்தில் ஈடுப்பட்ட கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த முருகேசன், நடராஜன், சின்னராஜ் மற்றும் லதா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் முருகேசன் ஏற்கனவே சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்ததில் கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.