செங்கல்பட்டு மாவட்டம் புலிப்பாக்கம் பகுதியில் பிலாப்பூர் எனுமிடத்தில் பிடாரி பொன்னியம்மன் கோயில் உள்ளது. திருச்சி,சென்னை தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் அமைந்துள்ள அந்தக் கோயில் அப்பகுதி மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயிலை அதே பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் பராமரித்து வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றவர் நேற்று காலை வந்து பார்த்தபோது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
கோயிலின் உள்ளேயும் திருடர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டி இருந்தனர். கோவிலின் கருவறைக்கு உள்ளே சென்று பார்த்த போது அங்கு சுவரில் பெரிய துளை போடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராமலிங்கம் உடனடியாக ஊர் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தார்.
காவல்துறையினர் வருவதற்குள் மீண்டும் கோயிலின் உள்ளே முழுமையாக ஆராய்ந்து பார்த்த போது, கோவிலின் கருவறைக்குள் பீரோவில் இருந்த பணம், நகைகள் மற்றும் உண்டியல் பணம் மொத்தமும் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா காவல்துறையினர் கோவில் வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பாக எப்போதும் ஆள் நடமாட்டம் உள்ள பகுதியான அக்கோவிலில் இப்படி ஒரு துணிகரக் கொள்ளை சம்பவம் நிகழ்த்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொள்ளை நடைபெற்ற இந்தக் கோவிலில் வருடந்தோறும் சித்திரைத்தேர் திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படும்.
இந்த திருவிழாவுக்காக பக்தர்கள் பத்து நாட்களுக்கு முன்பு காப்பு கட்டி விரதம் காப்பார்கள்.
பத்தாம் நாளில் துடியான பெண் தெய்வங்களில் ஒன்றான பிடாரி பொன்னியம்மன் 15 அடி தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாளிப்பார். இந்த தேர்த்திருவிழாவில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் தரிசனம் செய்வார்கள்.
அத்தகைய பிரசித்தி பெற்ற கோவிலில் நிகழ்ந்த இந்தத் துணிகரச் கொள்ளைச் சம்பவம் அப்பகுதி மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.