செய்திகள்

மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஊதியத்துடன் விடுப்புக்கு சட்டம் - ஐரோப்பாவில் முதல் நாடு ஸ்பெயின் - வேறு எந்தெந்த நாடுகளில் இது நடைமுறையில் உள்ளது?

ஜெ.ராகவன்

மாதவிடாய் மற்றும் மகப்பேறு காலத்தில் பெண்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு விடுப்பு அளிக்க வேண்டியது அவசியம் என்றாலும் அவை வழங்கப்படுகிறா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

பெண்கள் மாதவிடாய், கர்ப்பம், கருச்சிதைவு, மகப்பேறு நிலைகளில் மருத்துவச் சிக்கல்களுக்கு உட்படும்போது மனக்கஷ்டங்களுக்கு உள்ளாகிறார்கள்.

கல்லூரிகளில் படிக்கும் மாணவிகள் மற்றும் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் வலி காலத்தில் விடுப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டநாளாக இருந்து வருகிறது.

இந்தியாவில் ஒன்று அல்லது இரண்டு மாநிலங்களில் மட்டும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் விடுப்பு அளிக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் இதை நடைமுறைக்கு கொண்டுவரக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது.

கேரளத்தில் பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவிகளுக்கு மாதவிடாய் காலத்தில் விடுப்பு அளிக்க அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆனாலும் பொதுவாக உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவிகளுக்கு மாதவிடாய் கால விடுப்பு அளிக்கும் திட்டம் ஏதும் இல்லை. உயர்கல்வி நிறுவனங்களிலேயே அவர்களுக்குத் தேவையான சுகாதார வசதிகளை செய்துகொடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயின், மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு சம்பளத்துடன்கூடிய விடுமுறை வழங்கும் சட்டத்தை இயற்றியுள்ளது. இந்த சட்டத்தை கொண்டுவந்துள்ள முதல் ஐரோப்பிய நாடும் ஸ்பெயின்தான்.

ஸ்பெயின் நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (பிப். 16) நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்துக்கு 185 பேர் ஆதரவாகவும் 154 பேர் எதிர்த்தும் வாக்களித்துள்ளனர்.

“பெண்களின் முன்னேற்றத்தில் இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாளாகும். இனி வலியுடன் வேலைக்குச் செல்ல வேண்டாம். வேலைக்கு வருவதற்கு முன் மாத்திரை போட்டுக் கொள்ளத் தேவையில்லை. வலியை மறைத்து வேலை செய்ய வேண்டியதில்லை” என்று அந்த நாட்டின் சமத்துவத்துக்கான அமைச்சர் இரினோ மான்டெரோ டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஆனாலும் விமர்சனங்கள் எழாமல் இல்லை. இது தொடர்பாக தொழிற்சங்கத்தினர் கூறுகையில், பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் விடுமுறை தேவையில்லை. அரசின் இந்த அதீத நடவடிக்கையால் இனி தொழிலதிபர்கள் வேலைக்கு ஆள் எடுப்பதில் ஆண்களுக்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்று கூறியுள்ளனர்.

சம்பளத்துடன்கூடிய மாதவிடாய் வலி விடுப்புக்கான காலம் எவ்வளவு என்பது தெரிவிக்கப்படவில்லை என்றாலும், வழக்கமான மருத்துவ விடுப்பு தவிர மாதவிடாய் கால விடுப்பு அளிக்கப்படும் என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

உலகில் ஜப்பான், இந்தோனேசியா, ஜாம்பியா உள்ளிட்ட ஒருசில நாடுகளில்தான் இந்த மாதவிடாய் விடுப்பு நடைமுறையில் உள்ளது. இப்போது இந்த பட்டியலில் ஸ்பெயினும் சேர்ந்துள்ளது.

ஸ்பெயின் நாட்டில் நான்கில் மூன்று பங்கு பெண்கள் மாதவிடாய் காலத்தில் வலியால் அவதிப்படுவதாக அந்த நாட்டின் மகப்பேறு மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

மகளிர் உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாடுகளில் ஒன்றான ஸ்பெயின் கருக்கலைப்பு குற்றமல்ல என்று சட்டம் கொண்டுவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தோனேசியாவில் மாதத்திற்கு இரண்டு நாள் மாதவிடாய் விடுப்பு அளிக்க சட்டம் உள்ளது என்றாலும் பலரும் ஒருநாள் மட்டுமே விடுப்பு கொடுக்கின்றனர். சில நிறுவனங்கள் இந்த சட்டத்தை மதிக்காமலோ அல்லது சட்டம்

இருப்பது தெரியாமலோ விடுமுறை ஏதும் கொடுப்பதில்லை.

ஜப்பானில் இந்த சட்டம் இருந்தாலும் சில நிறுவனங்கள் சம்பளம் இல்லாமல் விடுமுறை எடுக்க அனுமதிக்கிறது. சில நிறுவனங்களில் விடுமுறையுடன் சம்பளத்தின் ஒரு பகுதி மட்டுமே வழங்கப்படுகிறது.

தென் கொரியாவில் சம்பளத்துடன் ஒருநாள் விடுமுறை தரப்படுகிறது. இந்த சட்டத்தை கடைபிடிக்காத நிறுவனங்களுக்கு அபராதங்கள் விதிக்கப்படுகின்றன.

இது மட்டும் தெரிஞ்சா அதிக நேரம் கழிவறையில் இருக்க மாட்டீங்க! 

விளையாட்டு வீரரைப் போர் வீரராக மாற்றிய கம்பீர்… என்னாவா இருக்கும்???

மணக்கும் சுக்குட்டிக் கீரை மசியலும் புடலங்காய் பொரியலும்!

உங்கள் வீட்டு நாய் ஆரோக்கியமாக இருக்க என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்? கால்நடை மருத்துவர் டாக்டர். பிரியா விளக்கம்!

சிறுநீரகக் கல் இவ்வளவு ஆபத்தானதா? அச்சச்சோ! 

SCROLL FOR NEXT