செய்திகள்

தாத்தா பாட்டிக்கு சிலையுடன் கோவில்!

சேலம் சுபா

நடிகர்களுக்கு கோவில் கட்டும் இந்தக் காலத்திலும் தங்கள் தாத்தாப் பாட்டிக்கு கோவில் கட்டிய அன்பான பேரன்களை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

 நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டை அடுத்த மங்களபுரம் ஊராட்சி தாண்டக்கவுண்டன் புதூரில் உள்ள அத்திமரத்து குட்டை எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யமுத்து. இவரது மனைவி அய்யம்மாள். இவர்  ராமாயிபட்டியில் உள்ள இருசாயி கோவில் பூசாரியாக இருந்து  பல ஆண்டுகள் சுற்று வட்டார  மக்களுக்கு அருள்வாக்கு சொல்லி வந்துள்ளார் . இந்த  நிலையில் மனைவி அய்யம்மாள் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதமும் அய்யமுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமும் (12 ந்தேதி)  மறைந்தனர்.

அய்யமுத்து உயிருடன் இருக்கும்போதே இறந்த பிறகு தனக்கு சொந்தமான நிலத்தில் தான் தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என்று கூறி வந்ததாக தெரிகிறது. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக அப்பகுதியில் உள்ள இடுகாட்டில் அய்யமுத்துவை அடக்கம் செய்தனர். தாத்தா சொல்லிச் சென்ற ஆசையை நிறைவேற்ற முடியவில்லை எனும் ஆதங்கத்தில் இருந்த பேரன்கள்  அவர் ஆசையை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் எனத் திட்டமிட்டனர்.

அதையடுத்து பூசாரி அய்யமுத்து உயிருடன் இருக்கும்போது எங்கு அடக்கம் செய்ய வேண்டும் என்று கூறினாரோ அதே இடத்தில் தாத்தாவுக்கும் பாட்டிக்கும்  சிலை வைக்க அவரது பேரன்கள் மற்றும் குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதன்படி அவர்களுக்கு கோவில் கட்டி முழு உருவச்சிலையும் வைத்தனர் முதலாவது நினைவு நாளான 2023 ஆகஸ்ட் 12 ந்தேதி கோவில் முன் உள்ள வேம்பு அரசு மரத்தடியில் விநாயகர் சிலையை வைத்து கும்பாபிஷேகம் நடத்தினர். இதனை அடுத்து உறவினரை அழைத்து அய்யமுத்து அய்யமாள் சிலைகளுக்கு மாலைகள் அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்து குடும்பத்துடன் வழிபட்டனர். பேரன்களின் பாசம் மிகுந்த இந்த  செயல் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் இடையே நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைப்பர் டென்ஷனை கட்டுப்படுத்தும் 11 மூலிகைகள்!

ஆழ்வார்திருநகரியும் ஒன்பது கருட சேவையும் பற்றி தெரியுமா?

கோடைக்கால உடல் பிரச்னைகளை குணமாக்கும் பழம்பாசி சஞ்சீவி மூலிகை!

துரோகம் செய்யும் உறவுகளை சமாளிப்பது எப்படி?

இருமுனைக் கோளாறு நோயின் அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT