செய்திகள்

சீல் வைக்கப்பட்ட காளியம்மன் கோயில் மீண்டும் திறக்கப்பட்டது!

கல்கி டெஸ்க்

ரூர் மாவட்டம், வீரணம்பட்டி கிராமத்தில் உள்ளது அருள்மிகு காளியம்மன் திருக்கோயில். இந்தக் கோயிலில் கடந்த 8ம் தேதி நடைபெற்ற பூஜையில் கலந்துகொள்ள ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கோயிலுக்குள் வந்ததால், மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையடுத்து அந்த இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார், இரு தரப்பு முக்கியமானவர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அந்தப் பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படாததால், குளித்தலை ஆர்டிஓ தலைமையில் வீரணம்பட்டி காளியம்மன் கோயிலை பூட்டி சீல் வைக்கப்பட்டது. அதனால், அந்த ஊர் மக்களில் ஒரு பிரிவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து அந்தப் பகுதியில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பிரச்னைக்குரிய இரு தரப்பினரையும் அழைத்துப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இந்தப் பேச்சுவார்த்தையில் ஒரு சுமூக முடிவு காணப்பட்ட நிலையில் இன்று அந்தக் கோயிலை திறப்பதென முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. இந்த நிலையில், இன்று வீரணம்பட்டி காளியம்மன் கோயிலைத் திறக்க கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தர வதனம் ஆகியோர் வருகை தந்தனர். அதை முன்னிட்டு கோயில் பாதுகாப்புப் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு வந்தனர். இது தவிர, பாதுகாப்புக்காக வஜ்ரா வாகனமும் நிறுத்திவைக்கப்பட்டது.

அதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் முன்னிலையில் கோயிலுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டு கோயில் நடை திறக்கப்பட்டது. ஆனாலும், சுவாமிக்கு அபிஷேகம் செய்வதற்கு ஒரு தரப்பினர் மட்டுமே கோயிலுக்குள் வந்தனர். மற்றொரு தரப்பினர் கோயிலுக்கு வெளியே காத்திருந்தனர். அவர்களுக்கு பதிலாக மாவட்ட ஆட்சியர் அழைப்பின் பேரில், அந்த ஊர் கிராம ஊராட்சி மன்றத் தலைவர் கோயிலுக்குள் வந்தார். அதன் பிறகு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளருடன் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. அதன் பிறகு அனைவரும் சுவாமி தரிசனம் செய்தனர்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், "மற்ற ஊர்களுக்கு முன்மாதிரியாக சமூக நீதியை நிலைநாட்டும்படியும், ஒற்றுமையை பேணிக்காக்கும் வகையிலும் வீரணம்பட்டி கிராம மக்கள் பாராட்டும்படி உள்ளனர். தற்போது கோயில் பிரச்னையில் சுமூக உடன்பாடு காணப்பட்டு உள்ளது. அதோடு, இந்த கிராம வளர்ச்சிப் பணிக்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது" என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.

விளையாட்டு வீரரைப் போர் வீரராக மாற்றிய கம்பீர்… என்னாவா இருக்கும்???

மணக்கும் சுக்குட்டிக் கீரை மசியலும் புடலங்காய் பொரியலும்!

உங்கள் வீட்டு நாய் ஆரோக்கியமாக இருக்க என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்? கால்நடை மருத்துவர் டாக்டர். பிரியா விளக்கம்!

சிறுநீரகக் கல் இவ்வளவு ஆபத்தானதா? அச்சச்சோ! 

குளிர் காலத்துக்கு ஏற்ற ஆரோக்கியமான மொறு மொறு பக்கோடா வகைகள்!

SCROLL FOR NEXT