செய்திகள்

செல்பி மோகம்; உயிர் போனது சோகம்; அந்தோ பரிதாபம்!

சேலம் சுபா

யானையோடு செல்பி எடுக்க ஆசைப்பட்ட பூசாரி ஒருவர் பரிதாபமாக தன் உயிரையே பறி கொடுத்து இருக்கிறார். இந்த கொடூர  சம்பவம் பற்றிய செய்தி இது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வனப்பகுதியில் இரண்டு காட்டு யானைகள் சுற்றுகின்றன. இந்த யானைகளை 13 ந்தேதி இரவு கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சுற்றுவட்டார கிராம பகுதிக்குள் நுழைந்தன.

நேற்று காலை அந்த பகுதியில் ராம் குமார் (வயது 27 )என்ற கோவில் பூசாரி  நடந்து சென்றுள்ளார். மேட்டுப்பட்டி அருகே மலை அடிவாரத்தில் போகும்போது அந்த வழியாக அந்த காட்டு யானைகள் செல்வதைப் பார்த்ததும் அவருக்கு யானைகளுடன் செல்பி எடுக்கும் ஆசை வந்தது. உடனே தனது பாக்கெட்டில் இருந்து செல்போனை கையில் எடுத்து உயர்த்திப் பிடித்தபடி யானை அருகே பின்னோக்கி நகர்ந்தார். அந்த நேரத்தில் அவர் சற்றும் எதிர்பாராத விதத்தில் இரண்டு யானைகளில் ஒன்று வேகமாக ஓடி வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அவரை துதிக்கையால் தூக்கி வீசியது. நிலைகுலைந்து போன ராம்குமார் அலறி கீழே விழுந்தார். அவர் சுதாரிப்பதற்குள் அடுத்த நொடியே அவரைத் தனது கால்களுக்கு அடியில் போட்டு மிதித்தது அந்த யானை.

இதில் ராம்குமார் சம்பவ இடத்திலேயே துடித்துடித்து இறந்தார். இந்த நிலையில் அந்த வழியாக சென்றவர்கள் யானை தாக்கி ராம்குமார் இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.  உடனே அவர்கள் வனத்துறைக்கும் பாரூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் ராம்குமார் உடலை விட்டு பிரேத பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ராம்குமார் தந்தை பெயர் எல்லப்பன் என்பதும் பாரூர் அருகே உள்ள காட்டுக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. செல்பி எடுக்கும் மோகத்தில் ராம்குமார் உயிரை பறிகொடுத்த சம்பவம் அந்த பகுதியில் பரிதாபமாக பேசப்படுகிறது .

இந்த சம்பவம் போல் அடிக்கடி அவ்வப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்வதை கேள்விப் பட்டு வருகிறோம். எவ்வளவுதான் ஆறறிவு கொண்டவர் களாக இருந்தாலும் ஐந்தறிவு ஜீவன்களின் மன நிலையையும் பலத்தையும் சாதுர்யத்தையும் நம் போன்ற சாதாரணமானவர்களால் கணிக்க முடியாது. செல்போனைக் கொண்டு சுயமாக எடுக்கப்படும் புகைப்பட சுயமிகளால் (செல்பி) பலரும் ஆபத்துகளை வலியத் தேடிச்சென்று தங்கள் உயிரையும் இழப்பது முட்டாள் தனமான வேதனை. வலியச் சென்று இது போன்ற ஆபத்துகளில் சிக்காமல் இருக்க நம் பிள்ளைகளிடம் நாம்தான் விழிப்புணர்வு எச்சரிக்கையைத் தரவேண்டும்.

ஆண்களுக்கு எதிரான வன்முறைகளும் அவற்றை எதிர்கொள்ளும் விதங்களும்!

மீல் மேக்கர் அதிகமா சாப்பிட்டா என்ன ஆகும் தெரியுமா?

டெல்லியிலிருந்து அமெரிக்கா செல்ல 40 நிமிடங்கள் போதுமாமே… எலான் மஸ்க்கின் புதிய திட்டம்!

ஒரு ஆதார் கார்டில் எத்தனை சிம் கார்டுகளை வாங்க முடியும்?

விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் நானோ யூரியா!

SCROLL FOR NEXT