சென்னையை அடுத்த வண்டலூரில் அமைந்துள்ளது அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா. இந்தப் பூங்காவில் சிங்கம், புலி, யானை, ஒட்டகம், மான், மயில், முயல், காட்டெருமை மற்றும் மலைப்பாம்பு உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் அதனதன் வசிப்பிடத்துக்கேற்ற சூழலில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் இருக்கும் ஒரே விலங்கியல் பூங்கா என்றால் அது வண்டலூர் உயிரியல் பூங்காதான். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சென்று பொழுதைக் கழிக்க, குறிப்பாக குழந்தைகளின் மகிழ்ச்சிக்குரிய இடமாக இருந்து வருகிறது வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா.
இந்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் அருங்காட்சியகம் மற்றும் திரையரங்கம் ஒன்றை அமைக்க தமிழக அரசு 4.3 கோடி ரூபாயை ஒதுக்கி ஆணை பிறப்பித்து இருக்கிறது. அதன்படி, அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் இந்தப் பூங்காவில் அருங்காட்சியகம் மற்றும் திரையரங்கம் கட்டி முடிக்கப்பட்டு, அது மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என்றும் அந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்தத் திரையரங்கத்தில் 3டி மற்றும் 7டி தொழில் நுட்பத்தில், சுற்றுச்சூழல் பல்லுயிர் குறித்த ஆவணப் படங்கள் திரையிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், வனவிலங்கு பாதுகாப்பு குறித்து மக்கள் அறிந்துகொள்ள வசதியாக இந்த அருங்காட்சியம் அமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.