பிரதமர் மோடிக்கு மாற்றுத் தலைவர் எவரும் இல்லை என்று மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் புகழாரம் சூட்டினார்.
மும்பையில் தமது தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் பிரிவின் கட்சி அலுவலகத்தை திறந்துவைத்து அவர் பேசியதாவது:
பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. அவரைப் போல சிறந்த தலைவர் யாரும் இல்லை. அவருக்கு மாற்றும் இல்லை. மோடிக்கு ஆதரவுக்கரம் நீட்டவே நாங்கள் ஏக்நாத் ஷிண்டே அரசில் சேர்ந்தோம்.
நாங்கள் இணைந்து செயலாற்ற முடிவு செய்துள்ளோம். எங்களை ஆட்சியில் இணைத்துக் கொண்டதால் ஷிண்டே தரப்பில் சிலர் அதிருப்தியுடன் இருப்பதாக பேசப்படுகிறது. அது உண்மையல்ல. எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. நாங்கள் ஒன்றாகவே இருப்போம் என்றார் அஜித்பவார்.
முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித்குமார் மற்றும் 8 எம்.எல்.ஏ.க்கள் அதிரடியாக பா.ஜ.க.-சிவசேனை கூட்டணி அரசில் சேர்ந்தனர். இதைத் தொடர்ந்து கட்சியின் தேசிய தலைவர் சரத்பவார், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி கட்சியின் செயல்தலைவர் பிரபுல் படேல், பொதுச்செயலர் மற்றும் பொருளாளர் சுநீல் தட்கரே ஆகியோரை கட்சிப் பதவியிலிருந்து நீக்கினார்.
பின்னர் பிரபுல் படேல் மற்றும் சுநீல் தட்கரே ஆகியோரிடம் விளக்கம் கேட்டு பவார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கட்சிக்குள் பிளவு ஏற்படுத்தியதாகவும், கட்சி விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதால் உங்கள் இருவரையும் நீக்குகிறேன். உங்கள் இருவரையும் எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பவார் தெரிவித்துள்ளார்.
இதனிடையே அஜித்பவார் கோஷ்டியினர் பதில் நடவடிக்கையாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ஜெயந்த் படேல் நீக்கப்பட்டு புதிய தலைவராக சுநீல் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சட்டப்பேரவையின் புதிய எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜீதேந்திர அவ்ஹாத்தை பதவியிலிருந்து நீக்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.