செய்திகள்

‘மதுக்கடை வருமானத்தில் ஆட்சி நடத்த வேண்டிய அவசியமில்லை’ அமைச்சர் செந்தில் பாலாஜி!

கல்கி டெஸ்க்

சென்னை திருமங்கலம், வி.ஆர்.மால் டாஸ்மாக் கடையில் வைக்கப்பட்டுள்ள தானியங்கி மது விற்பனை இயந்திரத்தை இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், "திமுக ஆட்சி அமைந்த இந்த இரண்டு ஆண்டு காலத்தில் இதுவரை 96 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருக்கின்றன. ஆனால், சில பத்திரிகைகள் டாஸ்மாக் கடையின் மூலம் வரும் வருமானத்தால்தான்  தமிழக அரசு செயல்படுவது போல் செய்தி வெளியிடுவது வேதனை அளிக்கிறது.

இந்த மாலில் இருக்கும் கடை பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரைதான் செயல்படுகிறது. ஆனால், ‘இந்தக் கடைக்குள் இருக்கும் தானியங்கி மது இயந்திரத்தை 24 மணி நேரமும் பயன்படுத்தலாம். கடைக்கு வெளியே இருப்பதால் ATM இயந்திரத்தை உடைத்து எடுப்பது போல் இதனையும் உடைத்து எடுத்துக் கொள்ளலாம்‘ என்பது போன்ற தவறான செய்திகளை சிலர் பரப்புகின்றனர். அதேபோல், தானியங்கி மது இயந்திரம் கடைக்குள் பொருத்தப்பட்டுள்ளதா அல்லது வெளியேவா, 24 மணி நேரமும் மதுவை எடுக்க முடியுமா? மேலும், 21 வயதுக்குக் குறைவுடைய யாராவது இதில் மது வாங்க முடியுமா? இந்தக் கடை எங்கு உள்ளது, எப்படிச் செயல்படுகிறது என்பது பற்றியெல்லாம் தெரிந்து செய்தி வெளியிடுங்கள்.

29 சதவிகித நாடாளுமன்ற வருகை பதிவு கொண்ட, நாடாளுமன்றத்துக்கே போகாதவர் இது குறித்து செய்தி வெளியிடுகிறார். 2019ல்தான் இந்த தானியங்கி இயந்திரம் திறக்கப்பட்டது. 2013, 2014, 2018 என நான்கு ஆண்டுகளில் நான்கு கடைகளில் அதிமுக ஆட்சியில்தான் திறக்கப்பட்டது. டாஸ்மாக் நிறுவனம் இந்த தானியங்கி இயந்திரத்துக்காக ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை. உள் கட்டமைப்பு வசதிகளை மது நிறுவனங்களே செய்கின்றன.

எதிர்க்கட்சித் தலைவர் , அன்புமணி உட்பட யாராவது நாடாளுமன்றத்தில் பேசி, இந்தியா முழுவதும் பூரண மது விலக்குக் கொள்கையை கொண்டு வர வேண்டியதுதானே. அதற்கு தைரியமில்லை. சட்டப்பேரவையில் சில்லறை விற்பனை நடைபெறும் 500 கடைகள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டுதான் அரசு நடத்த வேண்டிய அவசியம் திமுக அரசுக்கு இல்லை.

கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த 1977 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ஐந்தரை கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் செய்திகளைக் கொண்டு உண்மைத் தன்மையை ஆராயாமல் செய்தி வெளியிட வேண்டாம். டாஸ்மாக் நிறுவனம் மூலம் வரும் வருமானத்தை வைத்து அரசை நடத்துவது போன்று சித்தரித்து செய்தி வெளியிடும் பத்திரிகை, தொலைக்காட்சி, செய்தி நிறுவனம், சமூக வலைத்தளம் என யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று அமைச்சர் கூறி இருக்கிறார்.

90-களில் இந்திய சினிமாவில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை! யார் யாருக்கு எத்தனை கோடி?

மஞ்சமாதா என்கிற மாளிகைபுரத்து அம்மன் வரலாறு தெரியுமா?

30,000 டன்கள் பனித்துகளும், 500 டன்கள் பனிக்கட்டிகளும்... ஆயுட்காலம் மூன்று மாதங்கள் மட்டுமே! புரியலையா? படிச்சு பாருங்க தெரியும், புரியும்!

குளிர்கால சரும பராமரிப்பு - 5 பொருட்கள் போதுமே!

டென்னிஸ் உலகை ஆண்ட ரபேல் நடாலின் வெற்றிக் கதை!

SCROLL FOR NEXT