தூத்துக்குடி பகுதியையே பாழ்படுத்தி வந்தது ஸ்டெர்லைட் ஆலை. இதனை மூட வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர் பலரும். கடந்த அதிமுக ஆட்சியில் 2018ம் ஆண்டு மே 22ந் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது போலீசார், போராட்டக்காரர்கள் மீது வெறித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தமிழ்நாடு அரசு மூடியது.
இதற்குப் பின்னர் பல்வேறு காரணங்களுக்காக வழக்கு தொடர்ந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எப்படியாவது திறந்துவி வேண்டும் என வேதாந்தா குழுமம் முயற்சி செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாகத்தான் பராமரிப்புப் பணிகள் என காரணம் காட்டி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரி அண்மையில் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா குழுமம் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்துக்கு வந்தது.
வழக்கு விசாரணையின் போது, தமிழ்நாடு அரசு அனுமதித்த கழிவுகளை மட்டுமே அகற்ற வேதாந்தா குழுமத்துக்கு உரிமை உள்ளது. தமிழ்நாடு அரசு அனுமதிக்காத எந்தப் பணியையும் ஸ்டெர்லைட்டுக்குள் செய்ய வேதாந்தா குழுமத்துக்கு அனுமதி கிடையாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். மேலும், ஸ்டெர்லைட் ஆலையின் பாதுகாப்பை மதிப்பீடு செய்ய வேண்டும் என்ற வேதாந்தா குழுமத்தின் கோரிக்கையையும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்தனர். இந்த வழக்கின் விசாரணை அடுத்த மூன்று வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.