செய்திகள்

ஆறு மாநிலங்களில் அதிகரிக்கும் வைரஸ் காய்ச்சல்; விடுமுறை அறிவித்த புதுச்சேரி அரசு; தமிழக அரசு என்ன செய்யப்போகிறது?

ஜெ. ராம்கி

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வைரஸ் காய்ச்சலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி கடிதம் எழுதியிருக்கிறது. ஒவ்வொரு வாரமும் கூடுதலாக ஆயிரம் நோயாளிகள் காய்ச்சலின் காரணமாக பாதிக்கப்பட்டு வருவதால் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு கேட்டுக் கொண்டிருக்கிறது.

அதிகரித்து வரும் காய்ச்சல் தொடர்பாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, குஜராத் மற்றும் மகராஷ்டிரா மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கடந்த மார்ச் 8-ந்தேதி வரை 2,082 ஆக இருந்த கொரோனா பாதிப்பு, மார்ச் 15-ந் தேதியன்று 3,264 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மாநில அரசு கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் அதிகரிக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி பின்பற்ற வேண்டும் எனவும் மத்திய அரசு கேட்டுக் கொண்டதை தொடர்ந்து, மாவட்ட ரீதியாக பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இரண்டு நாட்களுக்கு முன்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு பெரிய அளவில் இல்லை. பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை விடும் சூழல் இங்கு ஏற்படவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையே புதுச்சேரியில் வைரஸ் காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகிறது. குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகளிடையே காய்ச்சல் பரவலாகியிருக்கிறது. பெரும்பாலான பள்ளிகளில் இறுதித் தேர்வுகள் நடப்பதால் தனியார் பள்ளிகளில் விடுமுறை அளிக்கப்படாததால் மாணவர்கள் காய்ச்சலுடன் பள்ளிகளுக்கு வரவேண்டியிருக்கிறது. ஆனால், அரசுப் பள்ளிகளை பொறுத்தவரை 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காய்ச்சல் கட்டுப்பாட்டில் இருப்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை தேவையில்லை. தமிழகத்தில் அதற்கான அவசியம் இல்லை .தேவையில்லாமல் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக பொதுமக்கள் அச்சப்பட வேண்டியதில்லை என்று அமைச்சரும் தெரிவித்திருக்கிறார். ஆனால், ஒவ்வொரு நாளும் நிலைமையை கண்காணித்து, தீவிரத்தை உணர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கிறது

திருச்சியில் 5 குழந்தைகள் உள்பட 26 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் 5 பேர் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மற்றவர்களி வீட்டின் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியிருக்கிறது. கெரொனா தடுப்பூசி இதுவரை எடுத்துக் கொள்ளாத 13 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் விஷயத்தில் அரசு கவனத்துடன் இருக்கவேண்டும். அனைத்து பள்ளிகளுக்கும் உடனே விடுமுறை அறிவித்துவிட்டு, எஞ்சியுள்ள தேர்வுகளை ஆன்லைன் மூலமாக நடத்தவேண்டும் என்பது பெற்றோர்களின் கோரிக்கை. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது?

அதர்வாவுடன் இணையும் பிரபல கண்டென்ட் கிரியேட்டர்!

சிக்மா வகைப் பெண்களின் சிறப்பியல்புகள் தெரியுமா?

ஈரானில் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!

Fatty Liver பாதிப்பு இருப்பவர்களுக்கான சிறந்த 7 உணவுகள்! 

ஸ்கூட்டர் ஓட்டும் பெண்களுக்கு சில பயனுள்ள டிப்ஸ்கள்!

SCROLL FOR NEXT