பா.ஜ.க - காங்கிரஸ் 
செய்திகள்

பா.ஜ.க., காங்கிரஸுக்கு 2023ஆம் ஆண்டு எப்படியிருக்கும்?

ஜெ.ராகவன்

2024 ஆம் ஆண்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த ஆண்டு அரசியல் ரீதியில் முக்கியமானது. ஆளும் பா.ஜ.க., தனது இடத்தை தக்கவைத்துக் கொள்ளவும், தென்னிந்தியாவில் தனது எல்லையை விரிவுபடுத்தவும் தவிர முனைப்பு காட்டி வருகிறது. காங்கிரஸ் கட்சி தனது பலத்தை பெருக்கிக் கொண்டு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து தேர்தலில் குதிக்கத் தயாராகி வருகிறது.

2022 ஆம் ஆண்டில் தேர்தல் நடைபெற்ற 7 மாநிலங்களில் குஜராத், உ.பி., மணிப்பூர், கோவா, உத்தரகண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களில் வெற்றிபெற்ற பா.ஜக., இந்த ஆண்டு புதிய இலக்குகளுடன் தேர்தலை சந்திக்கத் தயாராகி வருகிறது. மேகாலயம், திரிபுரா, நாகாலாந்து, மிஜோரம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும், கர்நாடகம், தெலங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னோடியாக இவை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது கர்நாடகம், மத்தியப் பிரதேசம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க. நாகாலாந்து மற்றும் மேகாலயத்தில் ஆளுங்கட்சி கூட்டணியாக உள்ளது. இந்த இடங்களை தக்கவைத்துக் கொள்வதுடன், தெலங்கானாவில் பாரத் ராஷ்ட்ரீய சமிதியிடமிருந்து ஆட்சியை கைப்பற்றவும், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸிடமிருந்து ஆட்சியை பறிப்பதையும் சவாலாகக் கொண்டுள்ளது.

கர்நாடகத்தில் பா.ஜ.க. தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரான அமித் ஷா தெரிவித்துள்ளார். காங்கிரஸுடன் ரகசிய உறவு வைத்துள்ள மதச்சார்பற்ற ஜனதாதளத்துடன் எந்த உறவும் இனி கிடையாது என்று திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.

தெலங்கானாவில் எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று பா.ஜ.க. நினைக்கிறது. கர்நாடகம், மத்தியப் பிரதேசம், திரிபுராவில் ஆளுங்கட்சியான பா.ஜ.க.வுக்கு எதிர்ப்பு அலை வீசுவதால் அங்கு மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதும் மேகாலயம் மற்றும் நாகாலாந்தில் வெற்றிக் கூட்டணியை அமைப்பதும் பா.ஜ.க.வுக்கு சவால்கள் நிறைந்ததாகவே இருக்கும்.

காங்கிரஸ் கட்சியை பொருத்தவரை இந்த ஆண்டு தேர்தல் என்பது போராட்டமாகவே இருக்கும். மக்களை ஒன்றிணைக்கும் வகையில் ராகுல் காந்தி மிகவும் துணிச்சலுடன் ஒற்றுமை யாத்திரை நடத்தி வந்தாலும், அவை வாக்குகளாக மாறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும் பல்வேறு அரசியல் தலைவர்களுக்கும் பிரதமர் பதவி கனவு இருக்கும் நிலையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் காங்கிரஸ் தலைமையில் ஒன்று சேர்ந்து ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்பார்களா என்பது ஐயம் நிறைந்ததாகவே உள்ளது.

2022 இல் குஜாராத், இமாச்சல மாநிலங்களுக்கு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், குஜராத்தில் படுதோல்வி அடைந்த காங்கிரஸ் கட்சிக்கு, இமாச்சலத் தேர்தல் வெற்றி ஆறுதலாக அமைந்தது. கர்நாடகம் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிர்ப்பு அலைகள் தோன்றியுள்ள நிலையில், காங்கிரஸ் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, தீவிர பிரசாரம் செய்து ஆட்சியை கைப்பற்றுமா என்பது தெரியவில்லை. குறைந்தபட்சம் இந்த இரண்டு தேர்தல்களிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றால்தான் 2024 மக்களவைத் தேர்தலை தைரியமாக எதிர்கொள்ள முடியும்.

எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருந்து பா.ஜ.க.வை மக்களவைத் தேர்தலில் வீழ்த்துமா? அல்லது எதிர்க்கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நீடித்து அது பா.ஜ.க.வின் வெற்றிக்கு வழி வகுக்குமா என்பது 2023 ஆம் ஆண்டு 9 மாநிலங்களில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின் போது தெரிந்துவிடும்.

Buddha Quotes: புத்தரின் 15 வாழ்வியல் கருத்துக்கள்!

இரவில் தாமதமாக சாப்பிடுபவரா நீங்க? அச்சச்சோ, அது ரொம்ப தப்பாச்சே!

காலம் காலமாக நின்று பேசும் மாமல்லபுரமும் மறக்கப்பட்ட மாமல்லனும்!

அந்தப் படத்தில் ரஜினியுடன் நடித்திருக்க கூடாது! – குஷ்பு வருத்தம்!

எலான் மஸ்க் தொழில்நுட்பத்திற்கு பச்சைக்கொடி… அடேங்கப்பா! 

SCROLL FOR NEXT