செய்திகள்

ஹரியானா அமைச்சர் மீது பெண் பாலியல் புகார்: பயிற்சியாளர் இடைநீக்கம்!

ஜெ.ராகவன்

ரியானா முன்னாள் அமைச்சர் மற்றும் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் சிங்குக்கு  எதிராக பாலியல் புகார் தெரிவித்த இளநிலை பெண் தடகள பயிற்சியாளரை விளையாட்டுத்துறை அமைச்சகம் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

எந்தவித முன்னெச்சரிக்கையும் இல்லாமல் கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி இந்த இடைநீக்க உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக அந்தப் பெண் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். இடைநீக்க உத்தரவில் ஹரியானா விளையாட்டுத்துறை இயக்குநர் யஷேந்திர சிங் கையெழுத்திட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், ‘எந்தவொரு நடவடிக்கையிலும் முதல்வர் மனோகர்லால் பெயரை இதில் சம்பந்தப்படுத்தக்கூடாது’ என்று அதிகாரிகள் நிர்பந்தம் கொடுப்பதாகவும் அந்தப் பெண் பயிற்சியாளர் கூறி உள்ளார்.

கடந்த நான்கு மாதங்களாக பயிற்சியளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக விளையாட்டுத்துறையில் தமது முன்னேற்றம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இளம் தடகள பெண் பயிற்சியாளர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2022ம் ஆண்டு டிசம்பரில் முன்னாள் அமைச்சர் சந்தீப் சிங், பாலியல் ரீதியாகத் தம்மை துன்புறுத்தியதாக அந்தப் பெண் பயிற்சியாளர் குற்றம் சாட்டியிருந்தார். ‘சந்தீப் சிங், இந்திய ஹாக்கி அணியின் கேப்டனாக இருந்தவர். முதலில் உடற்பயிற்சி நிலையத்தில் என்னை சந்தீப் சிங் பார்த்தார். பின்னர் இன்ஸ்டாகிராம் மூலம் என்னிடம் தொடர்பு கொண்டார். தொடர்ந்து சந்திக்கவும் வற்புறுத்தினார்’ என்று அந்தப் பெண் பயிற்சியாளர் தனது குற்றச்சாட்டில் தெரிவித்திருந்தார்.

‘உங்களின் தேசிய விளையாட்டுப் போட்டி தொடர்பான சான்றிதழ் என்னிடம் உள்ளது. எனவே, என்னை வந்து சந்திக்கவும்’ என்று அடிக்கடி செய்தி அனுப்பினார். துரதிருஷ்டவசமாக எனது சான்றிதழ்களை தடகள சம்மேளனம் தவறுதலாக எங்கோ வைத்துவிட்டது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நான் பேசி வருகிறேன்’ என்றும் அந்த பெண் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

‘ஒருவழியாக அமைச்சரை சந்திக்க முடிவு செய்து சில ஆவணங்களுடன் நான் சென்றபோது, சந்தீப் சிங் என்னிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார்’ என்றும் அந்தப் பெண் பயிற்சியாளர் கூறியுள்ளார்.

இதனிடையே, ‘தம் மீதான புகார்கள் முற்றிலும் ஆதாரமில்லாதவை’ என்று சந்தீப் சிங் தெரிவித்துள்ளார். ‘கடந்த ஜனவரியில் என் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்ட உடனேயே நான் எனது பதவியை ராஜினாமா செய்துவிட்டேன்’ என்றார் அவர்.

சந்தீப் சிங் மீதான புகார்களை விசாரிக்க ஹரியானா அரசு மூவர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக்குழுவை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இதுவரை அவர் மீது குற்றப்பத்திரிகை எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை.

Buddha Quotes: புத்தரின் 15 வாழ்வியல் கருத்துக்கள்!

இரவில் தாமதமாக சாப்பிடுபவரா நீங்க? அச்சச்சோ, அது ரொம்ப தப்பாச்சே!

காலம் காலமாக நின்று பேசும் மாமல்லபுரமும் மறக்கப்பட்ட மாமல்லனும்!

அந்தப் படத்தில் ரஜினியுடன் நடித்திருக்க கூடாது! – குஷ்பு வருத்தம்!

எலான் மஸ்க் தொழில்நுட்பத்திற்கு பச்சைக்கொடி… அடேங்கப்பா! 

SCROLL FOR NEXT