சென்னையை அடுத்துள்ள பொழிச்சலூர் கமிஷனர் காலனியைச் சேர்ந்த பாலாஜி அமெரிக்காவில் உள்ள ஒரு கோயிலில் சமையல்காரராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஐஸ்வர்யா தனது மகன் மற்றும் மகளுடன் சென்னையில் வசித்து வருகிறார். கணவன் அமெரிக்காவிலும் தான் சென்னையிலும் இருப்பது குறித்து கடந்த சில மாதங்களாகவே மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து இவர் இருந்து இருக்கிறார். மன அழுத்தத்துக்காக ஐஸ்வர்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வந்து இருக்கிறார்.
இந்த நிலையில் ஜஸ்வர்யா தனது மகன் மற்றும் மகளுடன் சென்னை விமான நிலையத்தில் உள்ள திரையரங்கம் ஒன்றில் சினிமா பார்க்க வந்திருக்கிறார். திடீரென அவர் குழந்தைகளிடம் தான் கழிவறைக்குச் சென்று வருவதாகக் கூறிவிட்டுச் சென்றிருக்கிறார்.
திரையரங்கை விட்டு வெளியே வந்த ஐஸ்வர்யா விமான நிலைய உள்நாட்டு முனையம் நடைபாதை வழியாக, பன்னாட்டு முனையம் அருகே உள்ள அடுக்கு மாடி கார் பார்க்கிங் பகுதிக்கு வந்திருக்கிறார். வேகமாக வந்த அவர் யாரும் எதிர்பாராத நிலையில் நான்காவது மாடிக்கு ஓடி இருக்கிறார். அதைக் கண்ட பலரும் சத்தம் போட்டு அவரைத் தடுக்க முயற்சி செய்து இருக்கிறார்கள். ஆனாலும், அவர் நான்காவது மாடி தடுப்பு சுவரின் மீது ஏறி கீழே குதித்து விட்டார். கீழே விழுந்த அவர் ரத்த வெள்ளத்தில் மிதந்து சற்று நேரத்திலேயே இறந்து விட்டார்.
இது குறித்துத் தகவல் அறிந்த விமான நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டி மற்றும் காவல் துறையினர் விரைந்து வந்து அந்தப் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு, திரையரங்கில் இருந்த குழந்தைகள் மற்றும் உறவினர்களை அழைத்து விசாரித்த போலீசார், கடந்த இரண்டு நாட்களாக அதிகமான மன அழுத்தத்தில் இருந்த ஜஸ்வர்யா சினிமா பார்க்க குழந்தைகளை அழைத்துச் சென்று, அவா்களை திரையரங்கில் விட்டு விட்டு தான் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு குழந்தைகளை சினிமா பார்க்க விட்டுவிட்டு தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.