செய்திகள்

தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு இஸட் பிளஸ் பாதுகாப்பு!

ஜெ.ராகவன்

பிரபல தொழிலதிபரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு இஸட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் இந்தியாவில் இருந்தாலும் சரி, வெளிநாடு பயணம் மேற்கொண்டாலும் சரி அவர்களுக்கு இஸட் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். இதற்கான செலவை அம்பானி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முகேஷ் அம்பானிக்கு தொழில் ரீதியாக அச்சுறுத்தல்கள் உள்ளன. அம்பானி உயிருக்கு குறிவைப்பதன் மூலம் நாட்டை நிதி ரீதியாக சீர்குலைக்க சிலர் திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது. அம்பானிக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பது குறித்து மும்பை போலீஸார், மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மத்திய அரசும் உறுதிசெய்துள்ளது.

இந்த சூழலில் தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இஸட் பிளஸ் பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

வர்த்தக விவகாரங்கள் தொடர்பாக அவர் அடிக்கடி வெளிநாடுகள் செல்வதால் அப்போதும் அவருக்கு இஸட் பிளஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்த்து.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ண முராரி மற்றும் அஸ்ஸானுதீன் அமானுல்லா ஆகியோர் கொண்ட அமர்வு முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு உள்நாட்டிலும், வெளிநாடு செல்லும்போது இஸட் பிளஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டனர். எனினும் இதற்காகும் செலவை முகேஷ் குடும்பத்தினர் ஏற்கவேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர் என்று அவரது சார்பிலான மூத்த வழக்குரைஞர் முகுல் ரோட்டகி தெரிவித்தார்.

முன்னதாக முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இஸட் பிளஸ் பாதுகாப்பு அளிப்பதை எதிர்த்து திரிபுரா மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. எனினும் இந்த வழக்கில் குறுக்கிட விரும்பவில்லை என்றுகூறி மனுவை உச்சநீதிமன்றம் முடித்துவைத்தது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானிக்கு இஸட் பிளஸ் பாதுகாப்பு வழங்கபடுகிறது. இதற்கான பணத்தை அவர்கள் செலுத்துகிறார்கள் என்றாலும் இஸட் பிளஸ் பாதுகாப்பு என்பது குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் முக்கிய பதவிகளில் உள்ள சிலருக்கு மட்டுமே வழங்கப்படும் மிக உயர்ந்த பாதுகாப்பு ஆகும்.

இதன் கீழ், மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த சுமார் 55 ஆயுதமேந்திய கமாண்டோக்கள் 24 மணி நேரமும் காவலில் இருப்பார்கள். குண்டு துளைக்காத கார், மூன்று ஷிப்டுகளில் எஸ்கார்ட் மற்றும் தேவைப்படும் போது கூடுதல் பாதுகாப்பும் இவர்களுக்கு வழங்கப்படும். தேவைப்பட்டால் தேசிய பாதுகாப்புப் படையின் (NSG) கமாண்டோக்களின் கூடுதல் பாதுகாப்பும் அளிக்கப்படும்.

இஸட் பிளஸ் பாதுகாப்பில் உள்ளவர்கள் நாட்டின் எந்த பகுதிக்கு சென்றாலும் அதிநவீன ஆயுதங்களுடன், கமாண்டோக்களுடன் ஒரு பைலட் வாகனம் மற்றும் வாகனங்கள் எப்போதும் அவர்களை பின்தொடர்ந்து செல்லும்.

கடந்த ஆண்டு மும்பையில் முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகே வெடிகுண்டு நிரப்பப்பட்ட கார் ஒன்று நின்றது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இருமுனைக் கோளாறு நோயின் அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி?

தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்ளும் வழிமுறைகள்! 

உலகின் ஒரே கொதிக்கும் நதி எது தெரியுமா?

வெந்நீரால் அபிஷேகம் செய்யப்படும் அதிசய சிவன் கோயில்!

சிறுகதை - ஸ்கூட்டர் ராணி!

SCROLL FOR NEXT