eCommerce
eCommerce Image credit - forbes.com
அறிவியல் / தொழில்நுட்பம்

வியாபாரம் செய்ய கடையும் வாடகையும் எதற்கு? இருக்கவே இருக்கு மின்வணிகம் என்ற மார்க்கம்!

என். சொக்கன்

சில ஆண்டுகளுக்கு முன்னால், மின்வணிகம் (eCommerce) என்றதும் அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற பெரிய நிறுவனங்களின் பெயர்கள்தான் பலருக்கும் நினைவுக்கு வந்திருக்கும். ஆனால் இன்றைக்கு, நம்மைச் சுற்றி நூற்றுக்கணக்கான மின்வணிகக் கடைகள் இருக்கின்றன. சொல்லப்போனால், காய்கறி, பழங்கள், மளிகைப் பொருட்களில் தொடங்கிக் கணினி, கார், நகைகள் போன்ற விலை உயர்ந்த பொருட்கள்வரை எல்லாம் மின்வணிகத்தில் விற்கப்படுகின்றன, வாங்கப்படுகின்றன. ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான இணையக் கடைகள் வந்துவிட்டன.

இன்றைக்கு நீங்கள் ஒரு பொருளைத் தயாரித்து விற்க விரும்புகிறீர்கள் என்றால், அதற்கு ஒரு கடையைத் தொடங்கி, அதற்கு வாடகை கொடுத்து, மின்சாரக் கட்டணம் செலுத்தி, அங்கு வேலை செய்வோருக்குச் சம்பளம் கொடுத்து, வாடிக்கையாளர்களை வரவேற்று, உங்கள் பொருட்களைப்பற்றி விளக்கிச் சொல்லி, விலை பேசி அவற்றை விற்கவேண்டிய தேவை இல்லை. இதனால் நீங்கள் ஒரு குறிப்பிட்ட புவியியல் பரப்புக்குள் சிக்கியிருக்கவேண்டியதும் இல்லை.

சில கிளிக்குகளில் ஓர் இணையத் தள முகவரியை விலைக்கு வாங்கிக்கொள்ளலாம், மேலும் சில கிளிக்குகளில் அதில் ஒரு மின்கடையை நிறுவலாம். அடுத்த சில கிளிக்குகளில் உங்கள் பொருட்களை வலையில் ஏற்றி, பணம் வாங்கும் ஏற்பாடுகளைச் செய்துகொண்டு, உங்கள் கடையை உலகுக்கு அறிமுகப்படுத்திவிடலாம், வணிகத்தைத் தொடங்கிவிடலாம்.

eCommerce

இப்படி நீங்கள் சொந்தக் குதிரையை ஓட்ட விரும்பாவிட்டாலும் பரவாயில்லை. ஏற்கெனவே உள்ள குதிரைகளிலும் ஏறிப் பயணம் செய்யலாம். எடுத்துக்காட்டாக, அமேசான் போன்ற புகழ் பெற்ற மின்வணிக நிறுவனங்கள் அனைத்தும் பொதுவான விற்பனையாளர்களை வரவேற்கின்றன. இதனால், நீங்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தளங்களில்கூடப் பங்கேற்கலாம், அவர்களிடம் ஏற்கெனவே உள்ள வாடிக்கையாளர் வட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஒரே ஒரு விஷயம்… இதற்கு நீங்கள் அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட சதவிகிதத் தொகையைக் கட்டணமாகச் செலுத்தவேண்டியிருக்கும். ஆனால், புதிதாக ஒரு மின்வணிகக் கடையை அமைப்பதில் இருக்கும் மற்ற பல சிரமங்களை அவர்கள் குறைக்கிறார்கள் என்பதாலும், பெரும் எண்ணிக்கையிலானவர்களின்முன் உங்கள் பொருட்களைக் கொண்டுசென்று விற்பனையைக் கூட்டுகிறார்கள் என்பதாலும், கூட்டிக்கழித்துப் பார்த்தால் இது உங்களுக்கு நன்மைதான்.

மின்வணிகத்தின் இன்னொரு முக்கியமான தேவை, பொருட்களை வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு செல்வது. எடுத்துக்காட்டாக, நீங்கள் கன்னியா குமரியிலிருந்து ஒரு கடிகாரத்தை விற்கிறீர்கள் என்றால், அது காஷ்மீரில் இருக்கும் வாடிக்கையாளருடைய வீட்டுக்கு எப்படிக் கொண்டு சேர்ப்பது? இதைத் தளவாடக் கையாளல் (Logistics Handling) என்கிறார்கள். பெரும்பாலான மின்வணிகத் தளங்கள் கூடுதல் கட்டணம் பெற்றுக்கொண்டு இதையும் செய்து கொடுத்துவிடுகின்றன.

பொருட்கள் மட்டுமில்லை, சேவைகளும் மின்வணிகத்தின் மூலம் வழங்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, நீங்கள் எங்காவது செல்ல விரும்பினால் ஊபர், ஓலா போன்ற செயலிகளில் சென்று ஆட்டோ அல்லது டாக்ஸியைப் பதிவுசெய்கிறீர்கள். அவர்கள் உங்களுக்குப் போக்குவரத்துச் சேவையை வழங்குகிறார்கள். இதுவும் உலக அளவில் மிக விரைவாகப் பரவிக்கொண்டிருக்கிறது.

இன்றைய மின்வணிகத்தின் மிகப் பெரிய சிக்கல், ஏராளமானோர் இதில் நுழைந்துவிட்டார்கள் என்பதுதான். அதனால், மற்றவர்களுக்கு நடுவில் நீங்கள் தனித்துத் தெரிந்தால்தான் வாடிக்கையாளர்களை ஈர்க்கலாம். அதற்கு நீங்கள் தரமான பொருட்கள், சேவைகளைச் சரியான விலையில், விரைவாக வழங்கவேண்டும். விற்பனைக்குப் பிந்தைய சேவையையும் சிறப்பாகச் செய்யவேண்டும். இதை உணர்ந்து செயல்படுகிறவர்கள் மின்வணிகத் தொழில்நுட்பங்களை நன்கு பயன் படுத்திக்கொண்டு தங்களுடைய தொழிலைப் பலமடங்கு பெருக்கலாம், உலக அளவில் விரிவுபடுத்தி வெற்றியடையலாம்.

கண்களைக் கட்டிக்கொண்டு பெருமாளுக்கு கிரீடம் சாத்தும் கோயில் எது தெரியுமா?

ஊட்டச்சத்து நிறைந்த விதவித சப்பாத்திகளின் ஆரோக்கிய நன்மைகள்!

செல்வ செழிப்பு தரும் சில எளிய வாஸ்து குறிப்புகள்!

நேரம் எனும் நில்லாப் பயணி!

ஸ்வஸ்திக் வடிவ கிணறு பற்றி தெரியுமா உங்களுக்கு?

SCROLL FOR NEXT