சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள, கிங் ஃபைசல் சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் (KFSHRC) இதயக் குழு, உலகின் முதல் முழு ரோபோடிக் இதயமாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.
கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் நீடித்த இந்த செயல்முறை, Last stage இதய செயலிழப்பு கொண்ட 16 வயது நோயாளிக்கு செய்யப்பட்டது. இந்த நோயாளிக்கு இத்தகைய அறுவை சிகிச்சை செய்வதற்குக் காரணம், அவர் தனது மார்பை அறுவை சிகிச்சை செய்து திறக்க வேண்டாம் என மருத்துவர்களிடம் கேட்டுக் கொண்டதுதான்.
இந்த இருதய மாற்று அறுவை சிகிச்சைக்கு, இருதய அறுவை சிகிச்சை நிபுணர் ஃபெராஸ் கலீல் தலைமை தாங்கினார். இதற்காக மூன்று நாட்களில் ஏழு முறை தனது குழுவுடன் அவர் பயிற்சி செய்தார். இருதய அறுவை சிகிச்சை முறைகளுக்கு இந்த மேம்பட்ட ரோபோ தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதால், நோயாளியின் குணமடையும் காலம் குறையும். இது நோயாளிகள் விரைவாக குணமடைந்து அவர்களின் அன்றாட வாழ்க்கைக்குத் திரும்ப அனுமதிக்கிறது.
ரோபோடிக் இதயமாற்று அறுவை சிகிச்சையானது பல அபாயங்களைக் குறைத்து நோயாளியின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் திறனையும் கொண்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய KFSHRC மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி, இந்த சாதனையை 60களில் செய்யப்பட்ட முதல் இதய மாற்று அறுவை சிகிச்சையுடன் ஒப்பிட்டார்.
இந்த அறுவை சிகிச்சை, நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான புதிய வாய்ப்புகளைத் திறந்துள்ளது. சுகாதாரத் துறையில் இது மைல் கல்லாகப் பார்க்கப்படும். அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நோயாளி தற்போது குணமடைந்து வருகிறார். அவருக்கு எவ்விதமான மோசமான அறிகுறிகளும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது உண்மையிலேயே மருத்துவத்துறையில் பெரும் சாதனையாகப் பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் இது போன்ற அறுவை சிகிச்சையின் மூலமாக, பல நோயாளிகளின் உயிரை பாதுகாக்க முடியும் என மருத்துவர்கள் நம்புகின்றனர். உலகிலேயே முதன்முறை முழுவதும் ரோபோவால் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இது எதிர்காலத்தில் பல முன்னேற்றங்களைப் பெற்று, மேலும் பல மாற்றங்களுடன் மேம்பட்ட தொழில்நுட்பமாக மாறும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.
இதுபோன்ற விஷயங்களில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவது, உண்மையிலேயே பாராட்டத்தக்க ஒன்றுதான். ஒருபுறம் இந்தத் AI தொழில்நுட்பத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் கண்டு நாம் அஞ்சினாலும், மறுபுறம் இதன் நன்மைகளைப் பற்றியும் சற்று யோசிக்க வேண்டும்.