நீங்கள் அடிக்கடி இணையம் பயன்படுத்தும் நபராக இருந்தால், ஏதேனும் வலைதளத்தின் உள்ளே நுழைவதற்கு முன் “I’m Not a Robot” என்ற பாதுகாப்பு அம்சம் இருப்பதை கவனித்திருப்பீர்கள். இதை கிளிக் செய்வதன் மூலம், நாம் மனிதன்தான் என்பதை நிரூபித்து, இணையதளத்தில் உள்ள பல்வேறு செயல்பாடுகளுக்கு அனுமதி பெறுகிறோம். ஆனால், ரோபோக்களால் ஏன் இந்த பெட்டியை கிளிக் செய்ய முடியாது? வாங்க தெரிஞ்சுக்கலாம்.
“I’m Not a Robot” என்ற பாதுகாப்பு முறையை உருவாக்கியதற்கான முக்கிய காரணம் இணையதளங்களை தாக்கும் ரோபோக்களை கட்டுப்படுத்துவதே ஆகும். இந்த ரோபோக்கள், இணையதளங்களில் தானாகவே பதிவு செய்து, தகவல்களைத் திருடி, இணையதளங்களை செயலிழக்கச் செய்யும். இதனைத் தடுக்கவே இணையதள உரிமையாளர்கள் இந்த வகையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கின்றனர்.
இந்த பாதுகாப்பு அம்சத்தை கிளிக் செய்யும்போது, நாம் பல்வேறு வகையான பணிகளைச் செய்ய வேண்டும். உதாரணமாக சிதைந்த படங்களை கண்டறிந்து ஒழுங்குபடுத்துவது, சில குறிப்பிட்ட வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பொருத்தமான பெட்டிகளில் எழுதுவது போன்றவற்றை மனிதர்கள் எளிதாக செய்தாலும், ரோபோக்கள் இவற்றை செய்ய சிரமப்படும்.
இந்த பாதுகாப்பு அம்சத்தில் பயன்படுத்தப்படும் படங்கள் மற்றும் எழுத்துக்கள் மெஷின் லேர்னிங் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படுகின்றன. இதனால், மனிதர்கள் எளிதாக செய்யும் பணிகளை ரோபோக்கள் செய்வது கடினமாகிறது. ஆனால், தற்போது தொழில்நுட்பம் தொடர்ந்து வளர்ந்து வருவதால், ரோபோக்கள் இந்த சவால்களை எதிர்கொள்ளும் வகையில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும், மனிதர்களின் சிந்தனைத் திறன் படைப்பாற்றலை முழுமையாக அவற்றால் பிரதிபலிக்க முடியாததால், ரோபோக்களால் இத்தகைய சவால்களை முற்றிலுமாக கடக்க முடிவதில்லை.
“I’m Not a Robot” என்னும் அம்சம், இணையப் பாதுகாப்பில் ஒரு முக்கிய கருவியாக இருக்கிறது. இந்தத் தொழில்நுட்பம் மனிதர்களையும் ரோபோக்களையும் பிரித்தறியும் திறனை மேம்படுத்தியுள்ளது. தொழில்நுட்பம் எவ்வாறு வளர்ந்தாலும் மனிதர்களின் சிந்தனைத்திறன் படைப்பாற்றலுக்கு நிகராக, ரோபோக்களால் நெருங்க முடியாது. இதன் காரணமாகவே, இந்த பாதுகாப்பு அம்சம் பரவலாக இணையதளங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.