World Organ Donation Day 
ஸ்பெஷல்

ஆகஸ்ட் 13 - உலக உடல் உறுப்பு தான தினம்! உடலில் உள்ள 25 உறுப்புகள் வரை தானமாக கொடுக்க முடியும் தெரியுமா?

ராதா ரமேஷ்

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13ஆம் தேதி அன்று உலக உடல் உறுப்பு தான தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. மக்களின் அன்றாட வாழ்வியல் பழக்கவழக்கங்களாலும், உணவு பழக்கவழக்கங்களாலும் பாதிக்கப்படும் உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உடல் உறுப்புகளை தானமாக வழங்குவதின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி உலக உடல் உறுப்பு தான தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. 

பொதுவாக நாம் அனைவரும் ரத்த தானம் மற்றும் கண் தானம் பற்றிய அதிகமாக அறிந்திருப்போம். இவற்றைப் பற்றிய விழிப்புணர்வு நமக்கு அதிகம் ஏற்படுத்தப்பட்டதால்  அதன் நடைமுறை பயன்பாடுகளை நாம் அறிந்து விட்டோம். ஆனால் இதனோடு சேர்த்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுவது உடல் உறுப்பு தானம்.

உலகில் ஒவ்வொரு 12 நிமிடங்களுக்குள்ளும் ஒரு நோயாளி  உறுப்புகள் கிடைக்காமல் இறந்து போவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 

உடல் உறுப்பு தானம் என்றால் என்ன? தன்னுடைய உடலில் இரண்டாக இருக்கக்கூடிய உறுப்பில்  ஒன்றையோ, அல்லது உறுப்பின் ஒரு பகுதியையே கொடுத்து மரணத்தின் பிடியில் சிக்கியிருக்கும் மற்றொரு மனிதனுக்கு மறுவாழ்வு அளிப்பதே உடல் உறுப்பு தானம் ஆகும்.

உடல் உறுப்பு தானத்தை பொருத்தவரை இரண்டு வகையான தானங்கள் உள்ளன. ஒன்று உயிருடன் இருக்கும் போதே ஒருவருக்கு உடல் உறுப்பை தானமாக அளிப்பது, மற்றொன்று இறந்தபின் அதாவது மூளைச்சாவு அடைந்த பின் தனது உறுப்புகளை மற்றோருக்கு தானமாக அளிப்பது. 

உயிருடன் இருக்கும் போது தானம் அளிப்பது: 

ஒருவர் உயிருடன் இருக்கும் போதே அவரது உடல் உறுப்புகளில் ஒன்றையோ அல்லது உடல் உறுப்பின் சிறு பகுதியையோ தேவைப்படும் ஒருவருக்கு அளித்து அவரையும் வாழ வைப்பது இத்தகைய தானத்தில் அடங்கும். எடுத்துக்காட்டாக சிறுநீரகங்களில் ஒன்று, நுரையீரலில் ஒரு பகுதி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, ஈரலின் ஒரு பகுதி ஆகியவற்றை தானமாக அளிக்கலாம். 

இரண்டு சிறுநீரகங்களில் ஒன்றை தானமாக அளிக்கும் போது நாளடைவில் ஒரு சிறுநீரகமே அதன் முழு வேலையையும் செய்ய பழகிவிடும். கல்லீரலில் ஒரு பகுதியை தானமாக அளிக்கும் போது நாளடைவில் அது தானாகவே வளர்ந்து விடும். நுரையீரலின் ஒரு பகுதியையும் தானமாக அளிக்கும்போது நாளடைவில் அது சீராக வேலை செய்ய எந்த தடையும் இருக்காது. 

இறந்த பின் தானமாக அளிப்பது : 

ஒருவர் ஏதேனும் விபத்துகளில் சிக்கி மூளை சாவு அடைந்தாலோ, அல்லது வேறு ஏதாவது முறையில் மூளைச் சாவு அடைந்து விட்டாலோ அவரது உறுப்புகளை தேவைப்படும் மற்றொருவருக்கு தானமாக அளிப்பதுதான் இறந்த பின் தானமாக அளிப்பது. இதில் இரண்டு சிறுநீரகங்கள், கணையம், கல்லீரல், குடல், கண் விழித்திரை (கார்னியா) நுரையீரல் போன்றவற்றை தானமாக அளிக்கலாம். ஒருவர் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்து விட்டால், அவரது மூளை செயலிழந்து விடும். ஆனால் மற்ற உறுப்புகள் உயிருடன் இருக்கும். இத்தகைய உறுப்புகளை அவரது கூட குடும்ப  உறுப்பினர்கள் தானம் கொடுக்க முன் வருவதன் மூலம் அவர் இறந்த பின்பும் அவரது உறுப்புகளால் பலரை வாழ வைக்க முடியும்.

சிறுகுடல், கணையம், தோல், நுரையீரல், எலும்பு மஜ்ஜை என ஒருவர் தன் உடலில் உள்ள கிட்டத்தட்ட  25 உறுப்புகளை தானமாக கொடுக்க முடியும். 

யாரெல்லாம் உடல் உறுப்பு தானம் கொடுக்க முடியாது?:

சர்க்கரை நோய், இதய நோய் புற்றுநோய், மஞ்சள் காமாலை உயர் ரத்த அழுத்தம், ரத்த சோகை, பால்வினை நோய், புற்றுநோய், போதை பழக்கம் உள்ளவர்கள்  இப்படி நாள் பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை தவிர நல்ல ஆரோக்கியமாக இருக்கும் அனைவரும் தாராளமாக உடல் உறுப்புகளை தானமாக வழங்கலாம். 

18 முதல்  60 வயது நிரம்பிய ஆரோக்கியமாக இருக்கும் ஆண் பெண் அனைவரும் தாராளமாக உடல் உறுப்புகளை தானமாக வழங்கலாம். 

உடல் உறுப்புகளை தானமாக வழங்க விருப்பமுள்ளவர்கள் தங்களுக்கு அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் உங்களுக்கு வழங்கப்படும் வாகன ஓட்டுனர் உரிமத்திலும்  நீங்கள் ஒரு Donor  என்பதை நீங்கள் பதிவு செய்து கொள்ளலாம். 

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக உடல் உறுப்புகளை தானமாக வழங்குவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என்பது சிறப்பு. 

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT