பெண்களுக்கும் பூக்களுக்குமான பந்தம் தெய்வீகத்தன்மையுடையது. பூக்களையும் பெண்களையும் பிரித்து பார்க்க இயலாது. பெண் என்பவள் பூப்போன்ற மென்மையுடையவள் என்பதாலேயே பூவையே பெண்ணாக உருவகப்படுத்தி பெருமை படுத்தினார்கள் கவிஞர் பெருமக்கள். பெண்களும் மலரை போலவே தான் பூக்குமிடமெல்லாம் மணம் வீசக்கூடியவர்கள் , இருக்குமிடமெல்லாம் தெய்வீகதன்மையை பரவ செய்பவர்கள்.
ரோஜாவை தாலட்டும் தென்றல்!...
அழகு என்றால் ரோஜா. ரோஜா என்றாலே அழகு. ரோஜா மலர்களின் மகாராணி. ஒற்றை ரோஜாவின் அழகில் உலகமே காணாமல் போகும். ரோஜாமலரை பற்றி பாடாத கவிஞர்களோ கவிதைகளோ கிடையாது. பலவகை ரோஜாக்கள் வந்தாலும் பளிச்சென்று பன்னீர் வாசனையை கொடுக்கும் இளஞ்சிவப்பு நிற ரோஜாக்களின் அழகும் வாசனையும் பேரழகு. அதில் பேபி பிங்க் ரக பன்னீர் ரோஜாக்களோ கொள்ளை அழகு.
வீடுகளில் தொட்டிகளில் வைத்தாலே பல பூக்களை தரக்கூடியது ரோஜா செடிகள் மட்டுமே. பெண்கள் தங்கள் தலையில் சரம்சரமாய் பலவேறு பூக்களை தொடுத்து வைத்தாலும் இளஞ்சிவப்பான நிறத்தில் மலர்ந்து மணத்துடன் இருக்கும் ஒன்றை ரோஜாவையும் அதன் இரு இலைகளையும் சேர்த்து தலையில் வைக்கும் அழகிற்கு உலகில் வேறு ஈடில்லை. அன்றலர்ந்த காலை நேர ரோஜாக்களில் மயங்கி உறைந்து கிடக்கும் பனித்துளிகளை கண்டு கவிதை பாடாமல் இருக்கமுடியுமா? ரோஜாவே ஒரு கவிதை தானே! ஒற்றை ரோஜாவை கொண்டு ஒரு காதல் சாம்ராஜ்யத்தையே உருவாக்கிவிடுகிறார்களெனில் ரோஜாவின் பெருமையை உணர்ந்து கொள்ளாமல் இருக்கத்தான் முடியுமா? பெண்களின் நாணம் போல் மொட்டவிழாமல் இருக்கும் பெங்களூர் ரோஜாக்கள் கொள்ளையழகு.
ஒற்றை ரோஜாவிலேயே காதலை பெறுபவர்கள். ரோஜாக்களின் கூட்டமான பூங்கொத்து கிடைத்தால் சும்மா விடுவார்களா? பூங்கொத்தை அளித்து அந்த பூக்களையே பரிசாக பெற்று விடுகிறார்கள் புத்திசாலி காதலர்கள். இன்று கலர்கலராக சற்று மணம் குறைவான கண்ணுக்கு விருந்தளிக்கும் ஹைபிரிட் ரோஜாக்கள் விழாக்களையும் மாலைகளையும் அலங்கரிக்க வந்து விட்டன.
அந்த ரோஜாக்கள் கண்ணை பறிக்கும் பல்வேறு நிறங்களில் அந்த இடங்களுக்கு வண்ணங்களுக்கு, துணிகளுக்கு ஏற்றாற்போல் கிடைக்கின்றது. ரோஜா மலரே ராஜகுமாரி... என்ற பாடலை மறக்க முடியுமா? நெஞ்சையள்ளும் சிவப்பு நிற ரோஜா தோட்டத்தில் அழகாக உடையணிந்த கதாநாயகன் கைகளை வானத்தை நோக்கி உயர்த்தியபடி.... ரோஜா....ரோஜா... உரத்தகூரலில் தன் காதலியை நினைத்து பாடும் பாடலால் கவரப்படாதவர்கள் தான் இருக்க முடியுமா?
மல்லிகையே!மல்லிகையே! தூதாக போ!..
"மலர்களிலே அவள் மல்லிகை" என சும்மாவா பாடிவைத்தார் கவியரசர். மல்லிகை என் மனம் மயங்கும் பொண்ணான மலரல்லவோ? என மல்லிகையின் சிறப்பை பாடாத பெண்கள் தான் இருக்க முடியுமா? மல்லிகை முல்லை செந்தமிழ் பிள்ளை என பூக்களை பெண்களோடு உருவகப்படுத்தியும் பாடியுள்ளனர். மலர்களின் இளவரசி மல்லிகையே. அதன் மணத்திற்கு ஈடுஇணையில்லை.
மல்லிகை மொட்டாக பறித்து வைத்தாலும் அழகு. பூத்ததும் நெருக்கமாக தொடுத்தாலும் பேரழகு. மாலை மங்கு நேரத்தில் மொட்டவிழும் தருணங்களில் தோட்டமே குபீரென மலரும். அப்போது அத்தோட்டத்தில் இயற்கை பரப்பி தெளிக்கும் அந்த வாசனை திரவியத்திற்கு ஈடுஇணையேது இவ்வுலகில். மல்லிகை பூக்கும் அந்த அந்தி சாயும் நேரத்தில் அதன் செடியின் அருகே நின்று பார்த்தால் வாசனை மனதை மயக்கி நம்மை எங்கோ அழைத்து செல்லும்.
தோட்டம் இல்லாதவர்கள் உதிரி பூக்களை மாலை வாங்கி வந்து தொடுக்க ஆரம்பிக்கும் போதே நம் கைச்சூட்டிலே குப்பென மலர்ந்து மணம் வீசும். மல்லிகைபூக்களை நெருக்கமாக தொடுத்து மூடிய டிபன்பாக்ஸில் வைத்து விட்டால் காலையில் திறந்து பார்க்கும் போது வரும் நறுமணத்தில் நம் காலைநேரமே புத்துணர்ச்சி பெரும்.
மல்லிகை மலர் அழகு மட்டுமல்ல.. உடல் சூட்டை பெருமளவு தணிக்க கூடியது. பெண்கள் தலைநிறைய மல்லிகையை சூடும்போது உடல்சூடு குறைந்து புத்துணர்ச்சி பெறுவார்கள். பெண்களின் நீண்ட கருங்கூந்தலில் அந்த வெள்ளைநிற மல்லிகை சரம் சூடியதை பார்த்தாலே ஒரு தெய்வீக அழகு தெரியும்.
ஜாதி மல்லி பூச்சரமே...!
ஜாதி மல்லி பூச்சரமே! என வியப்பதாகட்டும்..."மல்லிகை பூவுக்கும் ஜாதியை வைத்த மனிதனை திருத்தும் வழி என்னடி " என ஆதங்கப்படுவதாகட்டும்..ஜாதி மல்லியையும் கொண்டாட தவறியதேயில்லை கவிஞர்கள். ஜாதியே பிடிக்காதவர்களுக்கு கூட ஜாதிமல்லியை பிடித்து விடும். அப்படி ஒரு மனம் மயக்கும் நறுமணம் ஜாதிமல்லிக்கு உண்டு.. பூக்களிலேயே அதிக வாசமுள்ள மலர் எனில் அது ஜாதிமல்லியாக தான் இருக்கும். வெள்ளைநிற பூவில் அங்கங்கே இளம் வயலட் நிறத்தை சேர்த்தது அழகுக்கு அழகு சேர்க்கும்.
ஜாதிமல்லியை நெருக்கமாக தொடுத்த சரத்தை ஒரு டப்பாவில் போட்டு பூத்ததும் திறந்தால் வீடே மணக்கும். மலர்களிலேயே அதிக மணம் கொண்ட மலர் ஜாதிமல்லி என்றால் அது மிகையில்லை. ஒரு சிறிய துண்டு ஜாதியை தலையில் வைத்தால் வீடே வாசனையில் மிதக்கும்.
பொதுவாகவே பூக்கள் கண்களுக்கு பரவசத்தையும் மனதிற்கு மகிழ்ச்சியையும் தரவல்லவை. அதிலிருந்து வரும் நறுமணம் உடலுக்கு புத்துணர்ச்சியை தரக்கூடியது. மலர்கள் மன இறுக்கத்தை போக்கும் சக்தி படைத்தவை. காலையில் புதியதாக பூத்த மலர்களை காணும்போது அந்த நாளுக்குண்டான உற்சாகத்தை தரும்.
பூக்கள் சமத்துவம் உடையவை. தெய்வத்தின் சந்நிதியிலோ, மங்கையின் கூந்தலிலோ , இறந்தவர்களின் சமாதியிலோ என எங்கிருந்தாலும் அதன் மணத்தை பரப்ப தயங்குவதில்லை. மலர்கள் தெய்வீகத் தன்மை உடையவை. நாமும் மலர்களின் மணங்களை போல நம் மனங்களால் நறுமணத்தை பரப்பி மகிழ்வோம்!!!!