இதயம் நம் உயிரின் இயந்திரம். இதயம் செயலிழந்தால் உடனடியாக நம் உயிர் போய்விடும். இத்தகைய சூழலில் இதயமாற்று அறுவை சிகிச்சை என்பது ஒரு புதிய நம்பிக்கையை விதைத்தது. அதாவது, மனிதனின் நீண்டகால முயற்சிகளில் ஒன்றான இறந்த உறுப்பை உயிருள்ள உடலில் பொருத்தி உயிரை மீட்டெடுக்கும் கனவை இது நனவாக்கியது. இந்த அறுவை சிகிச்சையின் வரலாறு மருத்துவ உலகின் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியது.
இதயத்தை மாற்றுவதற்கான முதல் முயற்சிகள் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தொடங்கப்பட்டன. ஆனால், அப்போதைய மருத்துவ தொழில்நுட்பத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறித்த புரிதல் போதிய அளவு இல்லாத காரணத்தால், இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. மாற்று இதயம் ஏற்றுக் கொள்ளாமல் போவது, தொற்று, ரத்தப்போக்கு ஆகியவை இதில் முக்கிய சவால்களாக இருந்தன.
முதல் இதயமாற்று அறுவை சிகிச்சை:
1967 ஆம் ஆண்டு, தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த இதய அறுவை சிகிச்சை நிபுணர் ,கிரிஸ் பெர்னாட், மருத்துவ உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு சாதனையை நிகழ்த்தினார். அவர் ஒரு மூளைச்சாவு நோயாளிடமிருந்து பெறப்பட்ட இதயத்தை, மற்றொரு நோயாளியின் உடலில் பொருத்தி முதல் வெற்றிகரமான இதயமாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். இந்த சாதனை மருத்துவ உலகில் புதிய தொடக்கமாக இருந்தது.
முன்னேற்றங்கள்: கிரிஸ் பெர்னாடின் வெற்றியைத் தொடர்ந்து இதயமாற்று அறுவை சிகிச்சை துறையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டன. நோய் எதிர்ப்பு மருந்துகளின் கண்டுபிடிப்பு, அறுவை சிகிச்சை நுட்பங்களில் ஏற்பட்ட மாற்றங்கள், உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்தது ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக இருந்தன.
இருப்பினும் இதயமாற்று அறுவை சிகிச்சை தொடர்பாக பல சவால்களும் எழுந்தன. தொற்று, இதயம் ஏற்றுக்கொள்ளாமை, ரத்தப்போக்கு போன்ற சிக்கல்களை முற்றிலுமாக தவிர்க்க முடியவில்லை. மேலும், உறுப்பு தானம் குறித்த சமூகப் பார்வைகள், நெறிமுறைகள் தொடர்பான சிக்கல்களும் அதிக அளவில் இருந்தன.
இந்தியாவில் இதயமாற்று அறுவை சிகிச்சை: இந்தியாவிலும் இதய மாற்று அறுவை சிகிச்சை துறை கடந்த சில சகாப்தங்களில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. பல தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் இந்த வகை அறுவை சிகிச்சையை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு இன்னும் போதுமான அளவில் இல்லை என்பது ஒரு பெரிய சவாலாக உள்ளது.
2023-ல் இந்தியாவில் நடந்த இதயமாற்று அறுவை சிகிச்சைகளில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. அதுவும் ஒரே ஆண்டில் மொத்தம் 70 இதயமாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளன. இதயம் காக்கும் மருத்துவ நுட்பங்கள், மருத்துவ வசதி மருத்துவர்களின் திறமை ஆகியவற்றை அரசு தொடர்ந்து மேம்படுத்தி வருவதால், இதயமாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.
இதய மாற்று அறுவை சிகிச்சையின் எதிர்காலம் மிகவும் பிரகாசமாகவே உள்ளது. ஸ்டெம்செல் ஆராய்ச்சி, மரபணு பொறியியல் மற்றும் 3D தொழில்நுட்பம் போன்றவை இதயமாற்று அறுவை சிகிச்சை துறையில் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. ஒருவேளை எதிர்காலத்தில் செயற்கை இதயங்கள் அல்லது நோயாளியின் சொந்த செல்களைக் கொண்டு வளர்க்கப்பட்ட இதயங்கள் பயன்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதயமாற்று அறுவை சிகிச்சை என்பது மனித உயிரை காப்பாற்றும் ஒரு அற்புதமான தொழில்நுட்பமாகும். இதில், பல சவால்கள் இருந்தாலும், தொடர்ச்சியான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுகள் மூலம் இதய மாற்று அறுவை சிகிச்சை துறை மேலும் வளர்ச்சி அடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.