World Food Day 
ஸ்பெஷல்

உலகளாவிய பசிக் குறியீட்டுப் பட்டியலில் 105வது இடத்தில் இந்தியா!

அக்டோபர் 16: உலக உணவு நாள்!

தேனி மு.சுப்பிரமணி

1945 ஆம் ஆண்டில் அக்டோபர் 16 ஆம் நாளில் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (Food and Agriculture Organization) தொடங்கப்பட்டதை நினைவு கூரும் வகையில் அக்டோபர் 16 ஆம் நாளை, உலக உணவு நாள் (World Food Day) என்று அறிவித்தது. 1979 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்ற இவ்வமைப்பின் 20 வது பொது மாநாட்டில், ஹங்கேரியின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் பால் ரொமானி என்பவரின் முன் முயற்சியினால் இத்தீர்மானம் ஏகமனதாக ஏற்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்போது 150-க்கும் அதிகமான நாடுகளில் உலக உணவு நாள் கொண்டாடப்படுகிறது.

இந்நாள், உலகம் முழுவதுமுள்ள உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் பட்டியல் அவதிப்படும் மக்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், பசியை எதிர்த்துப் போராடுவதற்கும், மோதல் பகுதிகளில் அமைதிக்குப் பங்களிப்பதற்கும், போர் மற்றும் மோதலுக்கான ஆயுதமாக பசியைப் பயன்படுத்துவதை நிறுத்துவதையும் கூடுதல் நோக்கமாகவும் கொண்டுள்ளது. இதே போன்று, மாறிவரும் உணவுப் பழக்கம், அதனால் உருவாகும் உடல் குறைபாடு மற்றும் வாழ்க்கை முறை போன்றவைகளைச் சுட்டிக்காட்டவும் இந்த நாள் உதவுகிறது என்கின்றனர் ஊட்டச்சத்து வல்லுநர்கள். இந்த நாளில் உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகள் முதல் உணவினை ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் நடைமுறையும் கடைப்பிடிக்கப்படுகிறது.

1981 ஆம் ஆண்டு முதல், உலக உணவு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளை முதன்மையாகக் கொண்டு இந்நாள் கொண்டாடப்படுகிறது. இக்கருப்பொருளானது பெரும்பான்மையாக வேளாண்மையை முதன்மைப்படுத்தியே அமைக்கப்பட்டு வருகிறது. 2024 ஆம் ஆண்டுக்கான கருப்பொருளாக, "சிறந்த வாழ்க்கை மற்றும் சிறந்த எதிர்காலத்திற்கு உணவுகளுக்கான உரிமை" என்பதாகும்.

உலகின் பல பகுதிகளில், மக்களுக்கு இன்னும் உணவு மற்றும் தங்குமிடம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் கிடைக்கவில்லை. உலக உணவு நாளானது, பொதுவாக உலகம் முழுவதும் பசியைப் போக்குவதையே முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பொதுவாக, ஊட்டச்சத்துக் குறைபாடு மில்லியன் கணக்கான மக்களின் உடல் நலத்தை எதிர்மறையாகப் பாதிக்கிறது, வளர்ச்சி மற்றும் வளர்ச்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதனால்தான் உணவுப் பாதுகாப்பையும், உலகத்தில் உள்ள அனைவருக்கும் சத்தான உணவுகள் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டிய நிலை இருக்கிறது. தற்போது, ​​இவ்வுலகத்தில் உள்ள அனைவருக்கும் உணவளிக்க போதுமான உணவை உற்பத்தி செய்யப்படுகிறது. இருப்பினும், உலக மக்கள்தொகையில் 10% பேருக்கு பசி இன்னும் தொடர்கிறது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் 1.3 பில்லியன் கிலோ உணவு வீணாக்கப்படுகிறது. அதாவது, மொத்த உணவு உற்பத்தியில் சுமார் 20% உணவு வீணாகப் போகிறது. உலக உணவு நாளில் உணவு வீணாவதைக் குறைக்கவும், உணவு வீணாகப் போவதற்கு முன்பாக, கூடுதலாக இருக்கும் உணவினை தேவையான மக்களுக்கு அளிக்க வேண்டும் என்று இந்நாளில் வலியுறுத்தப்படுகிறது. 

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, உலகில் 10 பேரில் ஒருவர் ஊட்டச்சத்துக் குறைபாடு பிரச்சனையை எதிர் கொள்கின்றனர். 2020 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி, உலகளவில் 5 வயதுக்குட்பட்ட ஐந்து குழந்தைகளில் ஒருவர் வளர்ச்சி குறைவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டு ஆப்பிரிக்காவில் ஐந்தில் ஒரு பங்கு மக்கள் பட்டினியை எதிர்கொண்டனர் என்பதும் கவனத்திற்குரியது.

2024 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பசிக் குறியீட்டு (Global Hunger Index) அட்டவணையில் இடம் பெற்றுள்ள நாடுகளில், மிகவும் கவலை தரக்கூடிய (Extremely Alarming) பட்டியலில் எந்த நாடும் இல்லை. இருப்பினும்,  கவலைதரக்கூடிய (Alarming) பட்டியலில் தெற்கு சூடான், புருண்டி, சோமாலியா, யேமன், சாட் மற்றும் மடகாஸ்கர் என்று 6 நாடுகள் இடம் பெற்றிருக்கின்றன. கடுமையான (Serious) பட்டியலில் 36 நாடுகளும், நடுநிலையான (Moderate) பட்டியலில் 37 நாடுகளும், குறைவான (Low) பட்டியலில் 51 நாடுகளும் இடம் பெற்றிருக்கின்றன. உலகளாவிய பசிக் குறியீட்டுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 129 நாடுகளில் இந்தியா 105 வது இடத்தில் கடுமையான (Serious) பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது என்பது கவனத்திற்குரியது.

உலக மக்களைப் பசிக்கொடுமையில் இருந்து உடனடியாக, இந்த ஒரு நாளில் மட்டும் மீட்டுவிட முடியாது. ஆனால், அவர்களது பசியைப் போக்க, பசிக் கொடுமையிலிருந்து அவர்களை மீட்க முடிந்தவரை நாம் ஒவ்வொருவரும் நம்மால் இயன்ற பங்களிப்பைச் செய்ய முடியும். தேவையான உணவை முன் கூட்டியேத் திட்டமிட்டுச் சமைக்கலாம். தாங்கள் உண்ணும் உணவு வீணாவதைத் தவிர்க்கலாம். உணவு மிச்சமாகும் என்று கருதும் நிலையில், அவ்வுணவினை முன்கூட்டியேப் பசியால் தவிக்கும் மக்களுக்குத் தானமாக அளிக்கலாம்.

இங்கு நாம் “பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்” என்கிற வள்ளலார் அவர்களது கூற்றையும், "தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்" என்கிற பாரதியார் பாடலையும் நினைவில் கொள்ளலாம்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT