உத்தரகண்ட் மாநிலம், நைனிடாலில் ஹல்த்வானி என்ற இடத்தில் ரயில்வேக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து வசித்து வரும் 50,000-த்துக்கும் மேலான மக்களை 7 நாட்களுக்குள் வெளியேற்றும் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
பிரச்னை இதுதான்: 2013 ஆம் ஆண்டில் ரவிசங்கர் ஜோஷி என்பவர் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில் ஹல்த்வானி ரயில்நிலையத்தை ஒட்டி ஓடும் கவுலா நதியில் சிலர் சட்டவிரோதமாக மணல் எடுப்பதாகவும், இதில் ரயில்வே லைன் அருகில் வசித்து வருபவர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறியிருந்தார்.
இதையடுத்து ரயில்வேயும் இந்த வழக்கில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்த இடம் ரயில்வேக்கு சொந்தமானது என்றும் ஆக்கிரமிக்கப்பட்ட அந்த பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றுமாறும் 2016 ஆம் ஆண்டில் உத்தரவிட்டது. அப்பகுதி மக்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். பாதிக்கப் பட்டவர்களின் கருத்துக்களையும் கேட்குமாறு உச்சநீதிமன்றம் 2017 இல் உயர்நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில் மீண்டும் விசாரணை நடத்திய உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆக்கிரமிப்பாளர்களை அகற்றுமாறு உத்தரவிட்டது. முந்தைய அரசு அரசியல் ஆதாயத்துக்காகவும், வாக்கு வங்கி அரசியலுக்காகவும் ஆக்கிரமிப்புகளை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளது. மேலும் 2016 ஆண்டு நவம்பர் 6 ஆம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு மாநில அரசு மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது. ஆனால், அதற்கான காரணங்களை தெளிவுபடுத்தவில்லை. அந்த மனுவையும் 2017 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டதையும் சுட்டிக்காட்டியது.
ஆக்கிரமிப்பாளர்கள் 7 நாட்களுக்குள் அகற்றப்பட வேண்டும். தேவைப்பட்டால் ராணுவத்தின் உதவியுடன் குடியிருப்பாளர்களை வெளியேற்றி, ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடிக்கலாம் என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பில் கூறியிருந்தது.
இதையடுத்து ஹல்த்வானி மாவட்ட நிர்வாகம், குடியிருப்பாளர்கள் உடனடியாக தங்கள் பொருள்களை எடுத்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு காலி செய்யுமாறும் இல்லாவிட்டால் ஆக்கிமிப்பு செய்யப்பட்ட இடங்கள் இடிக்கப்படும் என்று தெரிவித்தது.
இதனிடைய அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்களை அப்புறப்படுத்தக்கூடாது என்று கோரி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்தனர். இப்பகுதியில் வசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள் என்று கூறப்படுகிறது.
பா.ஜ.க. ஆட்சி செய்துவரும் உத்தரகண்டில், பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவாக குரலெழுப்பினர். முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவருமான ஹரீஷ் ரவாத், ஆக்கிரமிப்பு பகுதிகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து டேராடூனில் உள்ள தனது வீட்டில் மெளனப் போராட்டம் நடத்தினார். ஆக்கிரமிப்புகளை இடிக்கும் அரசின் முடிவால் 50,000-த்துக்கும் மேலான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டக்கார்ர்கள், “நாங்கள் அந்த இடத்தில் 70 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம், அங்கு கடைகள், வியாபார நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், வங்கிகள் இயங்கி வருகின்றன. மசூதியும், கோயிலும் உள்ளது. 4,000 குடியிருப்புகளில் 20,000 பேர் வாழ்ந்து வருகிறோம். குடியிருப்புகளுக்கு குடிநீர் மற்றும் மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன” என்று கூறிவருகின்றனர். மேலும் சிலர் அந்த இடத்தை குத்தகைக்கு எடுத்துள்ளதாகவும், ஏலத்தில் வாங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதனிடையே இது தொடர்பான வழக்கு ஜன. 5 இல் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஹல்த்வானியில் ரயில்வேக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து வசித்து வரும் 50,000-த்துக்கும் மேலான மக்களை 7 நாட்களுக்குள் வெளியேற்றும் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடைவிதித்தது.
முதலில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கூறப்படும் நிலம் ரயில்வேக்கு மட்டும் சொந்தமானதா அல்லது அரசு நிலமும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். 50,000 பேரை ஒரே இரவில் வெளியேற்றிவிட முடியாது. இது தொடர்பாக மாநில அரசும், ரயில்வேயும் கலந்து ஆலோசித்து நடைமுறைக்கு சாத்தியமான ஒரு தீர்வுகாண வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை பிப்ரவரி 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு வரவேற்கக்கூடிய செயலாகும். ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றப்படும் பட்சத்தில் அவர்களுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதுதான் உச்சநீதிமன்றம் சொல்லும் சேதி.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு அங்கு வசித்து வரும் மக்களுக்கு தாற்காலிக நிம்மதியை கொடுத்துள்ளது.
ஆக்கிரமிப்பு என்றால் கடந்த 70 ஆண்டுகளாக அப்பகுதியில் மக்கள் வசிக்க அரசு எவ்வாறு அனுமதித்தது? அங்கு கடைகளும், குடியிருப்புகளும் உருவாக யார் காரணம்? அவர்களுக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்புகள் வழங்கியது யார்? அதிகாரிகள் வழங்கியிருந்தால் அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. வாக்கு வங்கி அரசியலுக்காக அரசு தெரிந்தே ஆக்கிரமிப்புகளை அனுமதித்ததா?
2013 ஆம் ஆண்டிலிருந்து இந்த விவகாரம் வழக்கில் இருக்கும்போது ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்ய ஏன் எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என்று பல கேள்விகள் எழுகின்றன.
பல்வேறு பகுதிகளில் தடுப்பணைகள், பாலங்கள் கட்டுவது உள்ளிட்ட காரணங்களைக் கூறி அரசாங்கங்கள் ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றியுள்ளனர். ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு சாதகமாக நீதிமன்றங்கள் தீர்ப்பு அளித்துள்ள போதிலும் அவர்களுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்யப்படாமல் வாழ்வதற்கு இடமின்றி தவிக்கிறார்கள் என்பது நாடறிந்த உண்மையாகும்.
ஆக்கிரமிக்கப்பட்ட இடம் ரயில்வேக்கு சொந்தமானதாக இருக்கலாம். அதை யாறும் மறுக்கவில்லை. ஆனால், இந்த விவகாரத்தில் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொள்ளாமல், மனிதாபிமான முறையில் செயல்பட அரசு முன்வரவேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்புமாக இருக்கிறது .