ஸ்பெஷல்

கதை இங்கே… முடிவு எங்கே – வெற்றி விழா!

சேலம் சுபா

“பெரும் பாக்கியம் பெற்றவர்கள் நாங்கள்” – கதை முடிவைத் தந்த வெற்றியாளர்களின் முடிவில்லாத களிப்பு. 

     ழுத்துலக கிரைம் மன்னர் ராஜேஷ்குமார் எழுதும் கதைகளுக்கான முடிவுகளைத் தருபவர்களுக்கு ஆச்சர்யப்பரிசு காத்திருக்கிறது என்று கல்கி குழுமம் அறிவித்து வாசகர்களுக்காக "கதை இங்கே முடிவு.எங்கே.." என்ற போட்டி ஒன்றை நடத்தியது. ஆர்வத்துடன்  வந்து குவிந்த நுற்றுக்கணக்கான முடிவுகளில் இருந்து ஆறு வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்தார் ராஜேஷ்குமார்.

    அவர்களுக்கான பரிசாக ரூபாய் ஆயிரத்துடன் ஆச்சர்யப்பரிசாக ராஜேஷ்குமாருடன் மதிய உணவுடன் கலந்துரையாடவும். ஏற்பாடு செய்திருந்தது கல்கி குழுமம்.

மார்ச் 5 ஆம் தேதி கோயமுத்தூர் வடவெள்ளியில்  உள்ள ஸ்வர்கா எனும் நட்சத்திர உணவகத்தில் ராஜேஷ்குமாரை சந்திக்க வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பிற்கு இதோ என மின்னல் வேகத்தில் அவரவர் ஊர்களில் இருந்து புறப்பட்டு விட்டனர் நமது உற்சாக வாசக எழுத்தாளர்கள்.

சென்னையிலிருந்து தனது கணவர் மகாதேவனுடன் முதல் நாளே அறை எடுத்து தங்கிய மூத்த வாசகி ஜெயகாந்தி, கேரளா மூனார் கல்லூரியில் படிக்கும் நிலையிலும் தனது தாய் தம்பியுடன் வந்து சேர்ந்த ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகையும்  இளம் வெற்றியாளருமான ராமலக்ஷ்மி, கணவரின் அண்ணன் வீட்டுத்திருமணத்தை அடுத்த நாள் வைத்துக்கொண்டு இந்த சான்ஸ் மீண்டும் கிடைக்காது என்று உறவினரின் ஆதரவோடும் கணவரின் துணையுடனும் முகமெங்கும் புன்னகையுடன் தஞ்சாவூரிலிருந்து வந்த சந்திரவதனா, இந்த நிகழ்வுக்காக முடிவு அறிவிக்கப்பட்ட முதல் நாளில் இருந்தே பரபரப்புடன் என்று வரும் இந்நாள் எனக் காத்திருந்து மதுரையிலிருந்து வந்து இறுதிவரை அதே பரபரப்புடன் மகிழ்ந்த வெற்றியாள சகோதரிகள் சாந்தினி ,உஷா தேவி, ஐந்து பெண்களுக்கு இடையில் வெற்றிபெற்ற ஒரேயொரு ஆண் மகனாக ஐ.டி துறையில் இருந்து, எழுத்தின் மீது தீரா ஆர்வத்துடன் எழுதியும் படித்தும் நேரங்களை நிர்வகித்து ஆவலுடன் வந்த சென்னை வெங்கடராமன், என ஹோட்டல் ஸ்வர்காவின் வரவேற்பறை கலகலத்தது.   

        இவர்கள் மட்டுமல்ல தனது தங்கையின் வீட்டு விழாவில் கலந்துகொண்டு விட்டு, அங்கு விருந்தை தவிர்த்து, தனக்காகக் காத்திருக்கும் ரசிகர்களுடன் உணவருந்தி மகிழ வந்தார் ராஜேஷ்குமார். சொன்ன நேரத்துக்கு மேல் சிறிது நேரம் அதிகமாகி விட்டாலும் வந்தவுடன் அனைவரிடமும் காத்திருப்பிற்கு சாரி சொன்ன அவரின் பெருந்தன்மையிலும் தங்கள் ஆதர்ச மனிதரைப் பார்த்த மகிழ்ச்சியிலும் வார்த்தைகள் வராமல் உணமையிலேயே சொர்க்கத்தில் இருப்பது போன்ற முகபாவத்துடன் முகமெல்லாம் சிரிப்புடன் அவருக்கு வணக்கம் சொல்லி வரவேற்றனர் வெற்றியாளர்கள் அனைவரும்.

     முதலில் பசித்த வயிற்றுக்கு உணவு தந்து பேசலாம் வாருங்கள் என அனைவரையும் அன்புடன் அழைத்து உணவு மேஜையில் அமரவைத்த பின் அறிமுகப்படலம் துவங்கியது. அவரைப் பார்த்த பரவசத்தில் இருந்தவர் களின் மவுனம் உடைபட்டு உரையாடல்கள் துவங்கியன. அவரவருக்குத் தேவையான உணவுகளை ஆர்டர் செய்து காத்திருந்த நேரத்தில் ஆறு பேரில் மூத்தவரான ஜெயகாந்தியின் அறிமுகத்தில் துவங்கி இளையவரான ராமலக்ஷ்மியின் ஆச்சர்ய அறிமுகத்துடன் போட்டிக் கதைகளைப்பற்றி கதைக்கத் துவங்கி விட்டனர்.

ஊமை டீச்சர், குற்றம் புரிந்தவன், தண்டனை தப்பாது , சந்திரகிரகணம், அந்த ஏழு பேர், இன்னொரு அம்மா கதைகளுக்கான முடிவுகளை தாங்கள் எப்படி யோசித்தோம் என்பதிலிருந்து ராஜேஷ்குமாரின் மனதிலிருந்த முடிவு என்ன என்று ஆர்வத்துடன் பகிர்ந்து கொண்டவர்களின் பேச்சை ரசித்து அவர்களின் கேள்விகளுக்கும் பதில் தந்தவாறு உணவை மிதமாக ருசித்தார் ராஜேஷ்குமார்.  இதில் சிறப்பு என்னவெனில் வந்திருந்த அனைவரின் கவனமும் ருசியான உணவை விட இனித்த உரையாடல்களில் இருந்ததுதான் ஆச்சர்யம்.

     போட்டியில் கலந்துகொண்ட முப்பெரும் தேவிகள் போன்ற மூன்று சகோதரிகளில் அதிர்ஷ்டவசமாக பரிசு கிடைத்த சகோதரிகள் சாந்தினி, உஷா இருவரும் மதுரையிலிருந்து வாங்கி வந்திருந்த அன்புப் பரிசையும் கல்கியின் சார்பில் செய்யப்பட்ட மரியாதையையும் செல்லமாக மறுத்தபடி ஏற்றுக்கொண்ட ராஜேஷ்குமார் தான் எழுதிய புத்தகங்களை தன் கையெழுத்திட்டு பரிசாக தந்தபோது, இதை விட வேறென்ன வேண்டும்? என்று ஆனந்தமானார்கள் வெற்றியாளர்கள்.

    எவ்வளவு கேள்விகள்? எவ்வளவு சந்தேகங்கள்? பாட்டனி படித்திருந்த சந்திரவதனாவும், கல்லூரிமாணவி ராமலக்ஷ்மியும் கிரைம் பற்றிய அறிவியல் பூர்வமான கேள்விகளைக் கேட்டு சுவாரஸ்யப் படுத்த , சாந்தினி உங்க கதைக்கு நான் தந்த முடிவைப் பார்த்து வீட்டுல எல்லோரும் சிரித்து இந்த முடிவைப்பார்த்து ராஜேஷ்குமார் போட்டியே வேண்டாம்னு சொல்லப் போறார்னு கலாயித்தும் விடா முயற்சியுடன் மீண்டும் மீண்டும் எழுதி வெற்றி பெற்றதை சொல்லி கலகலப்பு தர, ஜெயகாந்தி அமைதி என்றாலும் அவரின் கணவர் மகாதேவன் எழுப்பிய பல கருத்துகளுக்கு பதில் சொன்ன பாங்கும், நேர நிர்வாகத்தில் தனக்குள்ள ஆர்வத்துடன் ராஜேஷ்குமாரின் தினப்படி ஷெட்யூலைக் கேட்டு பேச்சு வெவ்வேறு பக்கம் சென்றாலும் விடாமுயற்சியுடன் இறுதிவரை அவரின் பதிலைப் பெற்ற விக்ரமாதித்தன் என்ற பெருமையை வெங்கட் தட்டிச் செல்ல... ஆஹா ... ஹோட்டல் ஸ்வர்காவே அதிர்ந்ததுல்ல!   

      மதியம் ஒரு மணிக்குத் துவங்கிய கலந்துரையாடல் மாலை ஐந்து மணியாகியும் நிறைவடையாமல் ஊருக்குப்போக வேண்டுமே என்ற ஆதங்கத்துடன் பிரிய மனமில்லாமல் சென்ற வாசகர்கள் போலவே தன் விலை மதிப்பில்லாத நேரத்தை சற்று அதிகமாகவே ஒதுக்கி வாசகர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டி, மறக்க முடியாத நாளைத் தந்த எழுத்தாளர் ராஜேஷ்குமார், தான் கிரைம் மன்னர் மட்டுமல்ல வாசகர்களின் மனங்களை மதிப்பதிலும் முடி சூடா மன்னன் என்பதையும் நிரூபித்தார்.

      இறுதியில் தங்கள் வாழ்வில் என்றுமே நினைத்து நினைத்து மகிழ வைக்கும் இந்த பரிசைத் தந்த கல்கிக்கும் ராஜேஷ்குமாருக்கும் மனமார்ந்த நன்றிகள் சொல்லி அனைவரும் விடைபெற்றபோது உண்மையில் அங்கு கல்கி எனும் பிம்பமும் அதன் தாக்கமும் வாசகர்களிடம் அதிகம் என்பதை உணர முடிந்தது.

வாசக  எழுத்தாளர்களின் நன்றி

என் உஷா தேவி, மதுரை


      “கதை இங்கே முடிவு எங்கே” போட்டியில் வெற்றி பெற்று மார்ச்  ஐந்தாம் தேதி அன்று கோவையில் எழுத்தாளர் ராஜேஷ்குமார் அவர்களுடன் உரையாட எனக்கு வாய்ப்பு தந்து என் சந்தோஷத்தை இரட்டிப்பாக்கிய கல்கி குழுமத்திற்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் .சிறந்த வரவேற்புடன் சுவையான உணவு அளித்து செவிக்கு உணவாக வெற்றியாளர்கள் ஆறு பேரும் ராஜேஷ் குமார் அவர்களுடன் அவரவர் எண்ணங்களையும் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டதும் அவருடைய அனுபவங்களை அவர் வாயிலாக சொல்லிக் கேட்டதும் மிகுந்த மகிழ்ச்சி அளித்தது.. இந்த அனுபவம் எனக்கு புது உற்சாகத்தை தந்து மேலும் எழுத ஊக்கத்தை தருகிறது..

சந்திரவதனா, தஞ்சாவூர்   

       மார்ச் ஐந்தாம் தேதி ராஜேஷ் குமார் அவர்களின் கதை இங்கே முடிவு எங்கே போட்டியில் வெற்றி பெற்ற எழுத்தாளர்களை வரவழைத்து கௌரவித்து, எதிர்பாராத இன்ப அதிர்ச்சியையும், அன்பு பரிசையும் அறுசுவை உணவையும் வழங்கிய கல்கி குழுமத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள். கல்கி குழுமம் ஒரு அவதார புருஷன் தான். கல்கி ஒரு முடிவிலி (infinity). கல்கி இந்த நிகழ்வின் மூலம் எங்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது

       இவ்வளவு எளிமையான ஒரு எழுத்தாளரை நாங்கள் சந்தித்ததே இல்லை. கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் எங்களுடன் செலவு செய்த அவருடைய பெரிய மனதிற்கு முன் நாங்கள் அனைவரும் வெறும் தூசி தான். நாங்கள் கேட்ட பல கேள்விகளுக்கு மனம் கோணாமல் பதிலளித்த அவரது பெரிய மனது என்னை வியப்படையச் செய்தது.

சாந்தினி, மதுரை

      கதை இங்கே ..முடிவு எங்கே ..? என்ற புதுமையான போட்டியில் வெற்றி பெற்ற ஆறு வாசகர்களையும் திரு ராஜேஷ்குமார் அவர்களை சந்திக்க வைத்து , பரிசுகளை அவர் கையால் வழங்கி வாசகர்களை கௌரவித்த  கல்கி குழுமத்திற்கு மிக்க நன்றி .

           இதுவரை எழுத்துக்கள் மூலமாகவே சந்தித்திருந்த என் அபிமான எழுத்தாளர் ராஜேஷ்குமார் சாரை கோவையில் ஒரு கொண்டாட்டமாக , கோவை சென்று நேரில் சந்தித்த நிகழ்வு என் வாழ்நாளில் மறக்க முடியாதது. ஓயாத எழுத்துப்பணி , குடும்பவிழா இவற்றுக்கிடையே , கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் எங்களுடன் கலந்துரையாடிய திரு ராஜேஷ்குமாரின் எளிமை வியக்க வைத்தது.

வெங்கடராமன் ராமசுப்ரமணியன் சென்னை

  ல்கி குழுமம் ஏற்பாடு செய்திருந்த, பிரபல நாவலாசிரியர் எழுத்தாளர் ராஜேஷ் குமார் உடனான சந்திப்பிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சேலம் சுபா அவர்கள் நிகழ்ச்சிக்கு அருமையாக ஏற்பாடு செய்திருந்தார். ராஜேஷ் குமார் அவர்கள் தனது பொன்னான நேரத்தை இளம் எழுத்தாளர்களுக்கு ஒதுக்கி பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். தினமும் குறைந்தது 5 பக்கங்களாவது எழுத வேண்டுமென்று கூறினார்.அவர் எவ்வாறு சிறு விஷயங்களையும் கவனித்து, குறிப்பெடுத்துக் கொள்கிறார், எப்படி  தினமும் நேரத்தை ஒதுக்கி,  எழுதுகிறார், கதைகளுக்கு ஆராய்ச்சி செய்கிறார் என்று பல்வேறு நுணுக்கங்களை பகிர்ந்து கொண்டார்.

      ஆயிரக்கணக்கான புதினங்களைக் குவித்த, ராஜேஷ் குமார் அவர்களின் எளிமை ஆச்சரியமளித்தது. பக்கத்து வீட்டில் குடியிருப்பவரைப் போல், மிகவும் சகஜமாக பேசினார். இளம் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதில் அவர் கொண்டுள்ள ஆர்வம் போற்றுதலுக்குரியது. கிட்டத்தட்ட  5 மணி நேரம், அவரது பொன்னான நேரத்தைப் பகிர்ந்தது, அவர் தமிழ் எழுத்தின் எதிர்காலத்தின் மீது கொண்டுள்ள அக்கறையை விளக்கியது. இன்னும் கேள்விகள் இருக்கிறதா என்று கூட,  அவர் நம்மை ஆர்வத்துடன் கேட்டு, நம்மை திக்குமுக்காடச் செய்தார். ராஜேஷ் குமார் அவர்கள் நூறாண்டு கடந்து, இன்னும் பல காலம் தமிழ்த்தாய்க்கு தொண்டு செய்ய வேண்டுமென்றும், இத்தகைய நிகழ்ச்சிகளை கல்கி குழுமம் தொடர்ந்து நடத்த வேண்டுமென்றும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன். 

ஜெயகாந்தி.மகாதேவன்

   பிரபல எழுத்தாளர் திரு ராஜேஷ் குமார் அவர் களுடன் நடைபெற்ற சந்திப்பு மற்றும் கலந்துரை யாடல் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக இருந்தது. நிகழ்ச்சி ஏற்பாடு செய்த கல்கி குழுமத்திற்கு எனது மனமார்ந்த நன்றி. என் வாழ்வில் அனுபவித்து மகிழ்ந்த மிக முக்கியமான நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. காரணம்,  எழுத்தாளர் திரு ராஜேஷ் குமார் அவர்கள், ஆறு வாரம் ஆறு சிறு கதைகளின் முற் பாதியை எழுத, வாசகர்கள் அதன் பிற் பாதியை எழுதி கதையை நிறைவு செய்ய வேண்டும் என அறிவித்திருந்த போட்டியில் வெற்றி பெற்ற ஆறு பேர்களில் நானும் ஒருத்தி. கோயம்பத்தூரில் ஹோட்டல் ஸ்வர்க்காவில் நடைபெற்றநிகழ்ச்சியில் திரு ராஜேஷ் குமார் அவர்களிடமிருந்து பெற்ற புத்தகமும் கல்கி குழுமம் வழங்கிய ஆயிரம் ரூபாய் பரிசு மற்றும் மதிய உணவும் அருமை. நினைவில் பசுமை மாறாமல் நிலைத்து நிற்கும் நிறைவான நாள்!  வாய்ப்பளித்த கல்கி குழுமத்தினருக்கு மீண்டும் நன்றி 

ராமலக்ஷ்மி, மூணாறு 

      நான் எட்டாம் வகுப்பு படித்த நாட்கள் முதலே ராஜேஷ் குமார் ஐயாவின் ரசிகை. அவரின் புத்தகங்கள் அனைத்துமே படித்து விடுவேன், திருவனந்தபுரத்தில் கல்லூரி படித்தாலும் அங்குள்ள தமிழ் டிபார்ட்மெண்ட் நூலகத்திற்கு இவரின் நாவல்களைப் படிக்கவே செல்வேன். அவரை எப்படியாவது ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை அது இவ்வளவு விரைவில் நிறைவேறும் என கனவிலும் நினைக்க வில்லை. வித்யாசமான போட்டி வைத்து என் கனவை நிஜமாக்கித் தந்த பாரம்பர்யமிக்க கல்கி குழுமத்திற்கு எனது நன்றி.

          ராஜேஷ்குமார் அவர்களின் முகநூல் பக்கம் மூலம் இந்தப் போட்டி பற்றி தெரிந்து எப்படியாவது வெற்றி பெற்று ஐயாவின் ஆசிகளைப் பெற வேண்டும் என்று போட்டியில் கலந்து கொண்டேன். இரண்டாவது கதையில் வெற்றி பெற்றேன். கல்கி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த அருமையான நிகழ்வில் ராஜேஷ்குமார் ஐயாவை  முதன்முறையாக பார்த்த தருணத்தை என்னால் மறக்க முடியாது... எனது இதயத்துடிப்பு அதிகமானது. பேச வார்த்தை வரவில்லை. இயல்பு நிலைக்கு திரும்ப சிறிது நேரம் ஆனது. எனது கேள்விகள் அனைத்திற்கும் பதில் கிடைத்தன. வாழ்வில் ஒருமுறையேனும் சந்தித்து விட மாட்டோமா? என ஏங்கிய எனக்கு இந்த வாய்ப்பு வரப்பிரசாதமாக அமைந்தது. அங்கு பெற்ற அனுபவங்கள் தற்போதும் நீங்கா நினைவுகளாக நெஞ்சில் நிற்கின்றன. எப்போதும் இருக்கும். என்னைப்போன்ற இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்த ஐயாவுக்கும் மற்றப் பத்திரிக்கைகள் செய்யாத இது போன்ற போட்டிகளை வைத்து எங்களுக்கு நீங்காத நினைவுகளைத் தந்த கல்கிக்கு மனமார்ந்த நன்றி.    

இத தெரிஞ்சுகிட்டா உங்க வீட்டு டைல்ஸ் கறையை இருக்கும் இடம் தெரியாமல் நீக்கிவிடலாம்! 

உணவுச் சேர்மானங்களின் குணநலன்கள் என்னவென்று தெரியுமா?

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

SCROLL FOR NEXT