World Turtle Day 
ஸ்பெஷல்

World Turtle Day 2024: பூமியின் பண்டைய பாதுகாவலர்கள்! 

கிரி கணபதி

ஒவ்வொரு ஆண்டும் மே 23 என்றால் உங்களுக்கு எது ஞாபகம் வருகிறதோ இல்லையோ, உலக ஆமைகள் தினம் நிச்சயம் ஞாபகத்திற்கு வரவேண்டும். இந்த சிறப்புமிக்க நாள் ஆமைகளின் முக்கியத்துவத்தையும் நமது சுற்றுச்சூழல் அமைப்புகளை பராமரிப்பதில் அவற்றின் முக்கிய பங்கையும் நினைவூட்டுகிறது. உலக ஆமைகள் தினம் ஆமைகள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், இந்த பழங்கால உயிரினங்களை பாதுகாப்பதில் நாம் எடுக்க வேண்டிய முயற்சிகளின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கிறது. 

உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாச்சாரங்களில் ஆமைகள் பெரும் மதிப்பைக் கொண்டுள்ள உயிரினங்களாக உள்ளன. புத்திசாலித்தனம், பொறுமையுடன் ஒப்பிடப்படும் ஆமைகள், நீண்ட ஆயுளைக் கொண்ட உயிரினங்களாகும். பல பழங்கால புராணங்களில் ஆமைகள் பூமியின் எடையை தங்கள் முதுகில் சுமந்து உலகை பாதுகாப்பதாக சித்தரிக்கப்படுகின்றன. 

மற்ற ஊர்வன வகைகளில் ஆமைகள் மிகவும் மாறுபட்ட உயிரினமாகும். உலகெங்கிலும் 350 க்கும் மேற்பட்ட இனங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை பெருங்கடல்கள், ஆறுகள், ஏரிகள் மற்றும் பாலைவனங்கள் உட்பட உலகில் எல்லா இடங்களிலும் வாழ்கின்றன. ஒவ்வொரு இனமும் மில்லியன் கணக்கான ஆண்டுகளாக தன்னை சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டுள்ளன. 

என்னதான் இவை பழங்கால உயிரினங்களாக இருந்தாலும், அவை பல அச்சுறுத்தல்களை எதிர் கொள்வதால் அவற்றின் உயிர்வாழ்வு பெரிதளவில் பாதிக்கப்படுகிறது. வாழ்விட அழிப்பு, மாசுபாடு, காலநிலை மாற்றம், சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகம் மற்றும் மீன்பிடி வலைகளில் தற்செயலாக மாட்டிக் கொள்வது போன்ற அச்சுறுத்தல்களை இவை சந்திக்கின்றன. இதனாலேயே பல ஆமை இனங்கள் இப்போது அழியும் நிலையில் உள்ளன. 

ஆமைகளை எப்படி பாதுகாக்க முடியும்? 

இன்று, உலக ஆமைகள் தினத்தில், ஆமைகளை பாதுகாப்பதற்கான வழிகளைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். இதன் மூலமாக உங்களால் ஒரு ஆமை காப்பாற்றப்பட்டாலும், அது இந்த இயற்கையை சமநிலையில் வைத்திருக்க பெரிதும் உதவும். 

  • முதலில் வெவ்வேறு ஆமை இனங்கள், அவற்றின் வாழ்விடங்கள் மற்றும் அவை எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் அறிந்த பின்னர் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் உங்களுக்குத் தெரிந்த அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். 

  • ஆமைகளை பாதுகாப்பதற்காக செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்குங்கள். உங்களால் நேரடியாக ஆமைகளைக் காப்பாற்ற முடியவில்லை என்றாலும், ஏதோ ஒரு வடிவில் அவற்றின் பாதுகாப்புக்கு உங்களால் உதவ முடியும். 

  • பிளாஸ்டிக் மாசுபாடு, ஆமைகள் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்களுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. எனவே பிளாஸ்டிக் பயன்படுத்துவதைக் குறைத்து சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை பயன்படுத்துங்கள். 

  • தன்னார்வலராக, கடற்கரையை சுத்தம் செய்வது மற்றும் பாதுகாப்பது போன்ற Campaign-களில் ஈடுபடுங்கள். நேரடியாக நீங்கள் ஆமைகளை பாதுகாக்க ஈடுபடுவது, அவற்றின் வாழ்விடங்களை நேரடியாக பாதுகாப்பதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நினைவிற் கொள்ளுங்கள். 

இந்த உலகம் என்பது அனைத்து உயிரினங்களுக்குமானது. மனிதர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி அனைத்தையும் கட்டுப்படுத்தி வாழ வேண்டும் என்பது முற்றிலும் தவறு. எனவே, உங்களால் முடிந்த அளவுக்கு இந்த உலக ஆமைகள் தினத்தில், ஆமைகளின் பாதுகாப்பில் பங்களிப்பீர்கள் என உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் ஒருவரிடம் ஏற்படும் மாற்றம், எதிர்காலத்தில் ரிப்பில் விளைவு போல பலரிடம் தொற்றிக்கொள்ளலாம். எனவே இன்று அதற்கான முயற்சிகளில் ஈடுபடவும். 

அனைவருக்கும் உலக ஆமைகள் தின நல்வாழ்த்துக்கள்! 

டென்னிஸ் உலகை ஆண்ட ரபேல் நடாலின் வெற்றிக் கதை!

செல்லப்பிராணி வளர்ப்பு முறையும் மழைக்கால பராமரிப்பு மற்றும் நன்மைகள்!

Book Review - The Thirteenth Child - by Erin A. Craig (2024)

சென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசு!

மைக்ரோ கீரைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு? சாகுபடி முறை இதோ!

SCROLL FOR NEXT