TNPL 2024 
விளையாட்டு

"12 ஆயிரம் ரூபாய் பந்து... எனக்கு தான் சொந்தம்..."- TNPL தொடரில் கலகல..!

தா.சரவணா

டிஎன்பிஎல் தொடரில் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் வீரர் சிக்ஸர் அடித்த பந்து மைதானத்திற்கு வெளியே சென்று விழுந்த நிலையில், அதனை தோட்ட உரிமையாளர் திருப்பி தராமல் தூக்கிக்கொண்டு ஓடிய சம்பவம் கலகலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

டிஎன்பிஎல் தொடர் தற்போது பிளே ஆப் சுற்றில் நெருங்கி இருக்கிறது. சுமார் 28 ஆட்டங்கள் முடிவடைந்த பிறகு தற்போது பிளே ஆப் சுற்றுக்கு கோவை, திருப்பூர், சேப்பாக், திண்டுக்கல் ஆகிய நான்கு அணிகள் தகுதி பெற்றிருக்கின்றன.

இதில் ஜூலை 31ஆம் தேதி எலிமினேட்டர் ஆட்டத்தில் சேப்பாக்கம், திண்டுக்கல் அணிகள் விளையாடின. இந்த நிலையில் திண்டுக்கல் அருகே நத்தத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மதுரை, சேப்பாக்கம் நேற்று முன்தினம் பலப் பரிட்சை நடத்தியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மதுரை அணி 20 ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. இதில் சுரேஷ் யோகேஸ்வர் 40 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். ஜெகதீசன் கௌஷிக் 24 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இதனை அடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி களம் இறங்கியது. இதில் சந்தோஷ்குமார் 36 பந்துகளில் 48 ரன்களும், நாராயன் ஜெகதீசன் ஆறு பந்துகளில் 10 ரன்களும், கேப்டன் பாபா அப்ரஜித் 7 பந்துகளில் 17 ரன்களும் எடுத்தனர். பிரதோஷ ரஞ்சன் பால் 37 பந்துகளில் 52 ரன்கள் எடுக்க சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் தான் எடுத்தது.

சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது வீரர் ஒருவர் அடித்த பந்து மைதானத்திற்கு வெளியே சென்று ஒரு தோட்டத்தில் விழுந்தது. நீண்ட நேரம் ஆகியும் அங்கிருந்து பந்து வராததால் விளையாட்டை படம் பிடித்துக் கொண்டிருந்த வீடியோ கேமராவின் கோணம் பந்து எங்கு சென்று விழுந்ததோ அங்கே திரும்பியது. அப்போது அங்கு இருந்த இளைஞர் ஒருவர் பந்தை எடுத்துக்கொண்டு நான் திருப்பி தர மாட்டேன் என கூறினார். உடனே கிரிக்கெட் வர்ணனையில் இருந்தவர்கள், "அது 12000 ரூபாய் பந்து, அதை திருப்பிக் கொடுத்து விடுங்கள்" என்று சிரித்துக்கொண்டே நேரலையில் கமெண்ட் செய்தனர். ஆனால் "பந்து எங்கள் தோட்டத்தில் வந்து விழுந்ததால் தரமாட்டோம்" என கூறி அந்த இளைஞர் பந்தை எடுத்துச் சென்றார். இதை பார்த்த வர்ணனையாளர், "அடப்பாவிகளா 12000 ரூபாய் பந்து போச்சு" என சிரித்தபடி அதையும் கமெண்ட் செய்தனர்.

ஆனால் அந்த இளைஞர் எதையும் கண்டு கொள்ளாமல் கடும் கோபத்துடன் லுங்கி மடித்துக்கொண்டு பந்துடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இது கிரிக்கெட் மைதானத்தில் சிரிப்பை ஏற்படுத்தியது.

90ஸ் கிட்ஸ்கள் தெருவில் கிரிக்கெட் ஆடும் போது பந்து யார் வீட்டிலாவது விழுந்தால் அவர்கள் தரமாட்டார்களோ, அதைப்போல் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரிலும் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்று இருப்பது அனைவரையும் சிரிப்பு மழையில் நனைய வைத்தது.

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT