mohsin naqvi 
விளையாட்டு

இந்தியாவை எங்களிடம் வந்து பேச சொல்லுங்கள் – பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

பாரதி

சாம்பியன்ஸ் ட்ராபியில் பாகிஸ்தான் வர இந்தியாவுக்கு ஏதாவது சிக்கல் இருந்தால் நேரடியாக எங்களிடம் பேசட்டும் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சாம்பியன்ஸ் ட்ராபி பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 29 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தானில் முதல்முறையாக சாம்பியன்ஸ் ட்ராபி நடைபெறவுள்ளது. இதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு பல நூறு கோடிகளையும் செலவிட்டுள்ளது.

50 ஓவர்க் கொண்ட இந்தத் தொடரில் மொத்தம் 8 அணிகள் மோதவுள்ளன. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எப்போதும் ஒரு சுமுகமான உறவு இல்லை என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம். இது ஒரு விளையாட்டு தானே என்றாலும் கூட, பாகிஸ்தானில் இந்திய அணியால் பதற்றம் இல்லாமல் விளையாட முடியாது என்பதை நாம் யோசித்தே ஆக வேண்டும்.

இன்னும் இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்புவதா? வேண்டாமா? என்ற முடிவை பிசிசிஐ எடுக்கவில்லை. கடந்த ஆண்டு ஆசிய கோப்பைத் தொடருக்கு கூட இந்திய அணி அங்கு செல்லவில்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. 

இப்படியான நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் தலைவர் இந்திய அணி இங்கு வரவில்லை என்றால், நாங்கள் இனி இந்தியா செல்ல மாட்டோம் என்பதுபோல பேசியிருந்தார். அந்தவகையில் தற்போது இந்திய அணி பாகிஸ்தான் வரவில்லை என்றால், நாங்களும் இந்தத் தொடரில் பங்கேற்க மாட்டோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு கூறியதாக கிரிக்கெட் வட்டாரத்தினர் கூறினர். இப்படி இந்த விவகாரம் ஒரு முடிவுக்கு வராமல் இருக்கும் நிலையில், தற்போது மீண்டும் பிசிபி ஒரு விஷயத்தைக் கூறியிருக்கிறது.

இதுகுறித்து பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி பேசியதாவது, “பாகிஸ்தானுக்கு வந்து விளையாடமாட்டோம் என்று இந்தியா கூறியதற்கு விளக்கம் கேட்டு ஐசிசிக்கு கடிதம் எழுதியுள்ளோம். பதிலுக்காக காத்திருக்கிறோம். விளையாட்டையும், அரசியலையும் தனித்தனியாக பார்க்க வேண்டும். எந்த நாடும் அவற்றை ஒன்றாக கலக்கக்கூடாது. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் விஷயத்தில் எல்லாமே சரியாக நடக்கும் என்று நம்புகிறேன். எங்களை பொறுத்தவரை பாகிஸ்தானின் கவுரவமும், மதிப்பும் மிகவும் முக்கியம்.

சாம்பியன்ஸ் ட்ராபியின் அனைத்து போட்டிகளையும் இங்கேதான் நடத்த வேண்டும். ஹைப்ரிட் முறையை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இங்கு வருவதற்கு மற்ற அணிகள் ஓப்புக்கொண்டுவிட்டது. அவர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை.

எனவே இந்திய அணிக்கு இங்கு வந்து விளையாடுவதில் ஏதாவது சிக்கல் இருந்தால், அவர்கள் நேரடியாக எங்களிடம் பேசட்டும். அவர்களின் கவலையை எங்களால் எளிதில் தீர்க்க முடியும். அவர்கள் இங்கு வராததற்கு எந்த காரணமும் இருப்பதாக தெரியவில்லை.” என்று பேசியுள்ளார்.

நிலவில் எரிமலைகளைக் கண்டுபிடித்த சீனா… எதிர்காலக் கனவு பலிக்குமா? 

தினமும் ஒரு கைப்பிடி வேகவைத்த வேர்க்கடலை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?

சமுத்திரத்தில் வாழும் அதிசய பாலூட்டி விலங்கு கடல் பசு!

சமூக மாற்றத்தில் பெண் தொழில் முனைவோரின் பங்களிப்பு!

இது மட்டும் தெரிந்தால், உங்க கார் இருக்கைகளைப் பார்த்தாலே பயப்படுவீங்க! 

SCROLL FOR NEXT