இந்திய, இங்கிலாந்த் அணியின் ஐந்தாவது டெஸ்ட் போட்டி, தர்மசாலாவில், நாளை (மார்ச் 7ஆம் தேதி) தொடங்குகிறது. இந்திய அணி, இந்த தொடரைக் கைப்பற்றியிருந்தாலும், உலகக் கோப்பையில் புள்ளிக் கணக்கில் முன்னேற, தர்மசாலா போட்டியில் வெற்றி வாகை சூடுவது உதவும்.
இந்தப் போட்டியில், தமிழ் நாட்டைச் சேர்ந்த சுழல்பந்து வீரர், இரவிச்சந்திரன் அஸ்வின், 100வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்று சாதனை படைக்க இருக்கிறார்.
உலக அளவில், 76 கிரிக்கெட் வீரர்கள் 100 டெஸ்ட் போட்டிகள் விளையாடியுள்ளார்கள்.
இந்தியாவைப் பொறுத்த வரை, இதுவரை 13 நபர்கள் 100 டெஸ்ட் போட்டிகளில் களம் இறங்கியுள்ளனர்.
தமிழ்நாடு இந்திய அணிக்கு, வெங்கட்ராகவன், ஸ்ரீகாந்த், டபிள்யூ.வி.இராமன், சிவராம கிருஷ்ணன் என்று பல கிரிக்கெட் வீரர்களை அளித்துள்ளது. இவர்களில், வெங்கட்ராகவன் 57 டெஸ்ட்களிலும், ஸ்ரீகாந்த் 43 டெஸ்ட்களிலும், இந்திய அணியில் பங்கேற்றியிருக்கிறார்கள்.
அஸ்வின், தமிழ்நாட்டிலிருந்து 100 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய முதல் வீரர் என்ற சாதனை படைக்க இருக்கிறார்.
இதுவரை, 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கும் அஸ்வின், 507 விக்கெட்டுகள், மற்றும் 3309 ரன்கள் எடுத்து, “ஆல் ரவுண்டர்” என்ற பெயர் எடுத்துள்ளார்.
தற்போதைய தொடரின், ராஜ்கோட்டில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் 500 டெஸ்ட் விக்கெட்டுகள் கைபற்றி, உலக அளவில், அதிக விக்கெட் எடுத்த பந்து வீச்சாளர்களில் 9வது இடத்தையும், இந்திய வீரர்களில் 2வது இடத்தையும் அடைந்துள்ளார்.
இதுவரை 41 தொடர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின், 10 முறைகள் தொடரின் நாயகன் விருது பெற்று, உலகத் தரத்தில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். முதல் இடத்தில் இருப்பவர், ஸ்ரீலங்காவின் முத்தையா முரளீதரன் – 11 முறைகள், 61 டெஸ்ட் தொடர்கள்.
இந்தியாவின் தொடரின் நாயகன் வரிசையில் அஸ்வின் முதலிடத்திலும், வீரேந்திர சேவாக் மற்றும் சச்சின் டெண்டுல்கர் 5 முறைகள் தொடர் நாயகன் விருது பெற்று இரண்டாவது இடத்திலும் இருக்கிறார்கள்.
டெஸ்ட் போட்டியில், ஒரு இன்னிங்க்ஸில் 35 முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தியும், போட்டியின் இரு இன்னிங்சிலும் சேர்த்து 8 முறை 10 விக்கெட்டுகள் எடுத்தும், உலகத் தர வரிசையில் 4வது இடத்திலும், இந்தியத் தரவரிசையில் முதல் இடத்திலும் இருக்கிறார்.
அஸ்வின் அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் வருகின்ற எஸ்.எஸ்.என். கல்லூரியில் பொறியியல் படித்தார். கிரிக்கெட் விஞ்ஞானி என்று முந்தைய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வர்ணனையாளர்களால் புகழப்படுகிறார்.
சூழ்நிலைக்கேற்ப, ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப பந்து வீசும் முறையை மாற்றிக் கொள்வதில் வல்லவர் அஸ்வின். கிரிக்கெட்டின் நுணுக்கங்களையும், சட்ட திட்டங்களையும் நன்கு அறிந்தவர்.
தடைகள் பல வந்தாலும், அவற்றை முறியடித்து, சாதனை படைக்கவிருக்கும் அஸ்வின் மேன்மேலும் முன்னேற வாழ்த்துவோம்.