பொதுவாக கேப்டன் கூல் என்று அழைக்கப்படும் தோனி, ஒருமுறை எந்தளவு கோபப்பட்டார் என்பதை அவருடன் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய சுப்பிரமணியம் பத்ரிநாத் பகிர்ந்துள்ளார்.
இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு பல முக்கியமான கோப்பைகளை நாட்டுக்காக பெற்றுத்தந்தவர் தோனி. அதேபோல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு ஐந்து முறை கப் வாங்கித் தந்தவர் தோனி. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இந்தியா முழுவதும் உள்ளனர். வெளிநாடுகளிலும் கூட இவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.
குறிப்பாக சென்னை அணி வீரர் என்பதால், இவர் தமிழ்நாட்டு மக்களின் செல்லப்பிள்ளை ஆவார். இவர் மைதானத்தில் என்ன நடந்தாலும், பொருமையை கடைப்பிடிப்பவர். ஆகையால், ரசிகர்கள் இவரை கூல் கேப்டன் என்றே அழைப்பார்கள். ஆனால். அவரும் மனிதர்தானே, அவருக்கும் கோபம், ஆக்ரோஷம் எல்லாம் இருக்கும்தானே. இவர் அவ்வளவாக கோபம் கொள்ள மாட்டார் என்றாலும், ஒரிருமுறை அம்பையரிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார். மற்றப்படி கோபத்தில் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை.
ஆனால், ஒருமுறை சிஎஸ்கே மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஒரு போட்டியில், சென்னை வீரர்கள் சரியாக ஆடாததால், தோனி அடைந்த கோபத்தை குறித்து பத்ரிநாத் பேசியிருக்கிறார்.
“அவரும் மனிதர் தான். அவரும் சில சமயங்களில் அமைதியை இழப்பார். ஆனால், அது எப்போதும் ஆடுகளத்தில் நடந்தது இல்லை. அவர் எப்போதுமே தான் அமைதி இன்றி இருப்பதை எதிரணிக்கு வெளிப்படுத்திக் கொள்ள மாட்டார். ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டி சென்னையில் நடைபெற்றது. நாங்கள் 110 ரன்களை ஒட்டிய இலக்கை நோக்கி ஆடிக் கொண்டிருந்தோம்.
நாங்கள் வரிசையாக விக்கெட்டுகளை இழந்து அந்தப் போட்டியில் தோல்வி அடைந்தோம்.
நான் அனில் கும்ப்ளே பந்து வீச்சில் ஒரு ஷாட் அடிக்க ஆசைப்பட்டு எல் பி டபிள்யூ முறையில் அவுட் ஆகிவிட்டேன். நான் ஓய்வறைக்குள் நின்று கொண்டிருந்தேன். அப்போது தோனி உள்ளே வந்தார். அங்கு ஒரு சிறிய வாட்டர் பாட்டில் இருந்தது. தோனி அதை எட்டி உதைத்தார். அந்த பாட்டில் பறந்து சென்று விழுந்தது. நாங்கள் அவரது கண்ணை பார்க்க கூட பயந்தோம். ஆனால், அவ்வளவுதான். அவர் அதன் பின் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதுதான் தோனி." என்றார்.
கூல் கேப்டன் அன்று வார்ம் கேப்டனாக இருந்த தருணம்.