டையமண்ட் லீக் சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் போட்டியில், ஒலிம்க் மற்றும் உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, பட்டத்தை தக்கவைத்துக்கொள்ள தவறினார். 83.80 மீட்டர் தொலைவு ஈட்டி எறிந்த அவருக்கு இரண்டாம் இடமே கிடைத்தது.
25 வயது இளைஞரான நீரஜ் சோப்ரா கடந்த மாதம் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார். ஆனாலும் அவரால் டையமண்ட் லீக் போட்டியில் பட்டத்தை தக்கவைக்க முடியவில்லை.
இரண்டு முறை தவறு (ஃபெளல்) செய்த அவர் அடுத்து 83.80 மீட்டர் தொலைவு வீசி இரண்டாம் இடத்தையே பெற்றார். 85 மீட்டருக்கும் குறைவாக நீரஜ் ஈட்டி எறிந்துள்ளது இதுவே முதல் முறையாகும்.
டையமண்ட் லீக் போட்டிக்கான தகுதிப் போட்டியில் அவர் மூன்றாவது இடத்தை பிடித்தார். 2022 இல் ஜூரிச்சில் நடைபெற்ற போட்டியில் 88.44 மீட்டர் தொலைவு ஈட்டி எறிந்து அவர் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் செக் குடியரசு வீரரான ஜேகப் வட்லெஜெக் 84.24 மீட்டர் தொலைவு ஈட்டி எறிந்து முதலிடத்தை பிடித்து சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். டையமண்ட் லீக் பட்டத்தை அவர் வெல்வது மூன்றாவது முறையாகும்.
இந்த போட்டியில் பின்லாந்தைச் சேர்ந்த ஆலிவர் ஹெலாண்டர் 83.74 மீட்டர் தொலைவு ஈட்டி எறிந்து மூன்றாவது இடத்தைப் பெற்றார்.
இரண்டு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற ஆண்டர்ஸன் பீட்டர் 74.71 மீட்டர் தொலைவுதான் ஈட்டி எறிந்தார். அவருக்கு கடைசி இடமே கிடைத்தது.