Afghanistan cricket player Rashid khan
Afghanistan cricket player Rashid khan 
விளையாட்டு

அகதியாக தன் கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கிய ஆப்கான் வீரர் ரஷீத் கான் பற்றி தெரியுமா?

பாரதி

துயரம் துரத்தும் தேசங்களில் ஒன்றாக உள்ளது ஆப்கானிஸ்தான். நேற்றுகூட அந்நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை தொட்டுள்ளது. பஞ்சம், பசி, வறுமை, போர்,இயற்கை பேரிடர், தலிபான் ஆட்சி என ஆப்கானிஸ்தான் சந்திக்காத விஷயங்களே இல்லை என்று சொல்லலாம். அப்படிப்பட்ட ஒரு தேசத்தில் இருந்து இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கலந்துக்கொள்ள வந்திருக்கிறார்கள் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்.

அவர்களில் குறிப்பாக ஆப்கானிஸ்தான் போரால் பாகிஸ்தான் அகதியாக தன் கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கியவர்தான் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான். வலதுகை துடுப்பாட்ட வீரர் மற்றும் வலதுகை சுழற் பந்துவீச்சாளரான ரஷீத் கான் 1998ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் உள்ள நாங்கர்கர் என்ற இடத்தில் பிறந்தார். 2016ம் ஆண்டு அபுதாபியில் நடந்த இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் அறிமுக ஆட்டத்தைத் தொடங்கினார்.

அகதி முதல் தேசிய அணி வீரர் வரை:

மற்ற நாடுகள் அசுர வளர்ச்சியை நோக்கி ஓடி கொண்டிருக்கும்போது போரை மட்டும் சந்தித்து வளர்ச்சியே தெரியாமல் ஒரு நாடு இருந்தது என்றால் அது ஆப்கானிஸ்தான்தான். முதலில் ஆப்கானிஸ்தானிற்கு வெகுகாலம் வரை கிரிக்கெட் போட்டி என்றால் என்ன என்றே தெரியாமல் இருந்தது. போர் சூழலில் இருந்து தப்பிக்க அங்கிருந்த மக்கள் பல நாடுகளுக்கு தஞ்சம் கேட்டு சென்றனர். அப்படிதான் பிற நாடுகளில் தஞ்சம் அடைந்த ஆப்கான் குழந்தைகள் அங்கு விளையாடப்பட்ட கிரிக்கெட் விளையாட்டை மீண்டும் தங்கள் சொந்த நாட்டிற்கு சென்றபோது அறிமுகப்படுத்தினார்கள்.

அப்படிப்பட்ட போர் சூழ்நிலையில்தான் ஆப்கானிஸ்தானை விட்டு பாகிஸ்தானிற்கு அகதியாக தன் குடும்பத்துடன் சென்றார் ரஷீத் கான். ரஷீத் கானுடன் 6 சகோதரர்கள் 4 சகோதரிகள் என கிரிக்கெட் அணியில் இருப்பதுபோன்ற 11 பேர் கொண்ட குடும்பத்தை கொண்டிருந்தார் அவர். பாகிஸ்தானில் அகதியாக இருந்ததால் வீட்டை விட்டு வெளியேவராமல் தனது அண்ணன்களுனடையே டெட் பந்தை வைத்து கிரிக்கெட் விளையாடுவார். வயதிற்கு ஏற்றாற்போல் பேட்டிங் செய்வதால் கடைசியாக பிறந்த இவருக்கு எப்போதும் பவுலிங்கே தரப்படும். இவர் பேட்டிங் செய்வதற்கு முன்னர் ஆட்டமே முடிவுக்கு வந்துவிடும். அதுவும் அவர் வைத்திருந்தது டெட் பந்து என்பதால் எப்படி வேகமாக போட்டாலும் மெதுவாகத்தான் செல்லும்.

இதனாலையே அவர் வெவ்வேறு விதமாக பந்தைப் போட ஆரம்பித்தார். ஆனால் அப்போதும் பேட்டிங் செய்ய இவருக்கு வாய்ப்பு கிடைக்காததால் குழந்தை ரஷீத் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி எப்படியாவது அனைவரையும் அவுட் ஆக்கிவிட வேண்டும்மென்றே பவுலிங் ஸ்டைல் அத்தனையுமே தனது பத்து வயதிலையே கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். தனது பவுலிங்கால் அண்ணன்கள் அனைவரையும் தோற்கடித்த இவர் தனது முதல் பேட்டிங்யின்போது பந்தை சுழற்றுவதுபோல் மட்டையை சுழற்றிக்கொண்டிருந்தார்.

ரஷீத்திற்கு கிரிக்கெட் விளையாட்டின் மீது ஆசை வருவதற்கு முக்கிய காரணம் அவருடைய அண்ணன்தான். அம்மாவின் சம்மதமில்லாமல் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த ரஷீத்திற்கு அவர் அண்ணன்தான் கிரிக்கெட் மட்டை, பந்து போன்றவற்றை அம்மாவிற்கு தெரியாமல் வாங்கி தந்து உதவியாக இருந்துள்ளார்.

போர் முடிந்து ஆப்கானிஸ்தான் திரும்பியது ரஷீத் கானின் குடும்பம். சொந்த நாட்டிற்கு திரும்பி பின்பும் தனது கிரிக்கெட் பயிற்சியை தொடர்ந்தார் ரஷீத் கான். தன்னுடைய திறமையால் ரஷீத் கானுக்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் இடம்கிடைத்தது. ஆனால், அணியின் தன்னுடைய திறமையை நிரூபிக்க ரஷீத் கானுக்கு கால அவகாசம் தேவைப்பட்டது. அதுவரை அணியில் உள்ளவர்களுக்கு தண்ணீர் கொடுக்கும் வாட்டர் மேனாகவே இருந்தார்.

Afghanistan cricket player Rashid khan

நொந்து போய் அண்ணனை அழைத்து பேசினால் ”கிரிக்கெட்டல்லாம் போதும் படிக்கிற வழியை பார்” என்று ஒரேப்போடில் ரஷீத்தின் மொத்த நம்பிக்கையையும் அழித்துவிட்டார். இவரே இப்படியென்றால் அம்மாவின் பேச்சை கேட்கவா வேண்டும் என்று விரக்தி மனநிலையில் தன் அம்மாவுக்கு போன் செய்தார் ரஷீத் கான். ஆனால் தொலைபேசியின் மறுமுனையில் வந்த பதில் வேறுவிதமாக இருந்தது.

“இன்னும் நூறு முறை தோற்றாலும் முயற்சி செய்.. திரும்ப வராதே!!”. அதிர்ந்து போய் நின்ற ரஷீதிற்கு அப்போதுதான் தெரிந்தது, தான் விளையாடுவது அம்மாவுக்கு பிடிக்காமல் இல்லை. அகதியென்றால் வெளியே வந்தாலே உயிருக்கு உத்திரவாதம் இல்லை, என்ற பயம் தான் அம்மாவின் சொற்களுக்கு அப்போது வேலி போட்டுள்ளது என்று எண்ணிக்கொண்டு தனது இலட்சிய வேட்டையை ஆரம்பித்தார் ரஷீத்.

பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த 19 வயதுக்குட்பட்ட போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியிலிருந்து ரஷீத் களமிறங்கினார். அப்போட்டி நேரலையில் ஒளிப்பரப்பட்டது. அதில் தனது குடும்பத்தினருக்கு முதல்முறை பேட்டை பிடிக்கும்போது எப்படி பந்தை சுழற்றுவதுபோல் சுழற்றினாரோ அதேபோல் 64 ரன்கள் எடுத்து பேட்டை சுழற்றி தனது சகோதரர்களுக்கு ”நான் பேட்டிங்கிலும் அசத்துவேன்” என்று தனது தெரிவித்தார் ரஷீத் கான். அகதியாக பசியோடு இருந்த அவர்களின் முழு பசி அந்த நாளில்தான் தீர்ந்தது.

இதன்பின்னர், ரஷீத் கானின் கிரிக்கெட் வாழ்க்கை சிக்ஸ்ர்களை நோக்கி வீசப்படும் பந்துகளை போல் உயர பறக்கத் தொடங்கியது. தனது முதல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியை 2015ம் ஆண்டு தொடங்கிய ரஷீத் கான், அந்த போட்டியில் ஜிம்பாப்வே எதிர்த்து ஆடினார். அதன்பின்னர், உலககோப்பை டி20 போட்டியிலும் அவர் ஜிம்பாப்வே எதிர்க்கொண்டார்.

2017ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், ஹைத்ராபாத் அணியின் சார்பில் நான்கு கோடி ஏலத்தில் எடுக்கப்பட்டார். இதன்மூலம் இந்திய ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார் ரஷீத் கான்.

Afghanistan cricket player Rashid khan

2018 ம் ஆண்டு பவுலர்ஸ் பாயின்ட்ஸ் பட்டியலில் முதல் இடத்தைப்பிடித்தார். 2019 ம் ஆண்டு பங்களாதேஷை எதிர்த்து நடந்த டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு கேப்டனாக அணியை வழிநடத்தினார். அப்போது ரஷீத் கானுக்கு இருபது வயதுதான்.

ரஷீத் கான் இதுவரை ஆடிய அனைத்து போட்டிகளும் சேர்த்து மொத்தம் 890 விக்கெட்டுகளும் மற்றும் 3 ஆயிரத்து 707 ரன்களும் எடுத்துள்ளார். ஆப்கானிஸ்தான் அணியின் பெரும் பலமாக எல்லா போட்டிகளிலும் சற்றும் ஓய்வின்றி தனது முத்திரையைப் பதித்து வருகிறார் ரஷீத் கான்.

தேனுடன் லவங்கப்பட்டை சேர்ந்து வழங்கும் 11 அற்புதப் பலன்கள்!

சிவபெருமானை எந்த மலர் கொண்டு வழிபட என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?

கனமழையின் போது ஏசி பயன்படுத்தலாமா? நன்மைகளும், தீமைகளும்! 

நதியின் நடுவில் ஈரக் கருவறை உள்ள கோயில் எது தெரியுமா?

ஒருவர் ஏன் கட்டாயம் மருத்துவக் காப்பீடு எடுக்க வேண்டும்? வாங்க தெரிஞ்சுக்கலாம்!

SCROLL FOR NEXT