ருத்துராஜ் கெயிக்வாட் மஹாராஷ்திராவில் 1997ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி பிறந்தார். இவர் 2003ம் ஆண்டு இந்தியாவில் உள்ள நேரு கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இடையே நடைபெற்ற போட்டியை காண சென்றிருந்தார்.
அப்போட்டியில் நியூசிலாந்து அணி வீரர் Brendon Mccullum பேட்டிங் பார்த்து வியந்துப்போன ருத்துராஜ் தானும் ஒரு கிரிக்கெட்டர் ஆக வேண்டும் என்று முடிவு செய்தார்.
அதனைத்தொடர்ந்து, தனது 10 வயதிலிருந்து கிரிக்கெட் விளையாடி வரும் இவர், 2016ம் ஆண்டு ரஞ்சி டிராஃபி தொடரில் மஹாராஷ்திரா அணியில் அறிமுகமானார். பின்னர் 2017ம் ஆண்டில் விஜய் ஹசாரே ட்ராஃபியில் அறிமுகமானார். தனது முதல் அறிமுக தொடரிலேயே 444 ரன்கள் அடித்து தனது சாதனைப் பயணத்தைத் தொடங்கினார்.
அந்த தொடரிலேயே மூன்றாவது அதிக ரன்கள் எடுத்த சாதனையைப் படைத்து அனைவரின் கவனத்தை அவர் பக்கம் திசைத்திருப்பினார் . அடுத்தடுத்த இவரின் விறுவிறுப்பான விளையாட்டால் 2019ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அடிப்படை தொகையில் ஏலம் எடுக்கப்பட்டார்.
ஆனால் இவருக்கு அணியில் விளையாடும் வாய்ப்பு முதல் முதலில் 2021ம் ஆண்டுத்தான் கிடைத்தது. அந்த முதல் தொடரிலேயே 635 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பி வாங்கி சென்னை அணி வெற்றிப்பெற முக்கிய காரணமானார்.
இதனைத் தொடர்ந்து இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் களத்தில் இறங்கி விளையாடும் வாய்ப்பு அதிகமாக கிடைக்கவில்லை. இதுவரை 9 சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.
இதனையடுத்து, சென்ற ஆண்டு 2022-2023 ம் ஆண்டிற்கான விஜய் ஹசாரே டிராஃபியில் ஒரே ஓவரில் 42 ரன்கள் எடுத்து கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சர்ய கடலில் மூழ்கடிக்க செய்தார். ஆம்! அந்த ஒரு ஓவரில் மொத்தம் 7 சிக்ஸர்கள் அடித்தார். அதாவது, ஓவரில் ஐந்து பந்துகள் சிக்ஸர் அடித்தார். பின்னர் ஒரு நோ பால் மற்றும் ஒரு ஃ ப்ரி ஹிட் ஆகிய இரண்டிலும் இரண்டு சிக்ஸர்கள் என மொத்தம் 7 சிக்ஸர்கள் அடித்து பெரிய சாதனையைப் படைத்தார்.
என்னத்தான் இவர் பல சாதனைகளைப் படைத்து வந்தாலும் சில கிரிக்கெட் அரசியல் வியூகத்தால் இந்திய அணியில் தொடர்ந்து விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், இப்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவை எதிர்த்து இந்தியா விளையாடும் டி20 தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டார் ருத்துராஜ். நேற்று நடைபெற்ற 3வது போட்டியில் ருத்து வெரும் 57 பந்துகளில் 123 ரன்கள் எடுத்து அடுத்த மாபெரும் சாதனையைப் படைத்துள்ளார்.
இதுவே ஒரு இந்திய வீரர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு டி20 தொடரில் சதம் அடித்தது முதல்முறை. இந்திய வீரர்களில் ருத்துராஜ் சதம் அடித்தோர் பட்டியலில் ஒன்பதாம் இடத்தைப் பிடித்துள்ளார். அதேபோல் இந்திய வீரர்களில், டி20 தொடர்களில் 123 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். முதல் இடத்தில் சுப்மன் கில் 126 ரன்களுடன் உள்ளார்.
மேலும், கடைசி மூன்று ஓவர்களில் 52 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார். 56 ரன்களுடன் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் முதல் இடத்தில் உள்ளார். இளம் வீரர் ருத்துராஜின் இந்த தொடர் சாதனைகளால் அவரை ‘சாதனை நாயகன் ‘என்றே அழைக்க வேண்டும் . பாராட்டு மழையில் நனைந்துக்கொண்டிருக்கும் ருத்து இப்போது தனக்கென பெரிய ரசிகர் கூட்டத்தை சேர்த்துக்கொண்டார்.