ஐபிஎல் தொடருக்குப் பின்னர் வரும் டி20 உலககோப்பை போட்டியில் விராட் கோலியை பிசிசிஐ தேர்ந்தெடுக்காது என்று எழுதிய பிரபல நாளிதழ் ஒன்றுக்கு விராட் இல்லாமல் இந்திய அணிக் கோப்பையை வெல்லவே முடியாது என முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் நச்சென்று பதில் அளித்துள்ளார்.
20 அணிகள் மோதும் டி20 உலககோப்பை ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. இந்தத் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது. இதற்கான மைதானங்கள் மற்றும் அட்டவணைகள் போன்றவை ஏற்கனவே வெளியிடப்பட்டன.
இந்த உலககோப்பைத் தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை ஜுன் 5ம் தேதி அயர்லாந்து அணியுடன் மோதவுள்ளது. அதேபோல் பாகிஸ்தான் அணியுடன் ஜூன் 9ம் தேதித் தனது இரண்டாவது ஆட்டத்தை எதிர்கொள்ளப் போகிறது.
இதனையடுத்து டி20 உலககோப்பையில் இந்திய அணி ரோஹித் ஷர்மா தலைமையில் விளையாடும் என்று பிசிசிஐ அறிவித்தது. இதனிடையே ஒரு நாளிதழில் டி20 உலககோப்பைத் தொடரில் விராட் கோலியைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பில்லை எனவும் அவருடன் தேர்வு குழுத் தலைவர் அஜித் அகர்சர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
இதனையடுத்து இது ஒரு பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் விராட் கோலிதான் உலககோப்பைத் தொடரின் போஸ்டர் பாயாக இருந்து வருகிறார். அமெரிக்க ரசிகர்களும் விராட் கோலியின் விளையாட்டை நேரில் பார்க்க வேண்டுமென்று ஆசை தெரிவித்திருப்பதாக இணையத்தில் பரவலாகப் பேசப்பட்டது.
இதனையடுத்துதான் இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் இதுகுறித்து கருத்து ஒன்றைத் தெரிவித்திருக்கிறார். அதாவது, விராட் கோலி இல்லாமல் இந்திய அணியால் உலககோப்பைத் தொடரில் பயணிக்கவே முடியாது. அவர் கட்டாயமாக இந்திய அணியில் தேர்வு செய்யப்பட வேண்டும். 2022ம் ஆண்டு இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற முதல் காரணமே விராட் கோலிதான்.
அதேபோல் இந்தியாவில் சென்ற ஆண்டு நடந்த ஒருநாள் உலககோப்பையில் தொடர் நாயகன் ஆனவர் விராட் கோலி. இந்திய அணி உலககோப்பையில் வெற்றிபெற வேண்டுமென்றால் கட்டாயம் விராட் கோலி இருந்தால் தான் உண்டு. சில விமர்சகர்கள் எதன் அடிப்படையில் இவ்வாறு தகவல்கள் கூறுகிறார்கள் என்பது தெரியவேயில்லை.” என்று யூட்யூப் சேனல் ஒன்றில் கருத்துத் தெரிவித்தார்.