பலமான அர்ஜென்டினா அணியை சவுதி அரேபியா வென்றதைக் கொண்டாடும் விதமாக தன் நாடு முழுதும் ஒருநாள் தேசிய விடுமுறை அறிவித்து சவுதி மன்னர் உத்தரவிட்டார். தவிர வெற்றி பெற்ற சவுதி அரேபிய வீரர்கள் ஒவ்வொருவருக்கும் விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசாக வழங்கப்பட உள்ளது என்றும் அந்நாட்டின் இளவரசர் முகமது பின் சல்மான் அல் சவுத் அறிவித்துள்ளார். ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலை சுமார் பத்து கோடி ரூபாய்.
எனினும் ஒரு அரபு நாடு மிகப்பிரபலமான ஒரு ஐரோப்பிய அணியை வெற்றி கொள்வது என்பது இது முதல் முறை அல்ல. 1982 உலக கோப்பையிலேயே இது நடந்துவிட்டது. அதன் தொடக்க நாளில் மேற்கு ஜெர்மனி அணியும் அல்ஜீரியா அணியும் மோதின. அனைவரின் எதிர்பார்ப்புக்கும் மாறாக மேற்கு ஜெர்மனி அணியை அல்ஜீரியா இரண்டுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. உலக சரித்திரத்திலேயே மிகவும் அதிர்ச்சி தரத்தக்க போட்டி என்று இது அப்போது விவரிக்கப்பட்டது.
ஆனால் அதே உலகக்கோப்பை போட்டியில் நடைபெற்ற மற்றொரு பந்தயம் மேலும் அதிர்ச்சியைத் தந்தது. .
ஒரே பிரிவில் ஆஸ்திரியா, அல்ஜீரியா, மேற்கு ஜெர்மனி, சிலி ஆகிய அணிகள் இடம்பெற்றிருந்தன. ஒவ்வொரு அணியும் பிற மூன்று அணிகளுடன் மோத வேண்டும். இறுதியில் அதிக பாயிண்ட் எடுத்த இரண்டு அணிகள் அடுத்த சுற்றுக்குச் செல்லும்.
இந்த நிலையில் அந்தப் பிரிவின் இறுதி ஆட்டமாக மேற்கு ஜெர்மனியும் ஆஸ்திரியாவும் மோதின. இதை அந்த இரு அணிகளைவிட அல்ஜீரியா அதிக பதற்றத்துடன் கவனித்துக் கொண்டிருந்தது.
மேற்படி போட்டியில் ஆஸ்திரிய அணி வென்றால் மேற்கு ஜெர்மனி அடுத்த சுற்றுக்கு செல்லும் தகுதியை இழந்து விடும். ஏனென்றால் அல்ஜீரியா மற்றும் ஆஸ்திரியா ஆகிய அணிகளிடம் மேற்கு ஜெர்மனி ஏற்கனவே தோற்று விட்டிருந்தது. இரண்டாவது இடத்தில் உள்ள அல்ஜீரியா அடுத்த சுற்றுக்குத் தேர்வாகி விடும்.
மாறாக மேற்கு ஜெர்மனி ஆஸ்திரியா மோதலில் மேற்கு ஜெர்மனி வென்றுவிட்டால், அதுவும் அது மூன்று கோல்களுக்கும் அதிகமாக எடுத்துவிட்டால் மேற்கு ஜெர்மனியும் அல்ஜீரியாவும் அடுத்த சுற்றுக்கு சென்று விடும். மாறாக இரண்டு அல்லது அதை விடக் குறைவான கோல் கணக்கில் மேற்கு ஜெர்மனி வென்றால் அந்த அணியும் ஆஸ்திரியாவும் அடுத்த சுற்றுக்கு தேர்வாகிவிடும்.
இந்த நிலையில்தான் மேற்கு ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா மோதலை அல்ஜீரியா மிகவும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தது. ஆனால் ஜெர்மனி அணியும் ஆஸ்திரேலிய அணியும் ஒன்றுக்கொன்று பேசி வைத்துக்கொண்டு போட்டியில் கலந்து கொண்டன. ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே மேற்கு ஜெர்மனி ஒரு கோலை எடுத்தது. அதற்குப் பிறகு இரு அணிகளும் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக அலைக்கழித்துக் கொண்டிருந்தன தவிர கோல் போடுவதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. ஆக மேற்கு ஜெர்மனி அணி 1-0 கோல் கணக்கில் வென்றது. அடுத்த சுற்றுக்கு அல்ஜீரியாவால் தேர்வாக முடியவில்லை.
போட்டியை கவனித்துக்கொண்டிருந்த விமர்சகர்கள் கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். ஆஸ்திரியாவில் பலரும் தங்கள் டிவி செட்களை அணைத்து விட்டார்கள். என்றாலும் சட்டப்படி எந்த சட்ட மீறலும் நேரவில்லை என்பதால் கால்பந்து கூட்டமைப்பால் எந்த நடவடிக்கையையும் மேற்கு ஜெர்மனி அல்லது ஆஸ்திரியா மீது எடுக்க முடியவில்லை.
இதற்குப் பிறகு ஃபிஃபா தனது செயல்முறைகளில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தது.
ஒரு பிரிவில் உள்ள அணிகள் தங்களுக்குள்ளேயே நடக்கும் கடைசி இரு போட்டிகள் ஒரே நாளில் ஒரே சமயத்தில் நடக்கும்படி பார்த்துக்கொண்டது.
கடந்த இரு நாட்களில் –
நடப்பு சாம்பியன் பிரான்ஸை துனீஷியா 1-0 கோல் கணக்கில் வென்றது.
டென்மார்க் அணியை வென்ற ஆஸ்திரேலியா (0-1) ரவுண்டு 16 சுற்றுக்கு முன்னேறியது.
இங்கிலாந்து அணி வேல்ஸ் அணியை 3-0 கோல் கணக்கில் வென்றது.
அமெரிக்காவிடம் ஈரான் 0-1 கணக்கில் தோல்வியுற்றது.
போலந்தை வென்ற அர்ஜென்டினா ரவுண்டு 16 சுற்றுக்கு முன்னேறியது.
பெல்ஜியம் அணியை வென்ற குரேஷியாவும் ரவுண்டு 16 சுற்றுக்கு முன்னேறியது.
ரவுண்டு 16 சுற்றுக்கு முன்னேறிய மற்றொரு அணி மெரோக்கோ. கனடாவை 2-1 கோல் கணக்கில் வீழ்த்தி இதை சாதித்தது.
சவுதி அரேபிய அணி வென்றபோதிலும் ரவுண்டு 16 சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. சி பிரிவில் அர்ஜென்டினா 6 புள்ளிகள் எடுத்து முதலிடத்தைப் பிடித்தது. ஒவ்வொரு பிரிவிலும் இரண்டு அணிகள் ரவுண்டு 16 சுற்றுக்கு முன்னேறும். சி பிரிவில் இரண்டாமிடத்துக்கு போலந்து, மெக்சிகோ இரண்டும் போட்டியிட்டன. இரண்டு அணிகளுமே தலா 4 புள்ளிகள் எடுத்திருந்தன. என்றாலும் எடுத்த கோல்கள், அளித்த கோல்கள் கணக்கில் போலந்துதான் ரவுண்டு 16 சுற்றுக்கு முன்னேறியது.
***************