இந்திய அணி இலங்கை அணி மோதிய மூன்றாவது டி20 போட்டியில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வெறும் 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்பிறகு கேப்டன் சூர்யகுமார் யாதவ், யாரும் இதுவரை செய்யாத ஒரு விஷயத்தை செய்து அணியை வெற்றியடையச் செய்திருக்கிறார். ஏன்? தோனி கூட இதுவரை அப்படி செய்ததே இல்லை.
முதலில் இந்திய அணி 137 ரன்கள் எடுத்த நிலையில், இலங்கை அணி சேஸிங் செய்ய களமிறங்கியது. கடைசி இரண்டு ஓவர்களில் இலங்கை அணி வெறும் 9 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டது. இதனால், இலங்கை அணி வெற்றிபெற்றுவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அப்போது வேகப் பந்துவீச்சாளர்கள் அர்ஷ்தீப் சிங் மற்றும் முகமது சிராஜிக்கு தலா ஒரு ஓவர் மீதம் இருந்தன. ஆகையால், அவர்களே கடைசி ஓவர்களை வீசுவார்கள் என்று இந்திய ரசிகர்கள் கணித்தனர்.
ஆனால், அதற்கு நேர்மாறாக, ரிங்கு சிங் ஒரு ஓவர் வீசினார். இவர் இதற்கு முன்னர் பந்தே வீசவில்லை என்பதால், அனைவருக்கும் இது பேரதிர்ச்சியாக இருந்தது. ஆனால், ரிங்கு சிங் அந்த ஓவரில் மூன்று ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
கடைசி ஒரு ஓவரில் 6 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தது. சிராஜ் அந்த ஓவரில் பந்து வீசுவார் என்று எதிர்பார்த்த நிலையில், சூர்யகுமார் யாதவே அந்த ஓவரில் பந்துவீசி அடுத்தடுத்து அதிர்ச்சியை கொடுத்தார். அவர் கடைசி ஓவரில் இரண்டு விக்கெட்டுகள் எடுத்ததுடன், ஐந்து ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதையடுத்து இலங்கை அணி சரியாக 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து போட்டியை டை செய்தது.
இதனால், போட்டி சூப்பர் ஓவர் வரைச் சென்றது. இந்த ஓவரில் இந்தியா மிகச்சிறப்பாக செயல்பட்டது. சூப்பர் ஓவரை வீசிய வாஷிங்டன் சுந்தர் இரண்டு ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். இதை அடுத்து சூப்பர் ஓவரில் இந்தியா முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து வெற்றி பெற்றது.
எப்போதும் இதுபோன்ற வாழ்வா சாவா என்றச் சூழலில், கடைசி ஓவர்களில் வேகப்பந்துவீச்சாளர்களையே பந்துவீச வைப்பார்கள். ஆனால், தோனி அந்த ஃபார்மட்டை உடைத்து சுழற்பந்துவீச்சாளரை போட வைப்பார்.
இதுவரை பந்து வீசாத பகுதி நேர பந்து வீச்சாளரை கடைசி ஓவரில் எந்த கேப்டனுமே பந்து வீச வைத்ததே இல்லை. இதுபோல படங்களில்தான் நடக்கும். ஆனால், தற்போது சூர்யகுமார் யாதவின் இந்த தனித்துவமான திட்டம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதனால், சூர்யகுமார் யாதவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.