ஒருபுறம் உலகக் கோப்பை T20 போட்டிகள் அடுத்த கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜிம்பாப்வேக்கு எதிரான T20 போட்டிகளில் களமிறங்கவுள்ள இந்திய அணி வீரர்கள் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது BCCI எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். வாரியத்தின் கௌரவ செயலாளரான திரு ஜெய் ஷா வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் இதனை அறிவித்துள்ளார்.
இதன்படி வரும் ஜூலை மாதம் ஆறாம் தேதி ஜிம்பாப்வேயில் உள்ள ஹராரேவில் தொடங்க உள்ள இருபது ஓவர் போட்டிகளில், இந்திய அணி சார்பாக விளையாடும் பதினைந்து பேர்கொண்ட அணியின் கேப்டனாக சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தேர்வு செய்யப்பட்ட அணி வீரர்கள் வருமாறு - சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கைக்வாட், அபிஷேக் சர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரேல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் ரெட்டி, ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்ணோய், அவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார், மற்றும் துஷார் தேஷ்பாண்டே.
முழுவதும் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணிக்கு இந்த தொடர் ஒரு பெரும் வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருபது ஓவர் உலகக் கோப்பை தொடரில் பங்குபெற்ற வீரர்களில் சஞ்சு சாம்சன் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை தவிர மற்ற அனைவருக்கும்
ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை இளம் இந்திய வீரர்கள் முறையாகப் பயன்படுத்த வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த தொடரில் இரு அணிகளும் மொத்தம் ஐந்து போட்டிகள் விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆறாம் தேதி தொடங்கி பதினாலாம் தேதி வரை நடைபெற உள்ள போட்டிகள் அனைத்தும் ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் மதியம் ஒரு மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 4.30க்கு) துடங்குகிறது.
ரியான் பராக், அபிஷேக் சர்மா, நிதிஷ் ரெட்டி ஆகியோர் இந்திய அணிக்காக அறிமுக வீரர்களாகக் களமிறங்குகின்றனர். ஐபிஎல் போட்டிகளில் தங்கள் அணிக்காக இவர்கள் சிறப்பாக விளையாடினார்கள். இதனைத் தொடர்ந்து இவர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சுப்மன் கில் தலைமையில் செல்லும் இந்த இளம் இந்திய அணி சாதிக்குமா? பொறுத்திருந்து பார்க்கலாம்.