Test Match 
விளையாட்டு

லாராவின் 400 ரன்கள் சாதனை முறியடிக்கப்படுமா?

ரா.வ.பாலகிருஷ்ணன்

டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது அதிரடி ஆட்டத்தை ரசித்து விளையாடுகிறது இங்கிலாந்து அணி‌. இந்நிலையில் பிரையன் லாராவின் 400 ரன்கள் சாதனை விரைவில் முறியடிக்கப்படலாம் என வீரேந்திர ஷேவாக் தெரிவித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இப்போது காண்போம்.

டி20 போட்டிகள் நடைமுறைக்கு வந்த பிறகு, டெஸ்ட் போட்டிகளைக் கூட சில வீரர்கள் அதிரடியாக விளையாடி வருகின்றனர். அதிலும் குறிப்பாக இங்கிலாந்து அணி வீரர்கள் பலரும் அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்துள்ளனர். இதனால் சில போட்டிகளை வென்றாலும், பெரிய அணிகளுக்கு எதிராக தோல்வியைச் சந்திக்கின்றனர். சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடுங்கள் என்று முன்னாள் வீரர்கள் அறிவுரை கூறியும், எதனையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் அதிரடி வேட்டையைத் தொடர்கின்றனர்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இங்கிலாந்து அணியின் ஆட்டக்காரர் ஆலி போப், டெஸ்ட் போட்டியில் வெகு விரைவிலேயே ஒரே நாளில் 600 ரன்களை அடிப்போம் என்று தெரித்து இருந்தார். இருப்பினும், இது சாத்தியமா என கிரிக்கெட் விமர்சகர்கள் சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே, இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர ஷேவாக் டெஸ்ட் போட்டிகளில் அதிரடி ஆட்டம் குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

“நாங்கள் கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய காலத்தில் ஐபிஎல் போன்ற டி20 தொடர்கள் இல்லை. ஒருவேளை இருந்திருந்தால் பல வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும். அதோடு, அப்போதே டெஸ்ட் கிரிக்கெட்டை அனைத்து வீரர்களும் அதிரடியாக விளையாடி இருப்பார்கள். நான் டெஸ்டில் முச்சதம் அடிக்க 270 பந்துகளை எடுத்துக் கொண்டேன். ஒருவேளை எங்களது தொடக்க காலத்தில் ஐபிஎல் பொன்ற தொடர்கள் இருந்திருந்தால், அதே 270 பந்துகளில் 400 ரன்களுக்கும் மேல் அடித்திருப்பேன்.

முன்பெல்லாம் ஆஸ்திரேலியா அணி மட்டும் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓவருக்கு 4 ரன்ரேட்டில் விளையாடியது. ஆனால் இப்போது இங்கிலாந்து அணி ஓவருக்கு 5 ரன்ரேட் என்ற வீதத்தில் விளையாடி வருகின்றனர். இது மிகவும் வரவேற்கத்தக்கது. இதையே தான் ரசிகர்களும் விரும்புகின்றனர். டெஸ்டில் அதிகபட்சமாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாரா 400 ரன்களை எடுத்துள்ளார். இன்று வரை முறியடிக்கப்படாத இந்த சாதனையை, தற்போது விளையாடி வரும் வீரர்கள் இனிவரும் காலங்களில் முறியடிப்பார்கள். இங்கிலாந்து அணி இனிமேலும் தனது அதிரடி ஆட்டத்தை தொடர வேண்டும்.

அட்டாக்கிங் ஆட்டத்தை நாம் வெளிப்படுத்தும் போது, வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்பதை நான் எப்போதும் நம்புவேன். ஆகையால், யாரேனும் ஒருவர் டெஸ்ட் போட்டிகளில் அதிரடியாக விளையாட ஊக்குவித்தால் அதனை நாம் தாராளமாக ஏற்றுக் கொள்ளலாம்."

குறிப்பு: ஷேவாக்கின் மகன் தற்போது டெல்லி அணிக்காக யு-16 போட்டிகளில் விளையாடி வருகிறார். எதிர்காலத்தில் ஷேவாக்கைப் போல இவரும் இந்திய அணியில் கலக்குவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT