நாம் உண்ணும் உணவில் ஒரு நாளைக்கு ஆறு கிராமுக்கு அதிகமான உப்பை சேர்ப்பது ஆரோக்கியத்துக்கு பல வகைகளில் கேடு விளைவிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அதிகளவு உப்பு உடலுக்குள் சென்றால் அது இரத்தக் குழாய்களில் படிந்து உயர் இரத்த அழுத்தத்தை உண்டுபண்ணும். அதன் மூலம் இதய நோய் மற்றும் கிட்னியின் செயல்பாடுகளில் கோளாறு உண்டாவதற்கான வாய்ப்பு வரும். எனவே உப்பைக் குறைப்பது பல வகைகளில் உடலுக்கு நன்மை தரும். உப்பைக் குறைத்து உண்ண நாம் பின்பற்ற வேண்டிய 5 எளிய வழி முறைகள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.
* பாட்டில்களிலும் டப்பாக்களிலும் பேக் செய்து வரும் உணவுகளை வாங்கும்போது அவற்றின் மீது ஒட்டப்பட்டிருக்கும் லேபிள்களை நன்கு படிக்கவும். அவற்றின் மீது 'லோ சோடியம்' அல்லது 'உப்பு சேர்க்கப்படாதது' என்ற வாசகம் இருந்தால் அவை ஆரோக்கியத்துக்கு நல்லவை; வாங்கத் தகுந்தவை.
* எப்பொழுதும் வீட்டு சாப்பாட்டுக்கு முன்னுரிமை கொடுங்கள். வீட்டில் சமைக்கும்போது உப்பைக் குறைத்து சுவைக்கு இஞ்சி பூண்டு, லெமன் ஜூஸ், வினிகர் மற்றும் ஸ்பைஸஸ் சேர்த்து உணவின் சுவையை அதிகரிக்கச் செய்வதால் சோடியம் குறைபாடு தெரியாமல் போய்விடும்.
* எப்பொழுதும் பதப்படுத்திய உணவுகளுக்குப் பதில் ஃபிரஷ் உணவுகளையே உட்கொள்ளப் பழகுங்கள். காய்கறிகள், பழங்கள், மாமிசம் போன்றவற்றை பதப்படுத்தும்போது அவை நீண்ட நாட்கள் கெடாமலிருக்க அதிகளவு உப்பு சேர்ப்பதுண்டு. எனவே, குளிரூட்டப்பட்ட (Frozen), முன்பே பேக் பண்ணி பாட்டில்களிலும் டப்பாக்களிலும் அடைத்து வரும் உணவுகளைத் தவிர்த்துவிடுவது நலம்.
* சோயா சாஸ், கெச்சப் மஸ்டர்ட் சாஸ் போன்ற சாலட் ட்ரெஸ்ஸிங்ஸ் மற்றும் சுவையூட்டிகளில் சோடியம் அதிகம். இவற்றைக் குறைந்த அளவில் உபயோகிக்கலாம். அல்லது அவற்றில் 'குறைந்த அளவு சோடியம் சேர்த்து தயாரிக்கப்பட்டவை' என்ற வாசகம் இருந்தால் அவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம்.
* வீட்டு சமையலில் உப்பின் அளவை படிப்படியாகக் குறைத்து வந்தால் நாளடைவில் நம் நாக்கு குறைந்த அளவு உப்பின் சுவைக்குப் பழக்கப்பட்டுவிடும்.
‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’ என்றொரு பழமொழி உண்டு. உப்பே இல்லாமல் உணவை உண்ண வேண்டுமென எவரும் கூறவில்லை. அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளாமல் குறைத்து உண்ணவே அறிவுறுத்தப்படுகிறது. நாமும் அதையே பின்பற்றி ஆரோக்கியமுடன் வாழ்வோம்.