மழை மற்றும் குளிர் காலங்களில் மட்டுமின்றி, கோடை காலத்திலும் சிலருக்கு சளி மற்றும் இருமல் போன்ற நோய்கள் பிடித்துக் கொள்வதுண்டு. ஏ.ஸி. ரூமில் இருப்பது ஒத்துக்கொள்ளாமல் போவது மற்றும் வெளியில் செல்லும்போது சூட்டைத் தணிக்க கூல் ட்ரிங்க்ஸ் குடிப்பது போன்றவற்றை இதற்குக் காரணமாகக் கூறலாம். இதை குணமாக்க வீட்டிலேயே பின்பற்றக் கூடிய எளிய வைத்திய முறைகளை இந்தப் பதிவில் காணலாம்.
* ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் நீரை ஊற்றி அதிலிருந்து வெளியேறும் ஆவியை வாய் வழியே உள்ளே செலுத்தி மூக்கின் வழியே வெளியேற்றினால் மூக்கு மற்றும் நெஞ்சிலிருக்கும் சளி வெளியேறும்.
* வெதுவெதுப்பான நீரில் கல்லுப்பு சேர்த்து அந்த நீரால் வாயை நன்கு கொப்பளித்து உமிழ நெஞ்சில் அடைந்திருக்கும் கபம் நீங்கும்.
* ஒன்று அல்லது இரண்டு இலவங்கத்தை வாயில் அடக்கிக் கொள்வதும் நெஞ்சுச் சளி நீங்க உதவும்.
* இஞ்சி டீ குடிப்பதாலும் நெஞ்சுச் சளி நீங்கி, இருமல் குறைய வாய்ப்புண்டு.
* ஒருசில பூண்டுப் பற்களை மென்று தின்பதாலும் நெஞ்சுச் சளி நீங்கும்.
* கருப்பு மிளகுகளின் மேல் சிறிது தேனை ஊற்றிக் கலந்து அந்த மிளகை மெதுவாக மென்று விழுங்கினாலும் நெஞ்சில் நிற்கும் சளி நீங்கும்.
* விளக்கெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணையை லேசாக சூடு படுத்தி நெஞ்சில் மசாஜ் செய்தாலும் சளித் தொல்லையிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
மேற்கூறிய எளிய வழிமுறைகளைப் பின்பற்றி சளி மற்றும் இருமல் மூலம் வரும் அசௌகரியங்களை நீக்கி நலம் பெறலாம்.