பெண்களின் உடல் ஆண்களின் உடலைவிட பலவிதமான ஹார்மோன் மாற்றங்களை அனுபவிக்கிறது. இதனால் பெண்களுக்கு தனித்துவமான சில ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சில அறிகுறிகள் சாதாரணமானதுதான் என்றாலும், ஒரு சில அறிகுறிகளை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். இந்தப் பதிவில் பெண்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான சில ஆரோக்கிய அறிகுறிகள் பற்றி பார்க்கலாம்.
தொடர்ச்சியான சோர்வு: போதுமான ஓய்வு எடுத்தும் அதிக சோர்வாக இருந்தால் அது ரத்த சோகை, தைராய்டு பிரச்சனை அல்லது நீரிழிவு போன்ற மருத்துவ நிலையின் அறிகுறையாக இருக்கலாம்.
அசாதாரண எடை மாற்றம்: திடீரென எந்த காரணமும் இன்றி எடை குறைவது அல்லது அதிகரிப்பது ஹார்மோன் பிரச்சனைகள், உடல் சார்ந்த நோய்கள் அல்லது மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளின் அறிகுறியாக இருக்கலாம்.
வலி: நீடித்த முதுகு வலி, மூட்டு வலி அல்லது வயிற்று வலி போன்ற விளக்க முடியாத வலி மிகவும் மோசமானது. இது கீழ்வாதம், கிட்னி கற்கள் அல்லது புற்றுநோய் போன்ற பல்வேறு நிலைமைகள் காரணமாக ஏற்படலாம்.
மூச்சு விடுவதில் சிரமம்: திடீரென்று மூச்சுத் திணறல் அல்லது மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டால் அது இதய நோய், நுரையீரல் அடைப்பு அல்லது பிற தீவிரமான நிலைகளின் அறிகுறியாக இருக்கும். எனவே உங்களுக்கு மூச்சு விட சிரமமாக இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
மார்பு வலி: மார்பு வலி, மார்பில் அழுத்தம் அல்லது இறுக்கமான உணர்வு போன்றவை இதய நோயின் அறிகுறிகளாகும். குறிப்பாக பெண்களுக்கு இந்த அறிகுறிகள் வந்தால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
அசாதாரண ரத்தப்போக்கு: அதிகப்படியான மாதவிடாய் ரத்தப்போக்கு, சீரற்ற ரத்தப்போக்கு அல்லது மாதவிடாய் இல்லாதபோது ரத்தப்போக்கு போன்றவை ஹார்மோன் பிரச்சனைகள், கருப்பை கட்டிகள் அல்லது புற்றுநோய் போன்ற பிரச்சனைகளின் அறிகுறிகளாகும்.
மார்பக கட்டிகள்: மார்பகத்தில் புதிதாக ஏற்படும் கட்டிகள் அல்லது வீக்கங்களை உடனடியாக கவனிக்க வேண்டும். ஏனெனில் அவை மார்பக புற்று நோயாகக் கூட இருக்கலாம்.
சரும மாற்றங்கள்: திடீரென சருமத்தில் ஏதேனும் மாற்றங்கள், புள்ளிகள், மச்சங்கள் அல்லது புண்கள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும். அவை தோல் புற்றுநோயின் ஆரம்பக் கட்ட அறிகுறியாகும்.
ஒவ்வொரு பெண்ணும் தங்கள் உடலைப் பற்றி விழிப்புடன் இருந்து, திடீரென ஏற்படும் விளக்க முடியாத அறிகுறிகளை கவனிப்பது முக்கியம். மேலே குறிப்பிட்ட அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் அனுபவித்தால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள். இது உங்களது பாதிப்புகளை விரைவாகக் கண்டறிந்து சிகிச்சையளிக்க உதவும்.