இயற்கை நமக்கு கொடுத்த அற்புதமான கொடையில் மருதாணியும் ஒன்று. இது எண்ணற்ற ஆரோக்கிய பலன்களை தன்னுள் அடக்கி வைத்திருக்கிறது.
அந்த காலத்தில் புதிதாக நகை போட்டு கொள்வதைப் போல மருதாணி வைத்துக் கொள்வது அழகியலாக தான் இருந்தது. வீட்டில் விசேஷம் என்றால் அதற்கு முந்தைய நாள் இரவு மருதாணி வைத்தக் கைகளுடன் தூங்க போவார்கள். வீட்டு தோட்டத்தில் மருதாணி செடியில் இருந்து புதிதாக இலைகளை பறித்து கெமிக்கல்ஸ் இல்லாத 'மெஹந்தியை' கொண்டாடினார்கள்.
மருதாணியினால் கிடைக்கும் நன்மைகள்:
பிரச்சனைகளால் வரும் டென்ஷனைக் குறைக்கிற குணம் மருதாணிக்கு உண்டு. மருதாணி வாதங்கள் வராமல் இருக்கவும், அதனால் வருகிற வலியை நீங்கவும் உதவும்.
மருதாணி இலைக்கும் சரி, பூவுக்கும் சரி நமக்கு ஆழ்ந்த தூக்கத்தை தரும் சக்தி உண்டு. இரவில் தூக்கம் வராதவர்கள் மருதாணி பூங்கொத்தை தலையில் வைத்து கொள்ளலாம்.
சுகர் அதிகமாக இருப்பவர்களுக்கு நரம்புகள் சீக்கிரம் பலவீனமாகிவிடும். அதனால் பாதத்தில் பல வகையான வலிகள் ஏற்படும். காலில் இரத்த ஓட்டம் சரிவர இருக்காது. நீரிழிவு இருப்பவர்கள் மருதாணி இலையுடன் மஞ்சள் வைத்து அரைத்து கட்டை விரலில் தொடர்ந்து வைத்து வந்தால் கால்களில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
முற்காலத்தில் மருதாணி இலைகளை அரைத்து சிறு சிறு வறட்டிகளாகக் காய வைத்து தேங்காய் எண்ணெயில் பொரித்து எடுத்து அந்த எண்ணெயை தலையில் தேய்ப்பார்கள். இது இளநரையை வர விடாமல் தடுக்கும். இதை தான் இக்கால மக்கள் 'ஹென்னா பேக்' என்று தலையில் போடுகிறார்கள். இதில் அமோனியா சேர்ந்திருப்பதால் அலர்ஜி உள்ளிட்ட பிரச்சனைகள் வரும்.
மருதாணி வைக்கப்படுகிற இடங்களான நகங்கள் மற்றும் சருமத்தில் ஃபங்கல் இன்ஃபெக்ஷன் வராது. இது நம் விரல்களுக்கு ஒரு ஹெல்மெட் மாதிரி.
மருதாணி வைப்பதற்கு மிகவும் ஏற்ற இடங்கள் உள்ளங்கைகளும், உள்ளங்கால்களும் தான். உடலில் உள்ள அத்தனை நரம்புகளின் பிரதிபலிப்பு புள்ளிகளும் இந்த பகுதிகளில் இருப்பதால், இங்கே மருதாணி வைப்பதால் உடல் குளிர்ச்சி ஆகும்.
இரத்த ஓட்டம் சீராகும். இதய படபடப்பு, இரத்த அழுத்தம் இரண்டும் கன்ட்ரோல் ஆகும். ஸ்ட்ரெஸ் குறையும். மேலும் உடல் வெப்பம் தணியும்.
சிலருக்கு மருதாணி இட்டு கொண்டால் சளி பிடிக்கும். அதனால் மருதாணி இலைகளை அரைக்கும் போது கூடவே 7அல்லது 8 நொச்சி இலைகளை சேர்த்து அரைப்பார்கள்.
தீக்காயம் பட்ட இடத்தில் மருதாணி இலையை அரைத்து பூசி வந்தால் காயத்தில் இருக்கும் எரிச்சல் தன்மை மற்றும் வலி குறைந்து காயம் சீக்கிரம் ஆறுவதுடன் அழுத்தமான தழும்புகள் ஏற்படுவதையும் தடுக்கும்.
மருதாணி கழுத்திலும், முகத்திலும் ஏற்படும் கருந் தேமலுக்கு நல்ல கை மருந்தாகும். மருதாணி இலையுடன் சிறிது குளியல் சோப்பைச் சேர்த்து அரைத்து பூசிவர விரைவில் கருந்தேமல் மறையும். மருதாணி இலைகளை அரைத்து நகங்களுக்கு வைப்பதால் எந்த சரும நோய்களும் வராமல் பாதுகாக்கலாம்.
மருதாணி இலை கிருமி நாசினி ஆகும். கண்ணுக்கு புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது. நகசுத்தி வராமல் தடுக்கவும், புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து.